Tuesday, 2 June 2015

64 சிவ வடிவங்கள் (1 - 5)

1.லிங்கமூர்த்தி


லிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு <உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது. உருவமற்றது. ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது. அதுவே அனைத்துமானது, பற்பல குணாதிசயங்களைக் கொண்டது. நிறமில்லாதது, அழிவென்பதே இல்லாதது, ஈரேழு உலகங்களும் தோன்ற, அழிய காரணமாயிருப்பது, இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது. இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.
மேற்சொன்னவாறு  ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட, இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத, உலகம் தோன்ற, அழிய காரணமான இதனை உருவம் உள்ளது, அதாவது சகளம் என்றும், உருவமற்றது  அதாவது  நிட்களம் என்றும் பிரிக்கலாம். மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம்.  லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது. அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும். பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம். இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும்.  லிங்கம் மூவகைப்படும் . அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம். இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம். அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும். பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும்   பிரம்ம பாகம் என்றழைக்கப்படும். பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால் பாகம் என்றழைக்கப்படும். ருத்ரபாகம் ஆணாகவும், திருமால் பாகம் பெண்ணாகவும் பிரமபாகம் பேடு  எனவும் குறிக்கப்படும்.
கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே  ஈசனும் அமைந்திருக்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற லிங்கத்தைப் பற்றி மகாலிங்க தலம் எனும் சிறப்புப் பெற்ற ஊர் மயிலாடுதுறை  அருகே உள்ள இடைமருதூர்  ஆகும். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, பூஜைக்குறிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளார். இங்கு காவிரி நதி  வில்வத்தால் சிவனைப் பூஜித்தாள். நம்மிடமுள்ள  மும்மலங்களை   அகற்றும்  வல்லமையுடையவர் இவர்.  பிரமஹத்தி    தோஷ பரிகார தலமாகும்.  வில்வார்ச்சனையும், தயிர் அன்ன நைவேத்தியமும் செய்தால் மூளை, மனம் சம்மந்தப்பட்டவை தீரும். அக உடல் தூய்மையடையும். இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர்.  இறைவி பெயர் பெருநலமுலையம்மையார் என்பதாகும்.

2. இலிங்கோற்பவ மூர்த்தி

நான்முகனுக்கு  இரண்டாயிரம்  சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க  சென்றார். உடன் தேவலோகத்தினரும் மகலோகம் சென்றனர். அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி உலக உயிர்கள் அனைத்தையும் அழித்தது. அதனால் உலகம் மறைந்து விட்டது. திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன்  உறங்கினார். இதனை கண்ணுற்ற  அனைவரும்  குழந்தையை ஆராதித்தனர்.    ஆராதனையைக்கேட்டு எழுந்த திருமால் பழைய உலகைத் தேடினார். அது பாதாளத்தில் இருப்பதைக் கண்டார். உடன் வராக அவதாரம் எடுத்து தனது கொம்பினால் குத்திக்கொண்டு வந்து முறைப்படி நிறுத்தினார். பின் பாற்கடலில் நித்திரையில் ஆழ்ந்தார். இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல்  ஆரம்பமானது. அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சபை நிறுத்தி அரசாள செய்தார்.  இடையில் ஏற்பட்ட  சம்பவம் தெரியாததால் , இந்த உலக இயக்கம் தன்னாலே எனக் கர்வம் கொண்டார். தானே முழுமுதற்கடவுள் என்ற  எண்ணத்துடன்  உலகை வலம் வரும் போது பாற்கடலில் யோக நித்திரையில்  திருமால் இருப்பதைக் கண்டு  அவரிடம் சென்று நீ யார்? என வினவினார். அவரோ நான்  உனது  தந்தை என்றார், இதனால்  பெரும்  வாக்குவாதம்  இருவருக்கும் ஏற்பட்டது. அது  யார்  பெரியவர்  என்றளவில்  பெரும்  போரானது. இப் போரினால்  உலக உயிர்கள்  அனைத்தும் வாடின. உடன் நாரதர் தோன்றி நீங்களிருவருமே பெரியவர் கிடையாது. சிவபெருமானே அனைவருக்கும் பெரியவர் என்றுரைத்தார். மேலும் இனியும்    போர் தொடர்ந்தால் ஜோதிரூபமாக சிவபெருமான் தோன்றுவார் என்று கூறி மறைந்தார். இருப்பினும் விடாமல் போர் தொடர்ந்தது. சிறிது   நேரத்திற்குப் பின் பெரும் ஜோதி தோன்றியது, அதிலிருந்து அசரீரீ கேட்டது. உங்கள் இருவரில் எவர் எனது அடியையும், முடியையும்  கண்டு  வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று அசரீரீ கூறியது. உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட, திருமால் வராகமாக மாறி அடியைத் தேட இரண்டுமேக் கிடைக்கவில்லை. இருவரும் சிவனே சரணம் என்று சிவனை அடைந்தனர். மனம் வருந்தினர். உடன் இருவரும்  ஒன்றாக அங்கே ஒரு  சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். உடனே சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும், நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எவனே எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மறைந்தார். வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும். அவர்கள் இருவரும்  வணங்கிய  சிவலிங்கமே  லிங்கோர்பவர் ஆகும்.
திருவண்ணாமலையில்   அருணாச்சலேஸ்வரர்  ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால்  நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது.  நமக்கு வேண்டிய அனைத்தையும்  அளிக்க  வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது. மேலும் இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து  பிரச்சினைகளும்  விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும்  பௌர்ணமி அன்று  கொடுக்க சித்தம் தெளிவடையும் . மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ச்சியான நல்லெண்ணையில் அபிசேகம் செய்தால் வெப்பநோய்கள் நீங்கும்.


