சுத்தம் பாகவதஸ்யான்னம் சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணுபத த்யானம் ஸுத்தம் ஏகாதசி வ்ரதம்.
ஏகாதசி ஸமம் கிஞ்சித் பாவனம் ந ச வித்யதே ஸ்வர்க்க மோக்ஷப்ரதா
ஏஷா ராஜ்ய புத்ரப்ரதாயினீ...
ஏகாதசி ஸமம் கிஞ்சித் பாவனம் ந ச வித்யதே ஸ்வர்க்க மோக்ஷப்ரதா
ஏஷா ராஜ்ய புத்ரப்ரதாயினீ...
ஏகாதசி விரதம் உருவான கதை
முரன் என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அதோடு எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில் இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான். முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன் சிவபெருமானிடம் சரண் அடைந்தார். அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன் தேவர்களுடனும் முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார். அவர்களைக் காப்பதற்காக இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ முரனுடன் திருமால் போரிட்டார். தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன் திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான். பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.
பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால் திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன் குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக தன் உடைவாளை உருவினான்.
அப்போது திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள். முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள் அவனைத் தனது ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது.. பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.தூக்கம் கலைந்து எழுந்த திருமால் தர்ம தேவதையை ஆசீர்வதித்து அவளுக்கு ‘ஏகாதசி என்று பெயரிட்டார்அந்த ஏகாதசி நன்னாள், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி ஆக (11ம் நாள்) இருந்ததால், அன்று முதல், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது.
ஏகாதசி வகைகள்
1 ) மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசியில் தொடங்கிய விரதத்தை, பின்னர் வந்த ஏகாதசி நாட்களிலும் அனுஷ்டித்து, பலரும், பல்வகைப் பயன்களைப் பெற்றனர். அப்பயனின் அடிப்படையில், ஒவ்வொரு ஏகாதசிக்கும், அதன் சிறப்பைக் குறிக்கும் அடைமொழி நிலைத்து விட்டது.
2 ) மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு (மோக்ஷ) வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் பெயர்.
3) தை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு சபலா. (விருப்பை நிறைவிப்பது) என்று பெயர். நாடு கடத்தப்பட்ட மகிஷ்மதராஜனின் மகன், எதுவும் கிடைக்காததாலேயே, உண்ணாமலும், பசி, தாகத்தினால் உறங்காமல் இருந்தாலும் கூட, திருமால் அருளால் மீண்டும் அரசாட்சி பெற்ற நாள்.
4) தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா (குலம் தழைக்க மகப்பேறு அருள்வது) என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் - சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது.
5) மாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு ஷட்திலா (ஷட் = ஆறு; திலா = எள்) என்று பெயர். உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள். பிரமகத்தி தோஷத்தை போக்கும் நாளுமாகும் .
6) மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா (நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது) என்று பெயர். மால்யவான் என்ற கந்தர்வன் தெய்வ அபசாராத்தால் ஏற்பட்ட அல்லல் நீங்கிய நாள்.
7 ) பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா (இழந்த அரச பதவியை மீட்பது) என்று பெயர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரானே, பகதாலப்ய முனிவரின் பரிந்துரைப்படி விரதமிருந்து அரச பதவியை மீளப்பெற்ற நாள்.
8) பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகி (அளப்பரிய திறன் வாய்ந்த நெல்லி) எனப் பெயர். ருத்ராக்ஷ மரம் சிவத் தோன்றல் போல, நெல்லி திருமாலின் தோன்றலாகும். எல்லா தெய்வ சக்திகளும் கோமாதா காமதேனுவுள் அடக்கம் போல, நலன் பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம். ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி, அவரை கனகதாரா துதியை பாடச் செய்து தங்க மழையை கொட்டுவித்தது போல பெரும் பயன் அருள வல்லது.
9) சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாபமோசினி (தீவினையால் விளைந்த இன்னலை அழிப்பது) எனப்படும். மேதாவி முனிவரை காமவயப்படுத்தியதால் மஞ்சுகோஷாவுக்கு விளைந்த அல்லலைப் போக்கிய நாள்.
10) சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி காமதா எனப்படும். பிற கடமைகளை நிறைவேற்றாமல், மித மிஞ்சிய பாலுறவில் ஈடுபடுவதால் நேரும் இன்னலை நீக்கி அருளும் நாள்.
