சிவமயம்
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய
சிவார்ச்சனா சந்திரிகை
(தமிழ் மொழி பெயர்ப்பு)மங்கள வாழ்த்து
பரிபூரணமான சத்தியையுடைய எந்தப் பரம்பொருளினது ஒரு சிறு கூற்றிலே இந்த எல்லாப் பிரபஞ்சங்களும் அடங்கினவெனச் சிவாகமங்களை அறிந்தவர் கூறுகின்றனரோ, அத்தகைய, பச்சினை விருக்ஷத்தின் காந்திபோல் விளங்கும் கழுத்தையுடையவராயும், நாராயணியென்னும் சத்திக்கு நாயகராயுமிருக்கும் சிவபெருமான் பொருட்டு வணக்கம் செய்கிறேன்.
நூல்
சைவர்கள் அனுட்டிக்கவேண்டிய கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது, வைதிக முறையாயும், வைதிகத்தோடு கலந்த ஆகமமுறையாயும், தனி ஆகமமுறையாயுமிருப்பதால், சைவர்களுக்குச் சைவமுறை (ஆகமமுறை) மிகவும் கிரேஷ்டமானது. அந்தச் சிவபூஜையினுள்ளும் சத்தியின் கலப்பில்லாத சுத்த பூஜையினின்றும், கலப்புடைய சூரியன்முதலிய பூஜைகளினின்றும், சத்தியுடன் கூடிய சிவபூஜையானது போக மோக்ஷங்களைத் தரக்கூடியதாகையால் மிகவும் மேலானது. ஆகையால் அம்பிகையுடன் கூடச் சிவபெருமானைப் பூஜிக்கும் ஆன்மார்த்த சிவபூஜையை எல்லாத் திவ்வியாகமங்களிலிருந்தும் திரட்டிச்சுருக்கமாகக் கூறுகின்றேன்.
ஒவ்வொரு திவ்வியாகமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்து இவ்விடத்தில் திரட்டிக் கூறுதலால் பலவாகமஙகளின் கலப்பென்று சொல்லக்ககூடிய கலப்புத் தோஷம் நேரிடாதோவெனின், பலதிவ்யாகமங்களினுடைய பொருளின் கலப்பு இருப்பினும், ஒரே சிவசாத்திரமென்ற வொற்றுமைபற்றிக் கலப்புத் தோஷம் நேரிடாதென்க. பாசுபதாகமத்தின் பொருள்களைத் திவ்வியாகமங்களின் பொருள்களுடன் கலந்தாற்றான் அத்தோஷம் நேரும். வேண்டிய விடங்களில் ஒரு திவ்வியாகமத்தைச் சார்ந்து பல திவ்யாகமங்களின் பொருள்களையும் கொள்ளலாமென்னுங் கூற்றும் மனிதரால் பிரதிட்டை செய்யப்பட்ட இலிங்கங்களில் பொருந்துமேயல்லது சுயம்பு முதலிய லிங்கங்களிற்பொருந்தாது.
ஈசுவரனும் ஒரு ஆகமத்தை ஆதாரமாகக்கொண்டு அந்த ஆகமத்தின் பொருள்கள் சுருக்கமாக இருப்பின் விரிவான பாகத்தை வேறு ஆகமங்களினின்றும் எடுத்துக்கொள்ளலாமென்று கூறியுள்ளார். ஒரு திவ்வியாகமப்பொருளும் பிறிதொரு திவ்வியாகமப் பொருளும் ஈசுவரன் கூறினமைபற்றிச் சமமாகவிருப்பினும், பூஜைக்கு அங்கமாக எந்த ஆகமத்தைக் கொண்டிருக்கிறோமோ, அதுதான் கொள்ளத்தகுமல்லது பிறிதொரு திவ்வியாகமம் கொள்ளத்தக்கதன்று. ஆதலால் எல்லாத் திவ்வியாமங்களினின்றும் வேண்டிய பகுதிகளை மாத்திரம் எடுத்துச் “சிவார்ச்சனா சந்திரிகை” என்னும் நூலைச் செய்யத் தொடங்குகின்றேன்.
