Monday, 17 November 2014

போதேந்திர ஸ்வாமிகள்

                                                             



இந்தியாவில் உள்ள ஏழு மோக்ஷபுரிகளில், தென் திசைக்குப்  பெருமை சேர்க்கும் அற்புதமான காஞ்சி மாநகரில் கேசவ பாண்டுரங்கர், சுகுணா என்னும் திவ்ய தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வெகுநாட்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. தங்களது மனவருத்தத்தை நீக்கி அருளும்படி, அவர்களது குருநாதரான ஸ்ரீ மத் விஸ்வாதிக ஆத்ம போதேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் வேண்டி நின்றனர் (58-வது பீடாதிபதி, ஸ்ரீ காமகோடி பீடம், கி.பி 1586-1638, இவரது குருநாதரனான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் ஸ்ரீ ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்த்ரரின் குருநாதர். வடவாம்பலத்தில் இருக்கும் 58-வது ஸ்ரீ பெரியவாளின் அதிஷ்டானத்துக்கும் சென்றோம், 
ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளும், பணிந்து நின்ற தம்பதிகளிடம், விரைவில் இறையருளால் ஆண் மகவு பிறப்பான் என்று நல்லாசி மொழிந்தார். குருநாதரின் வார்த்தைகளில் மனமகிழ்ந்து இல்லம் திரும்பினர்.சில காலம் கழிந்த பின்னர், குருவருளால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, புருஷோத்தமன் என்ற திவ்ய நாமம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். குழந்தை மிகுந்த தேஜஸ் உடையவனாய் இருந்தான். உரிய காலத்தில் புருஷோத்தமனுக்கு உபநயனம் நடத்தினர் பெற்றோர். உபநயனம் முடிந்த கையோடு, குழந்தையை அழைத்துக் கொண்டு ஸ்ரீ மடத்திற்கு வந்தார் கேசவ பாண்டுரங்கர். குழந்தையைக் கண்டுற்ற ஸ்ரீ மத் விஸ்வாதிக போதேந்த்ர சரஸ்வதி சுவாமிகள், குழந்தை யார்? என வினவினார். கேசவ பாண்டுரங்கரும், "இது குருநாதரின் குழந்தை" என்றார். அவ்வாறெனில், குழந்தையை ஸ்ரீ மடத்துக்கே கொடுக்க முடியுமா? என்றார் குருநாதர். கேசவ பாண்டுரங்கர், தனது துணைவியுடன் கலந்தாலோசித்து வருவதாகக் கூறி விடை பெற்றார். குழந்தையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுத்தால், சந்நியாசி ஆகிவிடுவான், அதனால் தங்களது பரம்பரை வளராமல் நின்று விடும் என்ற எண்ணமும் அவரது மனதில் ஓடியது.
மனைவியிடம் சென்று, ஸ்ரீ மடத்தில் நடந்தவற்றை எடுத்துக் கூறினார். அதைக் கேட்டதுமே சுகுணா அம்மையார் அழத் தொடங்கினார். காரணம் யாதெனக் கேட்டார் கேசவர், அதற்கு....சுகுணா அம்மையார், "குழந்தையும், நானும் உங்களுக்கே உரியவர்கள்" அதனால் என்னிடம் கலந்தாலோசித்து, ஸ்ரீ குருநாதரிடம் பதில் கூறவேண்டிய அவசியமே இல்லை, அவர் கேட்டதுமே குழந்தையைக் கொடுத்திருக்கலாம் என்றார். கேசவ பாண்டுரங்கரும் மனக் கலக்கம் தீர்ந்தவராய் புருஷோத்தமனை அழைத்துக் கொண்டு ஸ்ரீ மடம் திரும்பினார். ஸ்ரீ குருநாதரிடம், குழந்தையை மனமுவந்து ஒப்படைத்து இல்லம் திரும்பினார்.