11) வைகாசி மாதம் தேய்பிறை ஏகாதசி வரூதினி (இம்மையிலேயே நன்மை தருவது) எனப்படும். மாந்தாதாவை இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடையச் செய்த நாள். அன்னதானத்திற்கும் மேலான வித்யாதானத்தின் பலனை அருளும் நாள்.
12) வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி மோகினி எனப்படும். மோகத்தில் ஆழ்ந்திருந்த அருணகிரியை முருகன் காத்தது போல. வாழ்வு போகங்களிலேயே ஆழ்ந்ததால் நேரிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் த்ருஷ்டிமான் என்ற அரச குமாரன் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, விரதமிருந்து மீண்ட நாள். அனைவரையும் மோகத்திலிருந்து விடுவிக்கும் நாள். இதன் பெருமையை வசிஷ்டர் விவரித்து கூறியுள்ளார் .
13) ஆனிமாதம் தேய்பிறை ஏகாதசி அபரா (மறுமைக்கு வழி காட்டும்) எனப்படும். தெரியாததை மறைத்து, அறிந்தவர் போல நடக்கின்ற தவற்றை நீக்கிடும் நாள்.
14) ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ( நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர்.
15) ஆடிமாதம் தேய்பிறை ஏகாதசியை மோகினி என்பர். பொதுவாகவே, போகிகளாக இருக்கும் நமக்கு அதற்கு மேலான யோக நிலையை அடைந்திட அருளும் நாள்.
16) ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு காலங்களில் ஓய்வு எடுப்பது போல, மகாவிஷ்ணு ஓய்வாக சயனிக்கத் துவங்கும் நாள்.
17) ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி காமிகா எனப்படும். நம்மை அத்தியாவசியத் தேவைகட்கு கஷ்டப்படாமல் காத்து அருளும் நன்னாள்.
18) ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கும் புத்ரதா என்று பெயர். மஹீஜித் மன்னர் இந்த நாள் விரதமிருந்து புத்திர பேறு அடைந்தார் .
19) புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா (வருத்தம் நீக்கும்) என்று பெயர். உண்மை பேசுவோரின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்காக, சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஹரிச்சந்திர மகாராஜன் விரதமிருந்து, மீண்டும் நாடும் நலனும் பெறச் செய்த பெருமையுடையது.
20) புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி பத்மா எனப்படும். நாராயணன் (நாரா = நீர், அயனன் = துயில்பவன்) அருளால் மழை பொழிவித்து எங்கும் வளமை கூட்டும் பெருமையுடையது. இதை சூரிய வம்ச மன்னர் மாந்தாதா கடைபிடித்து தன் ராஜியத்தில் மழை வருவித்தார் .
21) ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி இந்திரா எனப்படும். நற்செயல்கள் புரியாமையால் விளைந்த இன்னலைப் போக்குவது. பிதுர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி இது ஆகும் .
22) ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஆகும் . நம் பாவங்களை நீக்கும் அங்குசமாக உள்ளத்தால் இதற்கு பாபாங்குசா என்று பெயர்.
23) கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி ரமா (மகிழ்வு கூட்டுவது) எனப்படும். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள்.
24) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி ப்ரபோதினி என்று கூறப்படுகிறது. இன்று பகவான் தன் உறக்கத்தை விட்டு எழுந்திரிக்கும் நாளாகும். இன்று துளசியால் பகவானை பூஜிப்பது மிகவும் நலம் .
வருடத்திற்கு 365/366 நாள் என்பதாலும், திதிகளில் கால அளவு குறைந்து, கூடுவதாலும் ஒவ்வொரு ஏகாதசிக்குமிடையே சரியாக 15 நாள் இடைவெளி இல்லாததாலும் 2,3 வருடங்களுக்கொரு முறை, ஒரே வருடத்துக்குள் 25 ஏகாதசிகள் வரும். அது உத்தமோத்தமமான கமலா ஏகாதசி எனப்படும்
25 ) கமலா ஏகாதசி . ஜெயசர்மா என்பவன் இதை கடைபிடித்து தன் வீட்டில் உள்ள கஷ்டத்தை விரட்டி திருமகளை குடியேற்றினான் . மிகவும் அபூர்வமாக வரும் இந்த நாளை கடைபிடிப்பது மிகவும் உயர்ந்தது ஆகும் .
ஏகாதசி விரத முறையும் அதன் மகிமையும்
அமாவாசையிலிருந்தும் பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி. ஏகாதசி விரதமிருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமியன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.
ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன. அதே போல ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன. அதன்பின் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது. அன்று பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
பாரணையில் அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று எக்காரணத்தைக் கொண்டும் துளசி இலையை பறிக்கக்கூடாது.
எனவே தேவையான துளசி இலையை முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும் முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.
சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில் அதை விட கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.
இந்த ஏகாதசியை ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் அநுஷ்டித்திருக்கிறார்கள். அம்பரீஷன் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம். அவன் சப்த த்வீபங்களோடு கூடிய ராஜியத்தை ஆண்டுவந்தாலும், அவன் மனசோ பகவானின் பக்தர்களிடமே இருந்தது. அவன் ராஜியத்தில் அதிகமாக கவனத்தைச் செலுத்தவில்லை. ச்ரவணம், கீர்த்தனம், விஷ்ணுஸ்மரணம், பாத சேவநம், வந்தனம், தாஸ்யம், சக்யம் என்று சொல்லுகின்ற நவவிதபக்தியிலேயே அவன் ஈடுபட்டிருந்தான். என்னடா இது இவன் நம்மீதுள்ள பக்தியிலேயே இருந்துவிட்டு வீட்டையும் நாட்டையும் சரியாகக் கவனிக்க மாட்டேன் என்கிறானே என்று பகவானுக்கே தோன்றியதாம்.. அவன் நிலைமை இப்படியே இருந்தால் நாட்டின் நிலைமை வீணாகிவிடுமே என்று நினைத்து, அவன் கேட்காமலேயே சுதர்ஸனத்தைக் கொண்டு அவன் மாளிகையிலே கொண்டுபோய் வைத்துவிட்டானாம் பகவான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஏகாதசி விரதம் துவாதசி பாரணை என்பதுதான்.
ஒருநாள் அப்படியே யமுனைக்கரைக்குப் போனான். பந்தலைப் போட்டான். ஒரு வருஷத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றான். ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி எவ்வளவு நாழிகை இருக்கிறதோ அதற்குள்ளே பக்தர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்து அதில் மீதம் வந்ததை உண்டு விரதம் முடிப்பது என்று உறுதி எடுத்துக் கொள்கிறான். ஆயிரக்கணக்கான வேதவித்துக்களை அழைத்து அவர்களுக்கு போஜனம் செய்வித்து, வேண்டுகிற தானங்களைக் கொடுத்து, கோதானம் செய்து… இப்படி ஒரு வருஷம் முடியப்போகிறது. அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசியும் வந்தது. வழக்கம் போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான். இன்னும் அவனும் அவனுடைய பத்னியும் சாப்பிடவேண்டும்.
அப்போதுதான்…. துர்வாசர் வந்தார். முனிவர் வந்தவுடனே அவரை வரவேற்று, ஸ்வாமி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்… வாருங்கள். போஜனம் செய்து அடியேனுக்கு பிரசாதத்தை வழங்கவேணும் என்று பிரார்த்தித்தான் அம்பரீஷன். துர்வாசரோ ம் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி மெதுவாகக் கிளம்புகிறார். இன்னும் அரை நாழிகைதான் பாக்கியிருக்கிறது. அதற்குள்ளாக அம்பரீஷன் துர்வாசருக்கு போஜனம் செய்வித்து இவனும் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி அவன் அந்த துவாதசி பாரணையை முடிக்கவில்லையென்றால் அந்த ஒரு வருஷ ஏகாதசி விரதம் போச்சு…
ஆனால் துர்வாசரோ வேண்டுமென்றே அடிமேல் அடிவைத்து மந்தகதியிலே போகிறார். பரார்த்திசீல: என்றபடி பிறரை கஷ்டப்படுத்தி அதிலே இன்பம் காண்கிற சாடிஸ்ட் டாக அப்போது துர்வாசர் … இவனோ இன்னும் அந்த குறுகிய காலத்துக்குள்ளே விரதத்தை முடித்தாக வேண்டும். போனவரோ இன்னும் காணவில்லை. வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறான். மனசிலே தவிப்பு. அப்போது அங்கிருந்த பெரியவர்களை அணுகி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்று உபாயம் கேட்கிறான். எல்லாவற்றுக்கும்தான் பிராயச்சித்தம் இருக்கிறதே! பெரியவர்கள் சொன்னார்கள் … ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ஒரு துளசி இலையையும் போட்டு ஆசமனம் செய்து பகவத் பிரசாதமாக அதை உட்கொண்டுவிடுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு. சாப்பிடாத மாதிரியும் கணக்கு. ஏனென்றால் முனிவரை சாப்பிட அழைத்திருக்கிறீர்கள்… அவரை விட்டு விட்டு நீங்கள் சாப்பிடக்கூடாது. எனவே துவாதசி போவதற்குள்ளாக இதைச் செய்துவிடுங்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது… என்றார்கள்.