நூலின் சுருக்கம்
முன்னர் ஆசமனஞ்செய்து, விபூதி உருத்திராக்கங்களால் அலங்கரிக்கப்பெற்ற சரீரத்துடன் சகளீகரணஞ்செய்து, கிரமப்படி சாமான்னிய அருக்கியத்தை அமைத்துகொள்ளல் வேண்டிடும். பின்னர்ச் சிவபூஜைக்குரியவிடத்தைச் சுத்த வித்தியாசொரூபமாகத் தியானஞ்செய்து அந்த இடத்தின் தெற்கு வாயிலில் துவாரபாலர்களை முறைப்படி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர் பூமி, ஆகாசம், சுவர்க்கம் என்னும்மிடங்களிலுண்டான மூன்று விக்கினங்களையும் அந்தந்த முறையில் விலக்கிக்கொண்டு உள்ளே சென்று அஸ்திரம் முதலியவற்றின் பூஜையைச் செய்து சிவபூஜைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையுந் சேகரித்து சமீபத்தில் வைத்துக்கொள்ளல்வேண்டும். பின்னர் ஈசுவரனுக்கு வலது பாகத்திலாவது அக்கினிதிக்கிலாவது வடக்கு முகமாக விதிக்கப்பட்ட ஆசனத்திலமர்ந்து ஐந்து சுத்திகளையுஞ் செய்தல் வேண்டும். இவ்வாறு இந்நூலின் சுருக்கத்தை அறிந்து கொள்க.
நூலின் விரிவின் ஆரம்பம்.
வைகறைத் தியானம்
சூரியோதயத்திற்கு முன் இரண்டு முகூர்த்தம் அஃதாவது, ஐந்து நாழிகையிருக்கும்பொழுதே எழுந்து கைகால்களைக் கழுவிக்கொண்டு விபூதி தரித்து சமயதீ¬க்ஷயுடையவர்கள் இருதயத்திலும், விசேட தீ¬க்ஷயுடையவன் விந்துத்தானமான லலாடத்திலும், நிருவாணதீ¬க்ஷயுடையவன் சிரசிலும், போதகாசிரியரும் ஆசாரியாபிஷேகம் பெற்றுக்கொண்டவரும் துவாதசாந்தத்திலும் பரமேசுவரனைத் தியானிக்க வேண்டும். பின்னர் மனத்திற்கு இனிமையைத் தரும் சிவபிரானுடைய நாமங்களையும் சரித்திரங்களையும் சங்கீர்த்தனஞ்* செய்க. ( *சங்கீர்த்தனம் - நன்றாய்ச் சொல்லுதல். )
மலசலம் கழிக்குமுறை
உரியதான இடத்தையடைந்து சலநிவிர்த்தி மலநிவிர்த்திகள் செய்யவேண்டும். பகற்காலங்களிலும் சந்திகளிலும் வடக்குமுகமாகவும், இராக்காலங்களில் தெற்குமுகமாகவும் ஈருந்துகொண்டுதான் மலசல நிவிர்த்திகள் செய்யவேண்டும். அல்லது காலையில் கிழக்குமுகமாகவம், மாலையில் மேற்குமுகமாகவும், நடுப்பகலில் வடக்குமுகமாகவும், இரவில் தெற்குமுகமாகவும் இருந்துகொண்டு மலசல நிவிர்த்திகள் செய்யலாம். செய்யுங்காலத்தில் வெறும் வெளியிலிருந்துகொண்டாவது, மலசலங்களின் முன்னரிந்துகொண்டாவது, ஒரு திக்கைப்பார்த்துக்கொண்டாவது, சந்திரன், சூரியன், நக்ஷத்திரங்கள், அக்கினி என்னும் இவைகளினுடைய பார்வையிலிருந்துகொண்டாவது, தேவர்கள், பசுக்கள், முனிவர், வேதியர், பெண்கள் என்னும் இவர்களுக்கெதிர் முகமாகவிருந்துகொண்டாவது, செய்தலாகாது. செய்தபின் யாகத்திற்கு உபயோகப்படாத புல்விசேடங்களையாவது ஓடு முதலியவற்றையாவது கொண்டு, குதத்தைத்துடைத்தல் வேண்டும். நல்ல புட்பங்களாலும், இலைகளாலும், குச்சுகளாலும், பழங்களாலும், குதத்தைத் துடைத்தல் கூடாது. கையால் குறியைப் பிடித்துக்கொண்டு கீழ் நோக்கிய பார்வையுடையனாய்ச் சென்று நீரின் சமீபத்தையடைந்து மண்ணுடன் கூடின நீரால் சௌசம் செய்தல் வேண்டும். மண்ணோடுகூடிய நீரால் சுத்தஞ்செய்யும்பொழுது, குறியில் ஒருமுறை மண்ணாலும், குதத்தில் ஐந்துமுறை மண்ணாலும், இடதுகையில் பத்துமுறை மண்ணாலும், புறங்கையிலும் உள்ளங்கையிலும் ஆறுமுறை மண்ணாலும், இருகைகளில் ஏழுமுறை