புருஷோத்தமன் வேத பாடங்கள் கற்பதற்கு குருநாதர் ஏற்பாடு செய்தார். ஞானசாகரன் என்ற நண்பனும், புருஷோத்தமனும் பிரம்மவித்யை நீங்கலாக மற்ற அனைத்தையும் பதினெட்டு வயதிற்குள் கற்றுணர்ந்தனர். பிரம்மவித்யை மட்டும், ஸ்ரீ குருநாதரிடம் பாடம் செய்ய வேண்டும் என்று காத்திருந்தனர். ஸ்ரீ குருநாதரும் அவர்களுக்கு அதை உபதேசித்து அருளுவதாகச் சொல்லியிருந்தார். ஆயின், அச் சமயம் குருநாதர் காசியில் இருந்தார். புருஷோத்தமனும், ஞானசாகரனும் காஞ்சி மாநகரில் இருந்து காசிக்கு சென்று குருநாதரை சந்திக்கப் புறப்பட்டனர். ஞானசாகரன், ஜோதிடம் பார்ப்பதில் வல்லவன், காசி யாத்திரை மேற்கொள்ளும் வழியிலேயே அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்திருந்தது. அதனால் புருஷோத்தமனிடம் தனக்கு இறுதிச் சடங்குகள் எல்லாம் நீயே செய்ய வேண்டும் என்று கூறி இருந்தான். இருவரும் இணை பிரியாத நண்பர்கள் என்பதால், இருவரில் யார் இறந்தாலும், மற்றொருவர் அவருக்கு கங்கையில் இறுதிச் சடங்குகள் செய்து பின்பு தானும் கங்கையில் உயிரை மாய்த்துக் கொள்ளனும் என்று தீர்மானம் செய்தனர்.
பாதி வழியிலேயே, ஞானசாகரன் நோய்வாய்ப் பட்டு இறந்தான். நண்பனுக்குக் கொடுத்த வாக்கின்படி கங்கை சென்று உயிர்த் த்யாகம் செய்யக் காசி யாத்திரையை தொடர்ந்தான் புருஷோத்தமன். காசி சென்றதும், நேரே குருநாதரிடம், சென்று தண்டன் சமர்ப்பித்து, வழியில் நடந்தவற்றை கூறி, தானும் உயிர்த் த்யாகம் செய்யப் போவதாக விண்ணப்பித்தான். இதைக் கேட்ட குருநாதர் வருத்த முற்றார். புருஷோத்தமனை அடுத்த பீடாதிபதியாக நியமிக்கத் திருவுள்ளம் கொண்டிருந்தார் குருநாதர். பின்பு, புருஷோத்தமனிடம், பின்வருமாறு கூறினார், " நீ உயிர்த் த்யாகம் செய்வதற்கு பதிலாக துறவறம் எடுத்துக்கொள், துறவறம் என்பது மற்றொரு பிறப்பே யாம்!, இதனால், நீயும் உனது வாக்கினைக் காப்பாற்றியவனாவாய், எனது எண்ணமும் ஈடேறும்" என்றார். புருஷோத்தமனும் குருநாதரின் வாக்கிற்கு இசைந்தார்.
சந்நியாசம் ஏற்ற பிறகு, சில காலம் காசியில் குருநாதருடன் தங்கியிருந்து பிரம்மவித்யை பயின்றார். பின்னர், ஸ்ரீ போதேந்திரரைத் தென்திசைக்கு அனுப்பி நாமப் பிரசாரத்தில் ஈடுபடுத்த திருவுள்ளம் கொண்டார் குருநாதர். காஞ்சிபுரம் செல்லும் வழியில் பூரியில் வசிக்கும் ஸ்ரீ லக்ஷ்மீதரர் என்னும் மகான் அருளிச் செய்த பகவன்நாம கௌமுதி என்னும் நாம சித்தாந்த கிரந்தத்தையும் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். குருவின் ஆணையைச் சிரமேற்கொண்டு, பூரி நோக்கி விரைந்தார் ஸ்ரீ போதர். பூரியில் ஸ்ரீ ஜகன்னாதரை சேவித்து, ஸ்ரீ லக்ஷ்மீதரரின் இல்லத்திற்கு சென்றார். ஆயின், அச்சமயம் லக்ஷ்மீதரர் இறைவனடி சேர்ந்திருந்தார். அவரது புதல்வரான ஸ்ரீ ஜகந்நாத பண்டிட் என்பவரிடம் குருநாதர் சொன்ன நாம சித்தாந்த கிரந்தத்தை பெறுவதற்காக இல்லத்திற்கு வெளியே காத்திருந்தார். உள்ளே சென்று அவர்களை தொந்தரவு செய்ய மனமின்றி, வாயிலில் அமர்ந்து நாம ஜபம் செய்யத் துவங்கினார்.