3. முகலிங்க மூர்த்தி

சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால்  நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய   முகலிங்கம்  நான்கு வகைப்படும். அவை  ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும். இதில் ஆடயம் என்பது 1001  லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108  லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள்  திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும். ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போல பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று  விளக்குகிறது.     பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை  நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக   உள்ளவன்  இறைவன் அவனையே நாம்  முகலிங்கத்தின்  மூலமாக  தரிசிக்க  முடியும்.
முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது.
1. திருவக்கரை
2. கச்சபேஸ்வரர்
3. கொட்டையூர்
இதில் திருவக்கரையில்   அமைந்துள்ள  சங்கரமௌலீஸ்வரர்  கோயிலில்  முகலிங்கமூர்த்தி  சிறப்பு பெற்றது. எப்படியெனில்  சதுரமான அடி பாகத்தின் மீது அமைந்துள்ள  வட்ட வடிவமான  ஆவுடையாரின் மேல்  மும்முகத்துடன்  மூலவர்  காட்சிக்கொடுக்கிறார். இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால்  அர்ச்சிக்க  விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின்  கட்டளைக்குக்  கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களை  கண்டிப்பாள்.  என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ  காலங்களில்  தும்பைப் பூ  அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும்  செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி. மேலும்  காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது. மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள  கொட்டையூரில்  உள்ளது.  இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த  சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால்  அபிஷேகம் செய்தால்  அனைத்திலும்  ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்

4. சதாசிவ மூர்த்தி

சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் கொண்டவர். இவறுடைய வலக்கையில் சூலமும், மழுவும், கட்வங்கமும், வாளும், பீஜா பூரகமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டு காட்சியளிக்கும். இடக்கையில் நாகம், பாசம், நீலோற்பலம், அங்குசம், டமருகம், வரதம், மணிமாலை, பரிவட்டம் எனக்காணப்படும். இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர். மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர். இவரது இடைப்பாகத்தில் சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரமனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும்  அடங்கியுள்ளனர். இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார். இந்த மூர்த்தி ஈசானம், தத்புருடம், வாமம், அகோரம், சத்யோஜாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது சத்யோகஜாத  முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம்  என்னும் ஐந்து  ஆகமங்களை அருளினார்.
காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார். பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம், நீச்சுவாசம், சுவயம்புவம், ஆக்நேயம், வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம்,  முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார். முடிவில்  அகத்தியருக்காக  ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனும் எட்டு   ஆகமங்களையும் அருளினார். இவரை தரிசிக்க  நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும். இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன. இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார். இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய, அர்ச்சித்த பலன் கிடைக்கும். மேலும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம். இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும் உண்டாகும்.

5. மகா சதாசிவ மூர்த்தி

இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம். அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர். மேலும் இவரைச் சூழ்ந்தவாறு       ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர். இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன. மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும். மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது.  அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இவரை கோயிலுள் காண முடியாது. சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும். மேலும் பல கோயில் விமானங்களில் தான் தரிசிக்க முடியும்.
இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும்  என்பது ஐதீகம். மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம்   ஆரோக்கியம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment