அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில்
நாடி உட்கொள் நலம் அருணாசலா
நொந்திடாது உன்தனைத் தந்து எனைக் கொண்டிலை
அந்தகன் நீ எனக்கு அருணாசலா
நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா
பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள்
பற்றிட அருள்புரி அருணாசலா
பார்த்தருள் மால் அறப் பார்த்திலை எனின் அருள்
பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா
பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள்
பித்தம் தெளி மருந்து அருணாசலா
பீதி இல் உனைச் சார் பீதியில் எனைச்சேர்
பீதி உன் தனக்கு ஏன் அருணாசலா
புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை
புல்லிடவே அருள் அருணாசலா
பூமண மா மனம் பூரண மணம் கொளப்
பூரண மணம் அருள் அருணாசலா
பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன்
பெருமை யார் அறிவார் அருணாசலா
பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப்
பேயன் ஆக்கினை என் அருணாசலா
பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல்
பற்றுக் கோடாய்க் கா அருணாசாலா
பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன்
போதத்தைக் காட்டினை அருணாசலா
போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட்
போராட்டம் காட்டு அருணாசலா
பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன்
பவிசு கண்டுற அருள் அருணாசலா
மலைமருந்து இட நீ மலைத்திடவோ அருள்
மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா
மானங்கொண்டு உறுபவர் மானத்தை அழித்து
அபிமான மில்லாது ஒளிர் அருணாசலா
மிஞ்சிடில் கெஞ்சிடும் கொஞ்ச அறிவன்யான்
வஞ்சியாது அருள் எனை அருணாசலா
மீகாமன் இல்லாமன் மாகாற்று அலை கலம்
ஆகாமல் காத்தருள் அருணாசலா
முடி அடி காணா முடி விடுத்து அனைநேர்
முடிவிடக் கடனிலை அருணாசலா
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
அருணாசலசிவ அருணாசலசிவ
அருணாசலசிவ அருணாசலா!
No comments:
Post a Comment