இதற்குச் சில நாட்கள் முன்னர், ஒரு இளம் தம்பதியர் தீர்த்த யாத்திரையாகக் காசிக்குச் சென்று கொண்டிருந்தனர். மாலைப் பொழுது என்பதால் இரவு அந்த ஊரிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தனர். மறுநாள் காலையில், தீர்த்தயாத்திரை வந்தவரின் மனைவியைக் காணவில்லை. சுற்றும் முற்றும் நன்கு தேடினார், இருந்தும் பயனில்லை. ஊர் மக்களிடம் தெரிவித்தபோது, முகலாயர்கள் யாரேனும் உமது மனைவியை கடத்திச் சென்றிருக்கக் கூடும் என்றனர். இதைக் கேட்டு மனம் நொந்தார், ஆயினும் காசி யாத்திரையை நிறுத்த விரும்பாமல் காசி நோக்கிப் பயணித்தார். இறை அருளால் காசி யாத்திரை முடித்து அவ்வூர் வழியே வந்து கொண்டிருந்தார். மாலை வேளையில் தனது அநுஷ்டானங்களை ஆற்றுப் படுக்கையில் செய்து கொண்டிருந்தார், அப்போது அவரிடம் ஒரு இஸ்லாமியப் பெண்மணி வந்து நின்று 'ஓ' வென்று அழுதார். வந்திருப்பது தன் மனைவி என்பதை உணர்ந்தார், எங்குற்றாய்? என்ன நேர்ந்தது என்றார்? அதற்கெல்லாம் நேரம் இல்லை, முதலில் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்றார் அந்தப் பெண். உடனே இருவருமாக ஊரை விட்டு வெகு தூரம் வந்தனர். பாதுகாப்பான இடத்தை அடைந்ததும், சிலர் தன்னைக் கடத்திச் சென்றது பற்றியும், அவருக்கு அங்கு நடந்த கொடுமைகள் பற்றியும் கண்ணீர் மல்க விவரித்தார். பின்னர், தன்னை மனைவியாக ஏற்காவிடினும், இல்லத்தில் இருந்து தொண்டு புரியும் பாக்யமாவது தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். கணவனும், சாஸ்த்ரங்கள் சம்மதித்தால் அவளை ஏற்பதாகவும் உறுதி பகன்றார். அவர்கள் இருவரும் இது பற்றி ஜகந்நாத பண்டிட் என்பவரிடம் கேட்க அவரது இல்லத்திற்கு விரைந்தனர். (அந்த இல்லத்து வாசலில் தான் நம்ம சுவாமிகளும் நாம ஜபம் பண்ணிட்டு இருக்கார்).
இல்லத்திற்கு வந்த இருவரும், கதவைத் தட்டி, ஜகந்நாதரிடம் நடந்தவற்றைக் கூறினர். தங்களுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினர்.இதைக் கேட்ட மாத்திரத்தில், நீங்கள் இருவரும் மூன்று முறை ஸ்ரீ ராம நாமத்தைச் சொன்ன பிறகு முன்பு போல் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். இதைக் கேட்ட ஜகந்நாதரின் அன்னை, உள்ளிருந்தவாறே எதற்கு மூன்று முறை, ஒரே முறைசொன்னாலே போதும் என்று உறுதி பட கூறினார். இதைக்கண்டு வியந்த ஸ்ரீ போதர், இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? என்று கேட்டார். தனது தந்தை எழுதிய பகவன் நாம கௌமுதியே இதற்கு ப்ரமாணம் என்றார் ஜகந்நாத பண்டிட். உடனே அந்த அற்புத நூலையும் ஸ்ரீ போதரிடம் குடுத்தார். ஸ்ரீ பெரியவாளும், அன்று இரவே அந்த நாம சித்தாந்த க்ரந்தம் முழுவதையும் படித்தார். காலையில் அந்த தம்பதிகள் இருவரையும் அழைத்து, ஆம்! சாஸ்தரங்கள் சொல்வது உண்மையே, நீங்கள் இருவரும் சேர்ந்து வாழலாம். ஆனால் மற்ற மக்கள் இதை ஏற்க மறுப்பார்கள். ஆகவே நீங்கள் இருவரும் என்னுடன் நதிக் கரைக்கு வாருங்கள் என்றார். நதியில், ராம நாமம் ஜபித்து மூழ்கி எழும்படி சொன்னார். மூழ்கி எழுந்ததும், இஸ்லாமிய ஆடை அணிந்து இஸ்லாமியர் கோலத்தில் இருந்த அந்தப் பெண் பழைய உருவமும் புனிதமும் பெற்று மலர் மாலை, குங்குமத்துடன் மீண்டு எழுந்தாள். புதுமணத் தம்பதியர் இருவரும் ஸ்ரீ சுவாமிகளை சேவித்து விடை பெற்றனர்.
காஞ்சிபுரத்திற்குத்  திரும்பிய ஸ்ரீ பகவந்நாம போதர், குருநாதரின் விருப்பங்களை நிறைவேற்றும் விதமாக பல நூல்களை இயற்றினார்.அவற்றுள் சில, பகவந்நாம ரசோதயம், பகவந்நாம ரஸார்ணவம், பகவந்நாம ரஸாயனம் என்பனவாம். ஸ்ரீ பகவந்நாம போதர், தனது குருநாதரின் வரவுக்காகக் காத்திருந்தார். குருநாதர் காஞ்சிக்கு எழுந்தருளியதும், அவர் இயற்றிய நாம சித்தாந்த நூல்களை அவரது மலரடிகளில் சமர்பித்தார். ஸ்ரீ போதரின் நூல்களைக் கண்டு குருநாதர் இன்புற்றார். மேலும், பகவந்நாம மகிமையை நாடு முழுதும் பிரச்சாரம் செய்யும்படி உத்தரவிட்டார்.
ஸ்ரீ பகவந்நாம போதரும் குருவாக்கின் படியே கிராமங்களுக்குச் சென்று பகவந்நாம மகிமை பற்றியும், அதுவே தலை சிறந்த மோக்ஷ சாதனம் என்பதையும் மக்களிடம் புரிய வைத்தார். அச் சமயம், திருவியலூர் ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாளை சந்தித்தார். ஐயாவாள் ஸ்ரீ போதரை விட வயதில் பெரியவராக இருந்தார். இருவரும் சேர்ந்து பகவந்நாம பிரச்சாரம் செய்யத் துவங்கினர்.
ஒரு முறை பெரம்பூர் என்னும் இடத்திற்கு ஸ்ரீ பகவாந்நாம போதர் நாமப் பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது, ஒரு அடியவரின் இல்லத்தில் பிக்ஷை எடுத்துக்கொள்ளச் சென்றிருந்தார். அந்த அடியவரின் குமாரன் பிறவி ஊமை. ஸ்ரீ பகவாந்நாம போதர், எங்கெல்லாம் பகவானின் நாம ஜபம் நடக்கிறதோ அங்கு மட்டுமே பிக்ஷைக்கு செல்வது வழக்கம். முன்பே பெரம்பூரில் வசிக்கும் தம்பதிகளை ராம நாம ஜபம் செய்யும்படி கூறியிருந்தார், அவர்களும் இடையறாது செய்தும் வந்தனர். அதன் பயனாகவே ஸ்ரீ பகவான்நாம போதருக்கு அன்னமிடும் பெரும்பேறு பெற்றனர். அவர்களது இல்லத்திற்கு எழுந்தருளிய ஸ்ரீ ஸ்வாமிகள், அவர்களது குமாரனைக் கண்டு மனம் வருந்தினார். தான் அருளிச் செய்த நாம சித்தாந்தம் இந்தக் குழந்தை போன்றோர்களின் விஷயத்தில் உதவாது போய் விடுமே. இவர்களைப் போன்று வாய் பேச முடியாமல் இருப்பவர்களால் பகவானின் திருவடியை எளிதில் அடைய முடியமல் போய்விடுமே என்ற கருணையினால் மனம் கலங்கினார்.
ஸ்வாமிகளின் மனவருத்தத்தை அறிந்த அந்த தம்பதிகள், சுவாமிகளுக்கு தண்டனிட்டு, "ஸ்வாமிகள் இதற்கு வருந்தவேண்டியதில்லை, எல்லாம் பகவத் லீலை" என்று பதிலுரைத்தனர். அத்துடன், தங்களது மகனுக்காக தற்போது ஸ்ரீ குருநாதர் வருத்தம் கொள்கிறார் என்றால், நிச்சயமாக அவன் நற்கதி பெறுவான் அதில் ஐயமே இல்லை என்றும் பணிவோடு கூறினர். அவர்களை மனமார ஆசீர்வதித்து, அங்கிருந்து கிளம்பினார் ஸ்ரீ ஸ்வாமிகள். அவர் அமுது செய்த பிரசாதத்தில் இருந்த மீதியை அந்த தம்பதிகளின் குமாரன் விளையாட்டாக சுவைத்தான். அக்கணமே ராம ராம ராம என்று வாய் திறந்து சொல்ல ஆரம்பித்து, ஸ்ரீ சுவாமிகளைத் தொடர்ந்து சென்றான். சுவாமிகளைப் பிரிய முடியாமல், அவருடனே அவருக்கு கைங்கர்யம் செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு அன்றுடன் அவரோடே இருக்கத் திருவுளம் கொண்டான். ஸ்ரீ ஸ்வாமிகள், அவனுக்கு தனது ஸ்ரீ பாதுகைகளைக் அளித்து ஆசீர்வதித்துச் சென்றார்.