மண்ணாலும் சுத்தஞ் செய்யவேண்டும். புற்றுக்களிலும், மரஙகளின் அடிகளிலும், வீடு, வழி, நீர்நடு, கானற் பூமி, எலிப்பொந்து, பசுநிற்குமிடம், ஆலயம் என்னும் இவைகளிலும், நடைவாய்க்கால், கிணறு, தடாகம் என்னும் இவைகளின் கரைகளிலும், மணலுள்ள இடம், வீதி, மயானம் என்னுமிவற்றிலும், புழு, எலும்பு, உமி, அக்கினி என்னுவிற்றால் கேடுபெற்றவிடங்களிலும், புழுதியானவிடத்திலும், அன்னியர் சௌசஞ் செய்துள்ள விடங்களிலும், கலப்பைகளால் உழப்பெற்றவிடங்களிலும், சேறானவிடங்களிலும், சுக்கான்பாறைகளிலும், மண்ணெடுக்கலாகாது. சுத்தமான பூமியில் மேல்மணலை நீக்கிவிட்டு அதனுள்ளிருக்கும் மண்ணைத்தான் எடுக்கவேண்டும். இவ்வாறெடுக்கப்பட்ட மண்ணால், எவ்விதமாகச் சௌசசுத்தி போதுமானதாகத் தோன்றுமோ அவ்விதமாகக் குறைவின்றிச் சௌசசுத்தி செய்துகொள்ளல் வேண்டும். முன்னர் அரைப்பிடி மண்ணால் குதத்தைச் சுத்திசெய்யவேண்டும். பின்னர் அதிலும் பாதியளவான மண்ணால் சுத்தஞ் செய்யவேண்டும். அதன்பின்னர் அதிலும் பாதியளவான மண்ணால் சுத்தஞ்செய்யவேண்டும். மூத்திர சுத்தி செய்யவேண்டுமாயின் ஈரநெல்லிக்காயளவான மணணையெடுத்துச் சுத்திசெய்து கொள்ள வேண்டும். இரவில்தானறியாமல் சுக்கிலம்கலிதமாயின் இரண்டு பச்சை நெல்லிக்காயளவான மண்ணால் சுத்திசெய்து கொள்ளல்வேண்டும். மனைவியின் சம்பவத்திற்குப்பின் மூன்று நெல்லிக்காயளவான மண்ணால் சுத்திசெய்யதுகொள்ளல் வேண்டும்.
இந்தச் சௌசமானது இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்டது. அந்தக்கரணங்களின் சுத்தியின்பொருட்டு முன்னர்க்கூறப்பட்டவற்றைவிட பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி என்னுமிவர்களுக்கு முறையே இரண்டு மூன்று நான்கு மடங்கு அளவு அதிகமாக விதிக்கப் பட்டிருக்கிறது. எவனுக்குப் பகலில் எவ்வளவு சௌசம் விதிக்கப்பட்டிருக்கின்றதோ அதிற்பாதிசௌசமே இராக்காலங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றது. இராக்காலங்களில் விதிக்கப்பட்ட சௌசங்களில் பாதிதான் நோயால் துன்புற்றவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. அதில் பாதிதான் காட்டுவழிச் செல்வோருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. கால்களின் பக்கங்களிலிருக்கிற கணுவரையும், கைகளில் மணிக்கட்டு வரையும் முன்னர்ச் சுத்திசெய்துகொண்டு பின்னர் முழங்கால் வரையும்முழங்கை வரையுஞ் சுத்திசெய்யவேண்டும். சௌசத்தினால் சுத்தியை விரும்பும் மனிதர்கள் நீர் நிலைகளிலும் நீரோட்டங்களிலும் சம்பந்தித்துச் செய்தல்கூடாது. உள்ளங்கையால் நீரையெடுத்துச் சுத்தி செய்யவேண்டும். சௌசஞ்செய்து கொள்ளுவதற்கு முன்னரே மண், நீர் என்னுமிவற்றைக் கொண்டுதருதற்கு வேலைக்காரரை நியமித்துக்கொள்ளல் வேண்டும். அவர்களால் கொண்டுவரப்பட்ட மண்ணை வலதுகையால் எடுத்து இடதுகையில் வைத்துகொள்ளல் வேண்டும். மலநிவிர்த்தி செய்தால் பன்னிமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். சலநிவிர்த்தி செய்தால் நான்குமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். அன்னம் உண்டபின் பதினாறுமுறை வாய் கொப்பளித்தல் வேண்டும். கிழக்குமுகமாக இருந்துகொண்டு கால்களையும் வடக்குமுகமாக இருந்துகொண்டு கைகளையும் முகத்தையும் சுத்திசெய்துகொள்ளல் வேண்டும். பின்னர் வடக்குமுகமாகவேனும் கிழக்குமுகமாகவேனும் இருந்துகொண்டு ஆசமனம் செய்தல் வேண்டும்.
தந்த சுத்தி
பின்னர் இருதயமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு தோலுடன் கூடிய குச்சியை எடுத்துக்கொள்ளல்வேண்டும். கணுவின் நுனிக்குச் சமீபமாகக் குச்சியை ஒடிக்கலாகாது. குற்றியின் முனையில் நுனியிருக்கவேண்டும். கடைவிரலுக்குச் சமமான பருமனாகவேனும், அல்லது பல்லிற்குத் தக்கபடி சிறிதாகவேனுமிருக்க வேண்டும். இவ்வித இலக்கணம் வாய்ந்த குச்சியானது, நைட்டிகர்களுக்கு எட்டங்குல அளவாகவும், போகிகளுக்குப் பன்னிரண்டங்குல அளவாகவும், பிரமசாரிகளுக்கு பத்து அல்லது எட்டு அல்லது ஏழு அங்குல அளவாகவும், சன்னியாசிகளுக்கு ஆறு அங்குல அளவாகவும், பெண்களுக்கு நாலங்குல அளவாகவும் நீளமாயிருக்க வேண்டும்.
நாவல், மா, மருது, அசோகம், விளா, மகிழம், இத்தி, அத்தி, சிறுசண்பகம், சங்கம், குருக்கத்தி, கடம்பம், நாயுருவி என்னும் இந்தமரங்களின் குச்சிகளை போகிகள் உபயோகிக்கலாம்.
வாகையும், புங்கமும், நெல்லியும், தேவதாரு, நொச்சி, தாரை என்னும் மூன்றும், கருங்காலிமரம் போலக்குணத்தைச் செய்யுமாதலால் இவையும், தானிக்காய் சீரகமென்று சொல்லக்கூடியபழ முண்ணிப்பாலைமரமும், ஆமணம், ஆலும், அரசும், மருங்கையும், நறுவிலியும், வஞ்சியும், நெல்லிவிசேஷ, அத்தியும், ஈச்சையும், தென்னையும், பலாசமும், பொரசமும், பனையும் என்னும் இவற்றின் குச்சிகளை உபயோகித்தல் கூடாது. திருணபர்ணர், பிசாசவிருக்ஷம் என்னுமிவற்றின் குச்சிகளையும், செல்கல்லையும், தணல்களினின்றுண்டான சாம்பல்களையும், வெங்ககைகளையும், சுசர்ண முதலியவற்றால் செய்யப்பெற்ற தூள்களையும் உபயோகித்தல் கூடாது.
பிரதமை, நவமி, சஷ்டி, துவாதசி, ஐந்து பர்வதினங்கள், உபவாசதினங்கள், ஜன்மம், அனுஜன்மம், திரிஜன்மம் என்னும் மூன்றுதினங்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, வியதீபாதம், கிரகணதினம், சிரார்த்ததினம் என்னுமிவற்றிலும், சூரியோதயத்திற்குப் பின்னரும் பல்துலக்குதல் கூடாது.
விலக்கப்பட்ட தினங்களிலும், விதிக்கப்பட்ட குச்சிகள் கிடையாத காலத்தும் பன்னிருமுறை வாய்கொப்பளிக்க. அல்லது இலைகளால் சுத்திசெய்க. நாவின் அசுத்தத்தை நீக்கக்கூடிய திரவியங்களால் நாவையுஞ்சுத்திசெய்துகொள்க. நெற்றி, கண், காது, மூக்கு, முகம் என்னுமிவற்றிலுள்ள அசுத்தங்களையும், சுக்கிலம், மலம் மூத்திரங்களாலுண்டான அசுத்தங்களையும், கை, கால் முதலியவற்றிலுள்ள அசுத்தங்களையும், இவைபோன்ற எல்லா அசுத்தங்களையும் சுத்திசெய்துகொள்க. மூக்கும், காதும், கண்ணுமாகிய இவைகள் கழுவுவதால் சுத்தி யடைகின்றன. நகம், தலை மயிர் என்னுமிவை மண்ணினாலும், நெல்லிக்காய் முதலியவற்றாலும் சுத்தியடைகின்றன. இவ்வாறு அசுத்தங்களைச் சுத்திசெய்த பின்னர்த் தீயசொப்பனங்களை நாசஞ் செய்வதாயும், எல்லா அசுத்தங்களையும் போக்குவதாயுமுள்ள வாருணஸ்நானத்தைச் செய்ய வேண்டும். வாருணம் - நீர்.
(இந்த பதிப்பானது இந்த உயர்வான நூல் அனைவர்க்கும் சென்றடையவதற்கு பதிவிடபடுகின்றது ... நன்றி http://www.shaivam.org/ )
No comments:
Post a Comment