அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
மூக்கிலன் முன்காட்டும் முகுரம் ஆகாது எனைத்
தூக்கி அணைந்து அருள் அருணாசலா
மெய்யகத்தின் மன மென்மலர் அணையில் நாம்
மெய் கலந்திட அருள் அருணாசலா!
மேன்மேல் தாழ்ந்திடும் மெல்லியர்க் சேர்ந்து நீ
மேன்மை உற்றனை என் அருணாசலா
மை மயல் நீத்து அருள் மையினால் உனது உண்
மைவசம் ஆக்கினை அருணாசலா
மொட்டை அடித்தெனை வெட்ட வெளியில் நீ
நட்டம் ஆடினை என் அருணாசலா
மோகம் தவிர்த்து உன் மோகமா வைத்து என்
மோகம் தீராய் என் அருணாசலா
மெளனியாய்க் கல்போல் மலராது இருந்தால்
மௌனம் இது ஆமோ அருணாசலா
யவன் என் வாயில் மண்ணினை அட்டி
என் பிழைப்பு ஒழித்தது அருணாசலா
யாரும் அறியாது என் மதியினை மருட்டி
எவர் கொளை கொண்டது அருணாசலா
ரமணன் என்று உரைத்தேன் ரோசம் கொளாது எனை
ரமித்திடச் செயவா அருணாசலா
ராப்பகல் இல்லா வெறு வெளி வீட்டில்
ரமித்திடுவோம் வா அருணாசலா
லட்சியம் வைத்து அருள் அஸ்திரம் விட்டு எனைப்
பட்சித்தாய் பிராணனோடு அருணாசலா
லாபம் நீ இகபர லாபம் இல் எனை உற்று
லாபம் என் உற்றனை அருணாசலா
வரும்படி சொலிலை வந்துஎன் படி அள
வருந்திடு உன் தலைவிதி அருணாசலா
வாவென்று அகம் புக்கு உ ன் வாழ்வு அருள் அன்றே என்
வாழ்வு இழந்தேன் அருள் அருணாசலா
விட்டிடில் கட்டமாம் விட்டிடாது உனை உயிர்
விட்டிட அருள்புரி அருணாசலா
வீடு விட்டு ஈர்த்து உள வீடு புக்குப் பைய உன்
வீடு காட்டினை அருள் அருணாசலா
வெளிவிட்டேன் உன்செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா
வேதாந் தத்தே வேறு அற விளங்கும்
வேதப் பொருள் அருள் அருணாசலா
வைதலை வாழ்த்தா வைத்து அருட்குடியா
வைத்து எனை விடாது அருள் அருணாசலா
அம்புவில் ஆலிபோல் அன்பு உரு உனில் எனை
அன்பாக் கரைத்து அருள் அருணாசலா
அருணை என்று எண்ண யான் அருள் கண்ணி பட்டேன் உன்
அருள்வலை தப்புமோ அருணாசலா
சிந்தித்து அருள்படச் சிலந்திபோல் கட்டிச்
சிறையிட்டு உண்டணை அருணாசலா
அன்பொடு உன் நாமம் கேள் அன்பர்தம் அன்பருக்கு
அன்பன் ஆயிட அருள் அருணாசலா
என்போலும் தீனரை இன்புறக் காத்து நீ
எந்நாளும் வாழ்ந்து அருள் அருணாசலா
என்புருகு அன்பர்தம் இன் சொற்கொள் செவியும் என்
புன் மொழி கொள அருள் அருணாசலா
பொறுமையாம் பூதர புன்சொலை நன்சொலாப்
பொறுத்து அருள் இஷ்டம் பின் அருணாசலா
மாலையளித்து அருணாசல ரமண என்
மாலை அணிந்து அருள் அருணாசலா
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலம் வாழி அன்பர்களும் வாழி
அக்ஷர மணமாலை வாழி...
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய...............
No comments:
Post a Comment