ஆற்காட் நவாபிற்கும், அங்குள்ள சில மக்களுக்கும் ப்ளேக் என்னும் கொடிய நோய் பரவியிருந்தது. அக்காலத்தில் அந்த நோய்க்கு மருத்துவமே இல்லை. உடனே சில அடியார்கள் இதனை ஸ்ரீ ஸ்வாமிகளிடம் தெரிவிக்க, ஸ்வாமியும் அவர்களை அகண்ட நாம பஜனை செய்யும்படி கூறினார். நாம பஜனை செய்யும்போதே நோயால் பீடிக்கப் பட்டவர்கள் நலம் பெறுவதை உணர்ந்தனர். அன்றிலிருந்து ஆற்காட் நவாபும் ஸ்ரீ ஸ்வாமிகளின் தொண்டர் ஆனார்.
நாமப் பிரச்சாரம் செய்த வண்ணமே, திருகோகர்ணம் வந்தார் ஸ்ரீ ஸ்வாமிகள். அங்கு ஒரு தாசி, சுவாமியிடம் வந்து தனக்கும் ராம நாம உபதேசம் செய்யும்படி கோரினாள். தயக்கம் சிறிதுமின்றி ஸ்ரீ ராம நாம உபதேசம் செய்தார். இதனைக் கண்ட அவ்வூர் மக்கள் சுவாமிகளைப் பற்றி அவதூறாகப் பேசினார். எதையும் பொருட் படுத்தாமல் சிலகாலம் அங்கு தங்கி இருந்து பின்பு அங்கிருந்து சென்றார் ஸ்வாமிகள். அந்த அம்மையாரும், உபதேசம் பெற்ற நாளாய் இடையறாது நாம ஜபம் செய்து வந்தாள், சில காலம் கழிந்த பின்னர் மீண்டும் ஸ்வாமிகள் அவ்வூருக்கு வந்தார். ஸ்ரீ சுவாமிகளைக் காண ஓடோடி வந்த அந்த அம்மையார் ஸ்வாமிகளுக்கு தண்டனிட்டார், அக்கணமே யோகிகளைப் போன்று கபால மோக்ஷம் அடைந்தார். இதனைக்கண்டுற்ற ஊர் மக்கள் தங்களது தவறினை உணர்ந்து ஸ்ரீ சுவாமிகளைச் சரண் புகுந்தனர்.
ஒரு நாள் காவேரி நதிக் கரையில் சில குழந்தைகள் மணலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அச் சமயம் ஸ்ரீ பகவன்நாம போதர் தமது அவதாரத்தை முடிக்கத் திருவுளம் பற்றினார். குழந்தைகளிடம் சென்று தன்னை மணலால் மூடும்படி சொன்னார். அதை விளையாட்டு என்றே கருதிய குழந்தைகள் அவ்வண்ணமே செய்தனர். மறுநாள், ஊர் மக்கள் ஸ்ரீ சுவாமிகளைத் தேடினர், அப்போது அந்தக் குழந்தைகள் சொன்னதைக் கேட்டு மனம் வருந்தி, அங்கு சென்று நிலத்தை தோண்டினர். கொஞ்ச நேரம் சென்றதுமே, ஸ்ரீ ஸ்வாமிகள், அசரீரியாக "நாம் இங்கு சமாதியில் உள்ளோம் அஞ்சற்க" என்றார். சில காலம் சென்றதும் அந்த இடத்தையே மக்கள் மறந்து போயினர், அங்கு ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு அதிஷ்டானமும் எழுப்பி இருக்கவில்லை. நூறு ஆண்டுகள் கழித்து மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள், ஸ்ரீ பகவான்நாம போதரின் சமாதியை தரிசித்து, அதிஷ்டானம் எழுப்பத் திருவுளம் கொண்டார். தனது கால்கள் இரண்டையும் கயிறுகளால் கட்டி, கோவிந்தபுரம் முழுதும் உருண்டே தேடினார் (ஸ்ரீ ஸ்வாமிகளின் சமாதியில் தனது பாதம் பட்டுவிடக் கூடாதே என்ற உயர்ந்த எண்ணம்). அத்தகு பக்தியுடன் தேடிய சத்குரு ஸ்வாமிகளுக்கு, ஸ்ரீ பகவான்நாம போதர் சமாதி அடைந்த இடத்தில் ஸ்ரீ ராம நாம ஜபம் கேட்டது. உடனே தஞ்சாவூரை ஆட்சி செய்துகொண்டிருந்த மகாராஷ்டிர மன்னரிடம் உதவி பெற்று ஸ்ரீ பகவான்நாம போதேந்த்ராளுக்கு அதிஷ்டானம் எழுப்பினார்.

Thanks to http://www.heritagewiki.org/

No comments:

Post a Comment