அவன் உட்கார்ந்து ஆசமனம் செய்யப் போனான். அப்போது சரியாக துர்வாசரும் வந்துவிட்டார். அம்பரீஷன் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்துவிட்டுக் கேட்டார்…
என்ன செய்கிறாய்…?
பாரணை…!
என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாகச் சொன்னாயே. உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார்…. என்று சொல்லிவிட்டு தன் ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது. என்னை அவமானப்படுத்திய அம்பரீஷனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட்டு வா என்று அந்த பூதத்தை ஏவினார். அம்பரீஷனோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவன் அப்படியே நின்றுவிட்டான். பூதம் பாய்ந்தது. ஆனால் அவன் பூஜையறையிலே இருந்தாரே சுதர்ஸனாழ்வார்.. அவர் அப்படியே கிளம்பிவிட்டார்.
அவ்வளவுதான் பூதம் க்ளோஸ். பிறகு அப்படியே திரும்பி துர்வாசரை முறைக்க, அவரும் ம்ம்ம்… என்று கர்ஜிக்க… துர்வாசர் விஷயம் ஒன்றும் எடுபடவில்லை. அவ்வளவுதான் அவர் அப்படியே திரும்பி ஓட, சுதர்ஸனச் சக்கரமும் அவரை விடாமல் துரத்தியது. ஓடினார் ஓடினார்… சமுத்திரத்துக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். ஆனால் சுதர்ஸமோசமுத்திரத் தண்ணீரை கரையிலிருந்துகொண்டே அப்படியே உறிந்து கொண்டது.
தொடர்ந்து ஓடினார். மேருபர்வதக் குகைக்குள்ளே ஒளிந்து கொண்டார். அதுவோ குகையை ரெண்டாகப் பிளந்தது. வேறு வழியில்லாமல் அங்கிருந்து நேரே பிரம்ம லோகம் போனார். பிரம்மாவிடம் போய் தஞ்சம் கேட்டார். அவரோ, அம்பரீஷன் விஷ்ணு பக்தர்களிலேயே ச்ரேஷ்டமானவன்.. அவனுக்குப்போய் அபசாரம் செய்துவிட்டீரே. பகவானுக்கு அபசாரம் பண்ணினாலும் அவன் பொறுத்துக்கொள்வான். அவன் பக்தனுக்குப் பண்ணினால் பொறுத்துக் கொள்வானோ? நீர் நிற்கும் இடம் தெரிந்தால் சுதர்ஸம் இந்த இடத்தையே துவம்சம் பண்ணிவிடும். நீர் இடத்தை விட்டுக் கிளம்பும் என்றார்…
அங்கிருந்து ஓடி சிவபிரானைத் தஞ்சம் புகுந்தார். அவரோ அப்பனே சுதர்ஸனத்திற்கு உன்மீது கோபம் வந்துள்ளது. அது நாங்கள் சொன்னால் எல்லாம் கேட்காது. நாராயணன் சொன்னால்தான் கேட்கும். நீர் அவரிடமே தஞ்சம் புகுந்து கொள்ளும் என்றார்.
அவர் விஷ்ணுவை நோக்கி ஓடினார். அவரைத் தஞ்சம் புகுந்து பிராத்தித்தார். விஷ்ணுவோ, ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது சுதர்ஸனம் என் கண்ட்ரோலில் இல்லை. நான் அதை அம்பரீஷனுக்கு லீசுக்குக் கொடுத்துவிட்டேன். அம்பரீஷனை யாரென்று நினைத்தீர். அவன் என் பக்தன் இல்லை. என் எஜமான். அவனுக்கு நான் தாஸன். வேறு வழியில்லை. நீர் அவனிடமே போய் தஞ்சம் புகுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்… என்றார்.
வேறு வழியில்லாமல் துர்வாசரும் அம்பரீஷனிடம் வந்தார். அதற்குள் ஒரு வருஷம் முடிந்துவிட்டது. அப்பனே மூன்று லோகங்களுக்கும் போய்விட்டேன். இப்போதுதான் உன் மகிமை தெரிந்தது. அந்த சுதர்ஸனச் சக்கரத்திடம் கொஞ்சம் சொல்லப்பா! என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதை கண்ட அம்பரீஷன் சுதர்ஸநத்தை பிரார்த்திக்க அவர் மீண்டும் பூஜை அறையில் சென்று அமர்ந்து கொண்டார் . துர்வாசருக்கும் அம்பரீஷன் மற்றும் ஏகாதசி விரத மகிமை புரிந்தது . ஏகாதசி விரத மகிமை அப்படிப்பட்டது
ஏ காதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம்
ஹே ஜனங்களே!ஏகாதசியில் எல்லாராலும் இரண்டு செய்யத் தக்கன - அதாவது இரண்டு கார்யம் செய்யத் தக்கன
முதல் காரியம் உபவாஸம். இரண்டாவது காரியம் பகவத் கதைகளைக் கேட்பது.
ஏகாதசியும் சிரார்த்தமும்:
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது என்பர். இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டுமென்பதால், ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படும் அந்தணர்களும், நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை. சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது
ஏகாதசியும் அறிவியல் உண்மையும்
ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும்,பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில்அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம்எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும். ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.
ஏகாதசி தினத்தில் சுமார் 120 டிகிரிலிருந்து 132 டிகிரியில் இருக்கும் அப்பொழுது பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை முக்கோண நிலையில் அமைகின்றன. இக்காரணத்தினால் ஏகாதசி விரதம் மிகச்சிறந்த விரதம் ஆகும்.
ஏகாதசி நாளில் சந்திரனின் ஈர்ப்பு பூமியில் அதிகமாக இருக்கும். இதனால் மனிதனின் உடல் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மனித உடலில் 80% தண்ணீர் நிறைந்து உள்ளதால் இப்பாதிப்பு சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படுகிறது.
அந்நாளில் நம்முடைய ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காமல் இருக்கும். அதனால் தான் அன்று உணவை ஒதுக்கி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் கூறினார்கள்.
இந்நாளில் தியானம் செய்பவர்களுக்குச் சந்திரனின் ஆற்றல் நல்ல சக்தியைக் கொடுக்கும். அடுத்தநாள் துவாதசி திதியானது திருவோண நட்சத்திரதில் வந்தால் அதுவும் புதன்கிழமை ஆக இருந்தால் அன்றும் ஏகாதசி போன்று விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அந்த நாள் மிகவும் புனித நாளாகும்.
ஏகாதசி நாளில் சந்திரனின் ஈர்ப்பு பூமியில் அதிகமாக இருக்கும். இதனால் மனிதனின் உடல் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மனித உடலில் 80% தண்ணீர் நிறைந்து உள்ளதால் இப்பாதிப்பு சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படுகிறது.
அந்நாளில் நம்முடைய ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காமல் இருக்கும். அதனால் தான் அன்று உணவை ஒதுக்கி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் கூறினார்கள்.
இந்நாளில் தியானம் செய்பவர்களுக்குச் சந்திரனின் ஆற்றல் நல்ல சக்தியைக் கொடுக்கும். அடுத்தநாள் துவாதசி திதியானது திருவோண நட்சத்திரதில் வந்தால் அதுவும் புதன்கிழமை ஆக இருந்தால் அன்றும் ஏகாதசி போன்று விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அந்த நாள் மிகவும் புனித நாளாகும்.
மஹா பெரியவா இதை தன் வாக்கில் மூலமாக கூறும் போது .....
வ்ரதோபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.
ந காயத்ர்யா : பரம் மந்த்ரம் ந மாது : பர தைவதம் *
ந காச்யா : பரமம் தீர்த்தம் நைகாதச்யா : ஸமம் வ்ரதம் **
'காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை;அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை) ;காசிக்கு மேலே தீர்த்தமில்லை'என்று சொல்லிக் கடைசியில் 'ஏகாதசிக்கு ஸமானமாக வ்ரதுமெதுவுமில்லை'என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் 'மேலே'ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு 'ஸமமாக'ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு 'மேலே'மட்டுமில்லாமல், அதற்கு 'ஸமமாக'க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிற்ப்பித்துச் சொல்லியிருக்கிறது.
அஷ்ட வர்ஷாதிக : மர்த்ய : அபூர்ணாசீதி வத்ஸர :*
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ : உபயோ அபி **
என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், 'மர்த்ய', அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது. என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்;அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை 'எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி'னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை;ரூலாகப் போடவுமில்லை.
பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.
இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாத்தைக் கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை. அன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: ப்ரதிக்ராஸம் அலௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம் .
அதலால் ஏகாதசி விரதமிருந்து பல நலன்கள் பெற அனைவரையும் வேண்டுகிறோம் .
No comments:
Post a Comment