Monday, 29 June 2015

64 சிவ வடிவங்கள் (31)

 சண்டேச அனுக்கிரக மூர்த்தி



திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்தான் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. இவர்களது மகனாக விசாரசருமர் என்பவன் இருந்தான். விசாரசருமர் பிறக்கும்போதே முன்ஜென்ம அறிவின் பயனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். ஏழுவயதில் அவருக்கு உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் தானே அனைத்தையும் உணர்ந்து வேதாகம சொற்படி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஐந்தொழில்கள் செய்து எம்மை வழிநடத்த உரியவர் சிவபெருமான் ஒருவரே என தீர்மானமாக நம்பியிருந்தான். அவ்வாறிருக்கையில் அவனுடன் இருக்கும் ஒரு அந்தணச் சிறுவன் பசுவை அடிப்பதைக்கண்டான் விசாரசருமர். உடன் பசு மேய்க்கும் வேலையை அவனே செய்யலானான். கோமாதாவின் அருமை பெருமைகளை உணர்ந்ததால் அத்தொழிலைச் சிறப்பாகச் செய்தான்

சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான். அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தது. இதற்கிடையே அங்குள்ள மண்ணி ஆற்றங்கரையின் மணல்மேட்டில் உள்ள அத்திமரத்தின் கீழே மணலிங்கம் செய்து கோயில், கோபுரம், மதில் போன்றவற்றை மணலாலே அமைத்து சிவபெருமானுக்கு பூஜைசெய்து பாலபிசேகம் செய்து வழிபட்டு வந்தார். இதனையே தினசரி வாடிக்கையாக்கினார். இதனைக் கண்டோர் ஊர் பெரியோரிடம் முறையிட ஊர் பெரியோர் விசாரசருமனின் தந்தையிடம் முறையிட்டனர். விசாரசருமரின் தந்தை இனி தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார், மறுநாள் அதிகாலை விசாரசருமர் ஆற்றங்கரைக்கு சென்று பூஜித்து பாலபிசேகம் செய்துக் கொண்டிருக்கும் போது அவரது தந்தையார் கண்டு விசாரசருமரின் முதுகில் ஓங்கி அடிவைத்தார். அடியின் வலி உணராமல் சிவபூஜையிலேயே விசாரசருமர் ஈடுபட்டிருந்தார் அதிக கோபமுற்ற தந்தையார் பால் குடங்களை உதைத்துத் தள்ளினார். இதன்பின்னே சுயநினைவு வரப்பெற்ற விசாரசருமர் தந்தையென்னும் பாராமல் அங்கிருந்த ஒரு கொம்பை எடுத்தார். அது மழுவாக மாறியது. உடன் தந்தையாரின் காலை வெட்டினார். உடனே தம்பதி சமேதராய் சிவபெருமான் அங்கு காட்சிக்கொடுத்தார். பின் என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் உன்னைத் தலைவாக்கினோம் மேலும் என்னுடைய அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தும் உனக்கே தந்தோம் என்றபடியே தனது சடாமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு சூட்டி அவருக்கு சண்டேச பதவியை அளித்தார். விசாரசருமருக்கு சண்டேச பதவியை அனுகிரகித்ததால் சிவபெருமானுக்கு "சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.

கும்பகோணம் சேய்ஞலூர் ரோட்டைத் தாண்டி அமைந்துள்ள ஊர் "திருவாய்ப்பாடி ஆகும். இவரது பெயர் பாலுகந்தமூர்த்தி, இறைவி பெயர் பெரியநாயகி என்பதாகும். சண்டேசப் பதவியை அளிக்கும் வல்லமை இவர் ஒருவருக்கே உண்டு. சண்டேஸ்வரனை வணங்கினால்தான் சிவ வழிபாடே முழுமையடையும். இவரை வணங்க மனம் ஒருமைப்படும். வில்வார்ச்சனையும் வெண்சாத நைவேத்தியமும் பிரதோஷம், சோமவாரங்களில் கொடுக்க நல்லறிவு, நல்லெண்ணம் வெளிவரும். மேலும் இம்மூர்த்தியை பஞ்சகவ்யம் கொண்டு வழிபட ஆன்மாவானது தூய்மையடையும்.

Friday, 26 June 2015

64 சிவ வடிவங்கள் (30)

சிம்ஹக்ன மூர்த்தி


இரண்ய கசிபு என்னும் அசுரன் சிவபெருமானிடம் அளவில்லா பக்தி கொண்டவன். அவவெனாரு முறை அசுர குருவான சுக்ராச்சாரியாரின் யோசனைப்படி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். தவத்தில் மெச்சிய சிவபெருமான் அவனுக்கு காட்சிக் கொடுத்து "என்ன வரம் வேண்டுமென்று கேட்க அவனோ ஐம்பூதங்களும், கருவி, வானவர், மனிதர், பறவை, விலங்குகள், இரவு, பகல் என மேற்ச் சொன்ன எவற்றினாலும் நான் இறவாதிருக்க வரம் வேண்டும் என்றான். அப்படியே கொடுத்து மறைந்தார். தான்பெற்ற வரத்தினால் மூவுலகினரையும் அச்சுறுத்தினான். தேவகன்னிகளை விசிறி வீசவும், இந்திரன், நான்முகன் போன்றோர் தினசரி வந்து தன்னை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் தன்னைத் தவிர மற்றவர்களை வணங்கக் கூடாது என்றும் ஆணையிட்டான். அவனுக்கு பயந்து அனைவரும் "இரண்யாய நமஹ கூறினர். ஆனால் அவனது மகனோ "ஸ்ரீ நாராயணாய நமஹ என்றான். இதனால் ஆத்திரமடைந்த இரண்யன் பிரகலாதனுக்கு பலவித தொல்லைகளையும், கொலை முயற்சியும் செய்தான். ஒன்றுமே பலிக்கவில்லை. அனைத்திலுமே நாராயணன் காத்தருளினார். மகனான பிரகலாதன் சதாசர்வ காலமும் நாராயணனை பூஜிப்பதால் ஆத்திரம் அடைந்த இரண்யன் ஒருநாள் "எங்கே இருக்கிறான் உன் நாராயணன் ? என்றுக் கேட்டார். இதோ தூணில் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்றான். இதோ இந்தத் தூணில் இருக்கிறாரா உன் நாராயணன் என்றபடியே தூணைப் பிளந்தான். பிளந்த தூணின் உள்ளிருந்து நரசிம்மர் தோன்றினார்.

மாலை நேரத்தில் மனிதனும் அல்லாது, மிருகமும் அல்ல நரசிம்மமாகத் தோன்றி இரண்யனைக் கொன்று அவன் குடலை மாலையாக்கிக் கொண்டார். அவனது இரத்தம் குடித்தார். இதனைக் கண்ட அனைவரும் பயந்தனர். அசுரனின் இரத்தம் குடித்த வெறியால் நரசிம்மர் மனிதர்களையும் உண்ணத் தொடங்கினார். இதனைச் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் இருதலை, இருசிறகுகள், கூர்மையான நகம், எட்டுக்கால்கள், நீண்டவால், பேரிரைச்சலை உண்டுபண்ணியபடி "சரப அவதாரமாக மாறினார். பின் நரசிம்மரை அணுகினார், இடிமுழக்கம் போல் கத்தியபடி நரசிம்மிரின் தலையையும், கைகளயும் துண்டித்து அதன் தோலை உரித்து தன்னுடலில் போர்வையாக அணிந்து கொண்டு கையிலையை அடைந்தார். பின் சிவபெருமானை வணங்கி சாந்தப்பட்ட திருமால் வைகுண்டம் அடைந்தார். இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மத்தின் அகந்தையை அழிக்க சிவபெருமான் கொண்ட காலமே "சிம்ஹக்ன மூர்த்தி யாகும்.

அவரை தரிசிக்க கும்பகோணம் அருகேயுள்ள "திர்புவனம் செல்ல வேண்டும். இங்கேயுள்ள சரபமூர்த்திக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றி சகஸ்ரநாமம் சொல்ல திருமணம் கைகூடிவரும். தடைகள் விலகிடும். அவர் முன்பு சரப யாகம் செய்தால் விலகிடுவர். சென்னையிலுள்ள கோயம்பேட்டிலுள்ள சரப மூர்த்திக் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகுகாலங்களில் இங்குள்ள சரப மூர்த்தியை வழிபட்டால் நினைத்து நடைபெறுகிறது, பதவி உயர்வு கிடைக்கிறது குடும்ப அமைதி பெருகுகிறது. இவர்க்கு திராட்சை ரச அபிசேகம் செய்ய திடவான உடல்வாகு கிடைக்கும். செந்நிற தாமரைமலர் அர்ச்சனையும், பானக நைவேத்தியமும் பிரதோஷம், திங்கற்கிழமையில் கொடுக்க வெற்றி, தடைஅகன்று விடும். சந்தோஷமான அமைதியான குடும்ப வாழ்வு ஏற்படும்.

Thursday, 25 June 2015

64 சிவ வடிவங்கள் (29)

பிட்சாடன மூர்த்தி



தாருகாவனத்து முனிவர்கள் சிவபக்தியை விட யாகமே சிறந்தது என்று மமதையில் எண்ணற்ற யாகங்கள் செய்யலானார்கள். அவர்கள் மமதையை அடக்க சிவபெருமான் எண்ணினான். தன்உடன் திருமாலை அழைத்து முன்னொறு முறை எடுத்த மோகினி உருவத்துடன் வரவேண்டினார். திருமாலும் அக்கணமே மோகினியாக மாறினார். சிவபெருமானும் கபாலமும், சூலமும் கையில் கொண்டு பிட்சாடனராக மாறினார். இருவரும் தாருகாவனம் அடைந்தனர். அவ்வனத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் மோகினியைக் கண்டு ஆசைக் கொண்டு அவரது பின்னாலே அலைந்தனர். இதற்கிடையே சிவபெருமான் முனிபத்தினிகள் வசிக்கும் வீதியில் பிச்சை கேட்கும் பிட்சாடனராக மாறி, ஓசையுடன் பாடியவாறே சென்றார். இவ்வோசையைக் கேட்ட முனிபத்தினிகள் அவரையும், அவரது பாடலையும் கேட்டு மயங்கினார். சிலர் அவர் மேல் காதல் வயப்பட்டனர். இதனால் முனிபத்தினிகளின் களங்கமற்ற கற்பு களங்கமுற்றது. மோகினியால் தவநிலை இழந்த முனிவர்கள் வீடுவர, இங்கே பிட்சாடனரால் நெறிதவறிய தன் மனையை நோக்கிய முனிவர்கள் இதற்கெல்லாம் காரணம் என்னவென்று அறிய விரும்பினார். மேலும் பிட்சாடனரின் பின்னாலே தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த முனிவர்களின் பத்தினிகள் ஒருவாறு மயக்கம் தெளிந்து கணவனுடன் இணைந்தனர். பின்னர் மோகினியான திருமாலும், பிட்சாடனரான சிவபெருமானும் திருத்தளிச்சேரி எனும் ஊரில் மறைந்தருளினர்.

பின்னர் சிவபெருமானை அழிக்க எண்ணிய முனிவர்கள் அபிசார யாகம் இயற்றி, அதிலிருந்து வெளிவரும் பொருளினால் சிவபெருமானை கொல்ல ஏவினர். ஆனால் அவர் அவற்றையெல்லாம் ஆடையாகவும், ஆபணமாகவும் அணிந்துக் கொண்டார். அதன்பின் இருவரும் கையிலை சென்றார்கள். 

தாருவன முனிவர்களின் தவத்தையும், முனிபத்தினிகளின் கற்பையும் சோதிக்க சிவபெருமான் எடுத்த உருவமே  பிட்சாடன மூர்த்தி யாகும். அவரை தரிசிக்க நாம் வழுவூர் செல்ல வேண்டும் மயிலாடுதுறையருகே உள்ள இவ்வுரிலே தாருகாவனத்து முனிவர்களின் மமதயை அடக்க சிவபெருமான் பிட்சாடனராக எழுந்தருளினார். இவரை வணங்க பேரின்ப வழியையும், விருப்பு வெருப்பற்ற வாழ்க்கையயும் அடையலாம். சந்நியாசிகளும், முனிவர்களும், ரிஷிகளும் இந்தப் பிட்சாடனரை மனப்பூர்வமாக வணங்கினால் சித்திக் கிடைக்கும். மேலும் வில்வார்ச்சனையும், தேங்காய் நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் செய்ய எதிரிகளின் கர்வம் அழியும். யாரையும் வெல்லும் வசியமுண்டாகும். இந்த பிட்சாடனமூர்த்திக்கு அன்னாபிசேகம் செய்ய பேறு பெற்ற பெருவாழ்வு தித்திக்கும்

Wednesday, 24 June 2015

64 சிவ வடிவங்கள் (28)

கேசவார்த்த மூர்த்தி



முன்னொரு காலத்தில் திருமால் சிவபெருமானை நோக்கி தவமியற்றினார். சிவபெருமான் திருமாலின் தவத்தினால் மெச்சி என்ன வரம் வேண்டும் ? என்றுக் கேட்டார். உடன் திருமாலும் தேவர்களும், அசுரர்களும் மயங்கத்தக்க மாயை தனக்கு வேண்டும்மென்றும், தேவர்களும் அழிக்கமுடியாதபடியான வல்லமையும் வேண்டுமென்றார். சிவபெருமான் கேட்ட வரங்களைத் தந்துவிட்டு திருமாலை மாயன் என அழைத்தார். நீயே என் இடபுறமாக இருப்பாய் என்று மறைந்தார். அத்தகைய வரம்பெற்ற திருமாலே பராசக்தியாகவும் பார்வதியாகவும் ஆணுருக் கொள்கையில் திருமாலாகவும், கோபமுற்ற நிலையில் காளியாகவும், போர்க் காலங்களில் துர்க்கையாகவும் விளங்குகிறார். 

ஒருமுறை உமாதேவியார் சிவபெருமானை குறித்து சிறந்த தான சோமவார விரதம் மேற்கொண்டார். பின் விரதம் முடிந்து அன்னதானம் நடைபெறும் போது அவரது தவச் செயலை நேரில் காண சிவபெருமான் வேதியராகவும், அவரருகே பெண்ணுருவில் திருமாலும் மாறி, தவச்சாலைக்கு வந்து விரதத்தில் மகிழ்ந்து இருவரும் சுயரூபம் காட்டினர்.
அதாவது சிவம் வேறு, திருமால் வேறல்ல. திருமாலே சிவசக்தியாகும். ஆண்பாகம் வலதாகவும் பெண்பாகம் இடதாகவும் உள்ளக் காரணத்தால் சிவனிலிருந்து பிரிந்தவரையே நாம் திருமால் என்போம். இத்தகைய சிறப்புப் பெற்ற இருவரையும் நாம் எப்படிப் பார்க்கலாமெனில் வலப்புறம் மான், மழு தாங்கியுள்ளவர் சிவனென்றும், இடபுறமாக சக்கராதாரியாக உள்ளவர் திருமாலென்றும் அவ்விருவரும் இணைந்துள்ள நிலையை நாம் சங்கர நாராயணன் என்றும் கூறுவோம். 

இத்தகைய சிறப்பான கேசவனைப் பாதியாகவும், தான் பாதியாகவும் அமைந்துள்ள திருவுருவத்தையே நாம் கேசவார்த்த மூர்த்தி என்போம். இத்திருவுருவத்தை அரிகரம் என்னும் இடத்தில் காணமுடியும். இங்கு நாம் தரிசிக்கப் போவது சங்கர நாராயணனை. நெல்லை  செல்லும் வழியில் உள்ளது சங்கரன் கோயில். இங்குள்ள இறைவன் சங்கர நாராயணன் இறைவி கோமதி அம்மையார். இங்குள்ள இறைவனை வேண்ட எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும், மேலும் முழுக்குணம் பெற்றதும் பாதிக்கப்பட்ட பகுதியாக கிடைக்கும் அங்கப்பொருட்களை (உதாரணம் கை-கால்) <உண்டியலில் சேர்க்கின்றனர். இந்த இறைவியின் எதிரேயுள்ள கருங்கல் தரையில் ஆறு அங்குல வட்டமுடைய குழி போன்ற அமைப்பு உள்ளது. அதில் அமர்ந்து சிவதியானமோ, தியானமோ செய்ய குண்டலினி பகுதிக்கு ஒருவித ஈர்ப்பு கிடைக்கின்றது. இங்கு புற்றுமண்னே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றது. வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், புதன் அல்லது சோமவாரங்களில் செய்ய மறுபிறவியிலும் மோட்சம் கிட்டும். மேலும் இங்குள்ள தெப்பத்தில் உள்ள மீனிற்கு பொரியும், யானைக்கு வெல்லமும் கொடுத்தல் வேண்டும். உடல்ஊனமுற்ற சாதுக்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு இறைவனை வணங்கினால் கடுமையான நோய் விலகும் என்பது ஐதீகம்

Monday, 22 June 2015

64 சிவ வடிவங்கள் (27)

கங்காள முர்த்தி



ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி.  எனவே அவ்வெலிக்கு திரிலோகமும் ஆட்சி செய்யும் அமைப்பை வழங்கினார் சிவபெருமான்.  அவ்வெலி மாவிலி(மகாபலி) மன்னன் என்ற என்ற பெயருடன் அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியைக் கண்ட தேவர்குலம் மாவிலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் ஆகப்பிறந்தார். மாவிலி அசுரனாக இருந்தாலும் தானதர்மங்களிலும், யாகங்கள் இயற்றுவதிலும் சிறந்தவனாக விளங்கினான். இந்நிலையில் வாமனன் மாவிலி அரண்மனைக்குச் சென்று மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமாலே எனவே தானம்தர ஒப்புக்கொள்ள வேண்டாமென அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தடுத்தார். இருப்பினும் கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற மாவிலி தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். 

அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்தில் அமிழ்ந்தான். மாவிலியை அழித்த திருமால் மிக்க கர்வம் கொண்டு மனிதர்களையும், தேவர்களையும் வம்பிற்கிழுத்தார். இதனால் பதற்றமடைந்த தேவர்குலம் கையிலை மலைக்கு சென்று நந்திதேவரின் அனுமதியுடன் சிவபெருமானை சந்தித்து விவரம் கூறினர். சிவபெருமான் வாமனரை சந்தித்து அமைதி கொள்ள வேண்டினார் ஆனால் கர்வமடங்காத திருமாலுக்கு பாடம்புகட்ட எண்ணினார். தன் திருக்கை வச்சிரதண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்தார் வாமனன் நிலம் வீழ்ந்தார். உடன் அவனது தோலை உறித்து மேல் ஆடையாக்கி,முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டு தேவர் துயர் துடைத்தார். கர்வம் ஒழிந்த திருமால் சிவபெருமானிடம் வாமன அவதாரத்தின் நோக்கம் பற்றிச் சொல்லி மன்னிப்புக் கேட்டு வைகுண்டம் சென்றார். பின்னர் மாவிலி மன்னனும் மோட்சமடைந்தார். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி என்றழைக்கப்படுகிறது (கங்காளம் - எலும்பு).

சீர்காழியில் கோயில் கொண்டுள்ள சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். இறைவி பெயர் பெரியநாயகி திருநிலைநாயகியாகும். இங்குள்ள சுகாசனமூர்த்தியை வணங்கி அர்ச்சித்தால் வியாழன் தொடர்புடைய தோஷங்களும் தீரும். தொழில் வளர்ச்சி பெருகும். நல்ல நிர்வாகத்திறமை வெளிப்படும். இவருக்கு நந்தியவர்த்த அர்ச்சனையும், சித்திரான்ன நைவேத்தியமும் பௌர்ணமி சோம வாரங்களில் கொடுக்க கேது தோஷம் தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் இங்குள்ள மூர்த்திக்கு தர்பை நீரால் அபிசேகம் செய்தால் யோக சித்தி கிடைக்கும்.

Sunday, 21 June 2015

64 சிவ வடிவங்கள் ( 26)

பாசுபத மூர்த்தி



பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன் என் மகனைக் கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன் அல்லவெனில் உயிர் மாய்ப்பேன் என சபதம் செய்தான். அப்போது மைத்துனனும், தேரோட்டியும், தோழனுமான கண்ணன் அவனைத் தனியாக அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ச்சுனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அவனும் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ணமாட்டேன் என்றான். கண்ணன் இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்றான். அர்ச்சுனன்னும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான். அவனது கனவில் கண்ணன் வந்தான், வந்து மைத்துனா ! சிந்து மன்னனை அழிக்க நாம் கையிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விட வேண்டும் என்றான். இருவரும் கையிலை சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ச்சுனன் அர்ச்சித்த மலர்கள் இருந்தன. இதனைக் கண்ட அர்ச்சுனன் மகிழ்ந்தான். பின்னர் சிவபெருமான் தடாகத்திலிருந்து எதிரியை அழிக்க வல்ல பாசுபதத்தை கொடுத்து (முஷ்டி நிலை என்பது நினைவாலும் மறவாத தன்மை) இருவரும் சிவபெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர்.

சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார். உடன் இருவரும் சிவபெருமானை வலம் வந்து தங்கள் நினைவுலகம் வந்து சேர்ந்தனர். அர்ச்சுனன் இவ்வாறு கனவு கண்டு உடன் கண் விழித்துப் பார்க்கையில் தன்னுடைய அம்பறாத்தாணியில் புது வகையான அம்பு அதாவது பாசுபதம் இருப்பதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டுமொரு முறை சிவபெருமானையும், கண்ணனையும் வணங்கினான். அர்ச்சுனனும் அன்றே சிவபெருமான் கொடுத்த பாசுபதத்தினால் சயந்திரனைக் கொன்று சபதத்தை நிறைவேற்றினான்.

 கண்ணனும், அர்ச்சுனனும் வேண்டிய வண்ணம் பாசுபதத்தை அருளிய நிலையிலுள்ள மூர்த்தமே பாசுபத மூர்த்தி யாகும். குடவாசல் அருகே உள்ளது கொள்ளம்புதூர். இங்குள்ள இறைவன் பெயர் வில்வவனநாதர், இறைவி பெயர் சௌந்தர நாயகி என்பதாகும். இத்தல இறைவனை நாள்தோறும் வணங்கினால் பிறவிப் பெருங்கடல் நிந்தி இறைவனை அடையலாம்.சிவப்பு நிற மலர் அர்ச்சனையும், மஞ்சளன்ன நைவேத்தியமும், வியாழன், செவ்வாய் கிழமைகளில் கொடுக்க எதிரி நீங்குவர், கடன் தொல்லைத் தீரும். மேலும் இங்குள்ள இறைவனை கும்பநீரால் அபிஷேகம் செய்ய பிறவிப் பயன் எய்துவர்.

Saturday, 20 June 2015

64 சிவ வடிவங்கள் (25)


சார்த்தூலஹர மூர்த்தி



தாருவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களை மோகினி அவதாரமெடுத்த திருமால் சோதித்தார். அம்முனிவர்களின் ரிஷிபத்தினிகளை பிட்சாடன அவதாரமெடுத்து சிவபெருமான் சோதித்தார். இதனையெல்லாம் ஞானதிருஷ்டியில் கண்ட முனிவர்கள் வேள்வியால் சிவபெருமானை அழிக்கமுடிவு செய்தனர். எனவே பிறர்க்கு தீங்கு செய்யக்கூடிய அபிசார ஹோமம் வார்த்தனர். அதிலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி வந்தது. அதனைக் கொண்டு சிவபெருமானிடம் ஏவினர். அதனை அடக்கிய சிவபெருமான் அதனைக் கொன்று தோலினை ஆடையாக்கினார். மீண்டும் எவற்றையும் எதிர்க்கும் இணையில்லா மழு எனும் ஆயுதத்தை ஏவினர். அதனை சிவபெருமான் தனது படையாக மாற்றினார். பின் மான் வான் மார்க்கமாக உலகமே அச்சுறுத்தும்படி வந்தது. அதைத்தனது இடக்கரத்தில் ஏந்தினார். பின் நாகம் வந்தது அதனை ஆபரணமாக்கி அணிந்துக் கொண்டார். பின் அடக்கமுடியாத பூதகணங்களை ஏவினர். அவையும் சிவபெருமானின் படைப்பரிவாரமாகின. பின்னர் வெண்ணிற மண்டையோடு உலகமே அதிரும்படி வந்தது. அதை அடக்கி தன் தலையில் அணிந்தார்.

பின்னர் கர்ணகடூர ஓசையுடன் துடி (உடுக்கை) அனுப்பினர். அதனை தனதாக்கினார். பின் முயலகனை ஏவினர். அதனைக்கண்ட சிவபெருமான் நெருப்பைக் கையில் ஏந்தியபடி முயலகனைத் தன் காலினால் நிலத்தில் தள்ளி அதன் முதுகில் ஏறி நின்றார். இனியும் சிவபெருமானை ஒன்றும் செய்ய இயலாது என்<றுணர்ந்த முனிவர்கள் திகைத்தனர். முண்டகன் அசைந்ததால் சிவபெருமான் நடனம் ஆட ஆரம்பித்தார். இதனைக் கண்ட முனிவர்கள் அவரைச் சரணடைந்தனர். சிவபெருமான் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி ஆசி கூறி அனுப்பினார். பின் அவரவர் இருப்பிடம் திரும்பினர். 

முனிவர் ஏவிய புலித்தோலை ஆடையாகக் கொண்ட கோலத்தை நாம் சார்த்தூலஹர மூர்த்தி என்கிறோம். மாயவரம் அருகே அமைந்த வழுவூரில் தான் தாருவனத்து முனிவர்கள் ஏவிய புலியை அடக்க இங்கு சிவபெருமான் தோன்றினார். இங்குள்ள மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் உள்ளது. அதற்கு சந்தன காப்பிட்டு வழிபட பில்லி, சூனிய செய்வினை முறியும். ஏழு பிரதோஷம் இறைவனுக்கு அபிசேக ஆராதனை செய்ய இழந்த சொத்துக்கள் மீண்டும் கைவரும். தும்பை, வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இம்மூர்த்திக்கு ருத்திராட்ச அபிசேகம் செய்ய செய்வினை அக<லும் முடியும்.

Wednesday, 17 June 2015

64 சிவ வடிவங்கள் (24)

 ஜ்வராபக்ன மூர்த்தி




மாபலி மன்னனின் மகன் வாணாசுரன். அவனுக்கு  ஆயிரம் கைகள் உண்டு. அவனது மனைவி   சுப்ரதீகை. அவன் நர்மதை  நதியோரத்தில்  ஒரு சிவலிங்கம் அமைத்து  அதற்கு தினமும்  ஆயிரம் முறை  அர்ச்சனை செய்து  வந்தான். சிவபெருமான் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு உலகம் முழுவதும் அரசாட்சி செய்யவும், நெருப்பினால் ஆன மதில் சுவரும், அழிவற்ற நிலையும், தேவர் அடித்தாமரை  அன்பும் வேண்டுமெனக் கேட்டான்.  அதன்படியே கொடுத்தார். இதனால் உலகம் முழுவதையும் தன் வசம் கொண்டான். மீண்டுமொருமுறை சிவபெருமானை தரிசிக்க விரும்பி வெள்ளிமலை அடைந்தான்.  அங்கு  ஆயுரம் கைகளிலும் குடமுழா வாசித்தான். மீண்டும்  சிவபெருமான்  என்ன வரம் வேண்டும் என்று கேட்டதிற்கு   இறைவா தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்தில் வசிக்க வேண்டும் என்றுக் கேட்டான்.  பின் சிவபெருமான்  குடும்ப சமேதராய் அவனது மாளிகையிலேயே  வாழ்ந்து வந்தார். இந்நிலையில்  வாணாசுரன் தேவர் உலகத்தினர் அனைவரையும் போருக்கு  இழுத்து தோற்கடித்ததால்  அனைவரும் ஓடி விட்டனர். எøவே தன்னுடன்  போர்புரியும் படி சிவனை அழைத்தான் . சிவனோ எனக்கு பதிலாக கண்ணன் வருவான் என்றார். கண்ணன் எப்பொழுது வருவான்? என்று கேட்டார். சிவனும் உன் மகள் கண்ணன் மகனை விரும்புவாள்  அந்த செய்தி கிடைக்கும் போது வருவான் என்றார். அதன்படி நடைபெற்றது. 

வாணாசுரனின் மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தக்கும் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த கண்ணன் வாணாசுரனுடன் போர்புரிய வந்தான். முதலில் உள்ள வாசலில் விநாயகனை வணங்கினான்.  இரண்டாம் வாசலில் முருகனை வணங்கினான். மூன்றாம் வாசலில் உமாதேவியரிடம் ஆசி வாங்கி உள் சென்றான். அங்கே நான்காவது  வாசலில் சிவபெருமானை கண்டான். உடன் சிவபெருமான் சண்டைக்கு கண்ணனை அழைத்தார்.
கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் தேற்றி, வாணாசுரனிடம் நடைபெறும் சண்டையில் நீயே வெல்வாய், அதற்கு முன் எண்ணிடம் போர் புரி என்ற படியே இருவருக்கும் போர் நடைபெற்றுக் கொண்டே யிருந்தது.  எத்தனைக் காலமேன யாராலும் சொல்ல முடியாத படி நீண்டது. முடிவில்  சிவபெருமான் ஒதுங்க போர்  நின்றது. 

பின் வாணாசுரனுடன் படு பயங்கரப் போர் நடைப்பெற்றது. இறுதியில்  அவனது கரங்கள் ஒவ்வொன்றும் துண்டானது. சிவனை தொழுத கைகள் மட்டும் வெட்டாமல் விடப்பட்டது. மனமாறிய வாணாசுரன்  மன்னிப்பு வேண்ட, மன்னிக்கப்பட்டு  மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. அவன் மறுபடியும் குடமுழா வாசிக்க பணியமர்த்தப் பட்டான். அவனது மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கண்ணன் - சிவபெருமான் இடையே நடைபெற்ற போரில் தொடுத்த  சீதள சுரத்தை, சிவபெருமான் விட்ட உஷ்ண சுரமானது  ஒரு கணத்தில் வென்றது. அது மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழிகள், மூன்று  கால்களுடன் இருந்தது. 

தீராத  சுரம் கண்டோர் இந்த வடிவை வணங்க சுரம் குறையும். இவ்வுருவமே ஜ்வராபக்ன மூர்த்தி யாகும்.  அவரை  நாகபட்டிணம் அருகேயுள்ள சாட்டியகுடியில் காணலாம்.  வேதநாயகி இறைவி திருநாமமாகும். வெப்ப நோய்க்குரிய தேவதை  ஜ்வர தேவர்  ஆவார்.  இங்குள்ள அவரை வணங்க  வெப்ப நோயின்  தீவிரம் குறையும். வெள்ளை அல்லி அர்ச்சனையும்,  சுக்கு கசாய நைவேத்தியமும்  புதன் சோம வாரங்களில் கொடுக்க நோய் தீரும். மேலும் இறைவனுக்கு  பசுந்தயிர்  அபிசேகம் செய்ய  சுரம் குறையும்

Monday, 15 June 2015

64 சிவ வடிவங்கள் (23)

 கஜயுக்த மூர்த்தி




கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் ஏற்றவன். அவன் மேருமலையின் மேல் நான்முகனை நினைத்து கடும்தவம் மேற்க்கொண்டான்.  உடன் நான்முகன் தோன்றினான் கயாசுரன் யாராலும்  அழிவில்லா  நிலையும் எதிலும்  வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும்  எதிர்ப்பாயானால் நீ இறப்பாய்  என்ற கடுமையான தண்டனையும் கிடைத்தது. அவன் தனதுவேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான். 

இந்திரனும் அவனிடம்  போரிட முடியாமல் தோற்றான்.  உடன்  அவனது வாகனமான ஐராவத்தின் வாலைப் பிடித்திழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான்.  பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அவரைத் தேடி காசிக்கு சென்றனர். அங்கே யொரு ஆலயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடன் வீற்றிருந்தார்.  வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான்  முன்  இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் வாங்கிய தயாசுரன்  இங்கு வந்து கொண்டுள்ளான்.  அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும் என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதது சிவபெருமான் என்பதை  அக்கணத்தில்  மறந்தான். ஆலயவாசல் முன் நின்று  அனைவரும் பயப்படும் படியாக  கர்ண கொடுரமாக சத்தமிட்டான்.  இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே  தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார். அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீ சுவாலைகள் தெரித்தது.

கயாசுரனை தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது  தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே  தனது நகங்களால்  பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச்சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார்.  அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்த மடைந்தார். கயாசுரனின் தொல்லை நீக்கப் பெற்றோர் நிம்மதியுடன் தங்களது இருப்பிடம் சென்றனர். 

கஜாசுரனுடன் சண்டையிட்டு  வென்றதால்  அவரது பெயர்  அவரது பெயர்  கஜயுக்த மூர்த்தி யாகும்.   அவரை தரிசிக்க திருவழுவூர் செல்ல வேண்டும்.  இங்கே  தாரகாபுரத்து  முனிவர்கள்  யாகத்தில் தோன்றிய  யானையைச்  சிவனாரே  அழிக்க ஏவினார். சிவபெருமான் இதனால் அணிமாசித்தி மூலம் யானையின் உடலில் சென்று, பின் உடலைக் கிழித்தப் படி வெளி வந்தார்.  எனவே அவரை  கஜசம்கார மூர்த்தி என்றும்  அழைப்போம். இங்குள்ள கஜசம்ஹார மூர்த்திக்கு  அபிசேக ஆராதனை செய்ய  சனீஸ்வர தோஷம் விலகும். ஏழரை சனியின்  கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 12 அமாவாசை  காலையில் விஸ்வ ரூப தரிசனம் பார்த்தால்  குழந்தை  பாக்கியம் கிட்டும். அருகம்புல் அர்ச்சனையும், பாயாச நைவேத்தியமும் சோம வாரங்களில்  கொடுக்க   எதிரி தொல்லை தீரும். கஜசம்கார மூர்த்திக்கு  எழுமிச்சை சாறு அபிசேகம் செய்தால் மரண பயம் தீரும்.

Sunday, 14 June 2015

64 சிவ வடிவங்கள் (22)


அர்த்த நாரீஸ்வர மூர்த்தி


திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க முனிவர்கள் ,கந்தருவர்கள் , ரிஷிகள் , இந்திரன் என அனைத்து தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார்.  அனைவரும் பார்வதி தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர்.  பின்னர் வந்த முனிகுமாரர்களில்  ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை சட்டைச் செய்யாமல்   சிவபெருமானை மட்டுமே வணங்கிய படிச் சென்றார். இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி  அவரது உடலிலுள்ள சதையை (சக்தியை ) தனது மூச்சுக் காற்றால்   இழுத்துக் கொண்டார்.  இதனையும் சட்டை செய்யாத பிருங்கி முனிவர் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார்.

 சிவபெருமான் தன்னை மட்டும் வணங்கியதால்  பார்வதிதேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து மேலும் ஒரு காலை முனிவருக்கு வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி வினாயகன், முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது நின்றவாறு தவம் இயற்றினார். கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு வந்தார்.  உடன் அவர் தேவி  உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். உடன் தேவி இறைவா   நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை. எனவே தங்களது இடபாகமாக  நானிருக்கும்படியான வரத்தைத் தாருங்கள் என்றார்.

சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். வலப்பக்கம் சிவனுமாக, இடப்பக்கம் பார்வதியாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தி யாகும்.  

அவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருச்செங்கோடாகும். ஈரோடு  அருகேயுள்ள இத்தலம்  சிவபெருமானுடையது என்றாலும் இளைய பிள்ளையாரான முருகனுக்கு உகந்தது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர்  அர்த்த நாரீஸ்வரர், இறைவி பெயர் பாகம்பிரியாள் என்பதாகும்.  ஆணாகவும், பெண்ணாகவும் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார். கணவன் - மணைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்  கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்த மூர்த்தியை வணங்கினால்  கைகூடும். வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் கொடுக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு  பசும்பால்  அபிசேகம் செய்தால்  குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும்.

Saturday, 13 June 2015

64 சிவ வடிவங்கள் (21)

 கல்யாண சுந்தர மூர்த்தி




திருக்கைலையில்  அனைத்து  தேவர்குழாமுடன்  சிவபெருமான்  வீற்றிருக்கையில்  பார்வதி  தேவியார் எழுந்து இறைமுன்  சென்று  தக்கன்  மகளால்  தாட்சாயிணி  என்ற பெயர்  பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார்.  உடன்  சிவபெருமானும்  பார்வதி பர்வத மன்னன்  உன்னை  மகளாக அடைய  தவம்  இயற்றுகிறான். நீ அவரிடம்  குழந்தையாக  பிறப்பாயாக. பிறகு உன்னை நான் மணமுடிப்பேன் என்றார். அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று  வயதுள்ள குழந்தையாக  வந்து சேர்ந்தார். அக்குழந்தையை  அவர்கள் சீராட்டி  வளர்த்தனர். பார்வதிதேவி   அருகில் இல்லாததால்  சிவபெருமான்  யோகத்தில்  இருந்தார். அதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. உடன் தேவர்களின்  ஆலோசனைப்படி  மன்மதன்  சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க  பாணம் விட்டார். இதனால் கோபமுற்ற  சிவபெருமான்  அவரை நெற்றிக் கண்ணால் எரித்தார். இதனால் கவலையுற்ற  ரதி சிவனிடம்  சரணடைந்தார். அவரும் பொருத்திருக்கச் சொன்னார்.

இதற்கிடையே பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி சிவனை மணாளனாக  அடைய வேண்டித் தவமிருந்தார். பார்வதி முன் அந்தணராகத்      தோன்றி  தன்னை மணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து  சிவபெருமானை  மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில்  வந்து மணம் புரிவேன் என்று கூறி மறைந்தார்.  பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்தரிஷிகளிடம்  தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார்.  இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் மணநாளாக குறிக்கப்பட்டது. தேவருலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வடதிசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான்  அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அவர் தயங்கவும் உமக்கு எம் திருமணக்கோலத்தை காட்டுவோம் எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறு சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது ரதி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே மன்மதனை உயிர்ப்பித்தார். பின் ரதியின் கண்களுக்கு மட்டும் உருவத்துடனும், மற்றொர்க்கு அருபமாகவும்  காட்சியளிக்கும் படி வேண்டினார். பின் அவரவர், அவரவர் இருப்பிடம் திரும்பினர்.

பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே  கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.  அவரை தரிசிக்க தாம் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையாகும். இங்கு மூலவர் பெயர்  விழியழகர், இறைவி பெயர்  சுந்தர குஜாம்பிகை யாகும். இங்கு உற்சவ மூர்த்தியாக  கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார்.  இங்குள்ள கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்த  மாங்கல்யத்தை தானமாகப் பெற, கொடுக்க திருமணம் தங்குதடையின்றி  நடைபெறும்.  மேலும் பிரதோஷ தரிசனமும் சிறப்பானதாகும். மல்லிகைப்பூ  அர்ச்சனையும், சர்க்ககரைப் பொங்கல் நைவேத்தியமும்  திங்கள், குருவாரங்களில் கொடுக்க திருமணத்தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மேலுமொரு சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு ரோஜாமாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் கல்யாணம் இளம்பெண்களுக்கு கூடி வரும்.  இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான்  உமை திருமணக்கோலம் உள்ளது.

Friday, 12 June 2015

64 சிவ வடிவங்கள் (20)

திரிபுராந்தக மூர்த்தி




தாரகாசுரனின் மூன்று மகன்களும் நான்முகனை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். நான்முகனும் காட்சிக் கொடுத்தார் உடன் அவர்கள் என்றும்  அழியாத வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது முடியாத காரியம்  அனைவரும் அனைவரும் ஒரு நாள் அழிந்தே  தீருவோம்.  எனவே மோட்சமாவது  கேளுங்கள் கிடைக்கும். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே என்றார். உடனே அம்மூவரும்  அப்படியானால்  பொன், வெள்ளி, இரும்பினால்  ஆன சுவருடைய  முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும்.  அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர்.  நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் சுயரூபத்தை சிவனிடம் காட்டாமல்  மற்ற அனைவரிடத்திலும்  காட்டினர். தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல்  திருமாலிடமும், இந்திரனிடமும் முறையிட, அவர்கள் அசுரர்களிடம்  தோற்று திரும்பினர். பின்னர் சிவனை நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்கள்  தமது அடியார்  எனவேக் கொல்ல முடியாது என்றார்.  மீண்டும் கடுமையான தவத்தை  திருமால், இந்திரன், நரதர் மேற்க்கொண்டனர்.  உடன் சிவபெருமான்  அப்படியானால்  தேர் முதலான பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார். 

தேவர்களும் அவ்வாறே தயார் செய்தனர்.  தேரில் மந்திர மலையை அச்சாகவும்,  சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி  உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான்  பார்வதியுடன்  இடபவாகணத்தில்  இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன்  தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார்.  ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும்  முதற்கடவுளை வேண்ட,  தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள்  படைசூழ, இந்திரன், திருமால், முருகன்,  வினாயகன் என அனைவரும் தங்களது வாகனம் ஏறி  முடிவில் அனைவரின்  எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை  அம்பாகக் கொண்டு  நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும்  பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார்.  முப்புறங்களும்  எரிந்து சாம்பலாயின.
உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க. அவரும்  அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். 

தேவர்களின்  துயர்துடைத்து முப்புரங்களையும் எரித்ததால்  சிவபெருமானுக்கு  திரிபு ராந்தக மூர்த்தி  என்னும் பெயர் ஏற்பட்டது.  

இவரை தரிசிக்க நாம் செல்ல வேணடிய தலம் கடலூரில் உள்ள  திருஅதிகையாகும். இங்குள்ள  இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர்  திரிபுரசுந்தரியாகும். இவர்க்கு கெடில  நதியால்     அபிசேகமும்  வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து  நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின்  இந்த  சுவாமியை  வழிபட  நோய் குறைந்து  உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள  சிவபெருமானுக்கு  திருமஞ்சனத்தூள்  அபிசேகம்  செய்ய  எவ்வகை  நோயும் குணமடையும் என்பது  ஐதீகம்

Thursday, 11 June 2015

64 சிவ வடிவங்கள் (19)


கங்கா விசர்ஜன மூர்த்தி




சகரன் எனும் அரசன் அயோத்தி நகரை ஆண்டுவந்தான். அவன் அஸ்வமேத யாகம் செய்ய ஒரு  குதிரையைக் கொணர்ந்தான். அக்குதிரை  இருந்தால்  தானே யாகம் நடைபெறும் அதைத் தடுக்க வேண்டி குதிரையை பாதாளத்தில் கபில முனிவர் அருகே கட்டி வைத்தான்.  அயோத்தி மன்னன் குதிரையைத்தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மக்களையும் பணிந்தார். பாதாளத்தில் முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள்  முனிவரே  கள்வன் என முடிவு கட்டினர். உடன் முனிவர்  கண்விழிக்க, அனைவரும் சாம்பலானாகள். இச் செய்தி கேள்விப்பட்ட மன்னன் தன் மகன் அஞ்சுமானை அனுப்பினார். அஞ்சுமானும் கபிலரிடம் சென்று உண்மையைக் கூறி குதிரையை மீட்டு தன் தந்தையின் யாகம் நிøவேற உதவினான்.  அவனது வம்சாவளியிலே வந்தவனே பகிரதன் ஆவான். அவன் தனது முன்னோர்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் தோன்றி கங்கையால் உன் முன்னோர்கள்  மோட்சமடைவர் எவனே  சிவனை நோக்கி தவமிக்க சொல்லி மறைந்தார். சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன்.

சிவபெருமான் கேட்ட வரம் கொடுத்தார். பின் கங்கையை நோக்கி தவமிருந்தான். கங்கையோ தன்னை அடக்க சிவபெருமானால் மட்டுமே முடியும் எனவே மறுபடியும் சிவனை நோக்கி தவமியற்றும் படி கூறினார். மறுபடியும் சிவன் கேட்ட வரம் கொடுத்தார், உடன் கங்கை வந்தார். சிவபெருமான் அவரை  அடக்கும் பொருட்டு தனது தலை முடியில்  அணிந்தார். இதனையறியா பகிரதன் பதறினார்.  பின் சிவபெருமான் தன் தலை முடியில் இருந்த கங்கையில் இருந்து சிலதுளிகள் பகிரதன் கைகளில் விட்டார். அந்த சில துளிகளும்  வேகத்துடன் வந்து ஐந்து முனிவர்கள் இயற்றிய யாகத்தை அழித்தது, அதனால் அம்முனிவர்கள்  கங்கையை தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர்.  பகிரதன் கங்கையைக் காணாது திகைத்தான். பின் முனிவர்களை வணங்கி நடந்ததைச் சொல்லி கங்கையைத் திருப்பிதர வேண்டினான். அம்முனிவர்களும் இசைந்து தம் செவி வழியாக விட்டனர். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. பகிரதன்  கங்கையை  தம் முன்னோர்களின் சாம்பல் மீது தெளிக்க  அவர்கள் சொர்க்கம் அடைந்தனர்.

பகிரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையை தனது சடையில் ஏற்று வழிபாட்டிற்கே சிறு துளி  கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு  கங்கா விசர்ஜன மூர்த்தி  என்ற பெயர்  ஏற்பட்டது.  

கங்கா விசர்ஜன மூர்த்தியை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில்  வழிபாடுகள் நடைபெறும்.   பனிமழையால்  ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும்.  உமை  சிவனிடம் இடபாகம் பெற்ற தலமே  கோதார்நாத்  ஆகும்.  இங்கு கோயில் கொண்டுள்ள கோதாரேஸ்வரரை வணங்கி  அங்குள்ள  புனித நீரை வீட்டில் நடைபெறும்  சுபகாரியங்களுக்கு   பயன்படுத்தினால்  சுபமாகும். வெண்தாமரை  அர்ச்சனையும்,  எள்ளோதரை நைவேத்தியமும்  அமாவாசை, திங்கள் கிழமைகளில்  செய்தோமானால்  பிதுர் தோஷம்  சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர்.  மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் நீரை வெள்ளிக்கலசத்தில்  வைத்து பூஜிக்க குபேர சம்பத்து கிட்டும் என்பது ஐதீகம்.

Tuesday, 9 June 2015

64 சிவ வடிவங்கள் (18)

கங்காதர மூர்த்தி



திருக்கைலையிலுள்ள ஓரு தோட்டத்தில் சிவபெருமான் நடைபயின்றுக் கொண்டிருந்தார். பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று  அவரது இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத  துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும்  பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான்  தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர்.  அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கேள்விப் பட்ட பார்வதி தேவி  அவசரமாக தன் கைகளை நொடிப்பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில்  இருந்த  வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி  பெருத்த சேதத்தையும், அழிவையும்  உண்டாக்கியது.  இதனைக் கண்ட முவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் அவ்வெள்ளத்தை  அடக்கி  அதனை  தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும்  சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.  நான்முகன், இந்திரன், திருமால்  ஆகிய  மூவரும் சிவபெருமானிடம் சென்று நாதா பார்வதி தேவியின்  கைவிரல் வியர்வையால்  உண்டான கங்கை பெரும் புனிதமானது, அதை உங்கள் முடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை  எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே  இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்.

கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடைமுடியில்  தாங்கியிருப்பதால்  சிவபெருமானுக்கு  கங்காதர மூர்த்தி  என்ற பெயர் ஏற்பட்டது.  கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். 

இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும்  கங்கை நீரை வீட்டிற்கு  எடுத்து வந்து தெளிக்க  இடம் புனிதமாகும்.  கங்காதர மூர்த்தியை மல்லிப்பூ  அர்ச்சனையும்,  பாலில் செய்த  இனிப்பு பண்ட நைவேத்தியமும் சோமவாரத்தில் சந்தியா காலத்தில் செய்தோமானால்  செல்வசெழிப்பும் இனியோரு பிறவி இல்லா நிலையும்  ஏற்படும்.  இந்த  கங்கை  நீரை வீட்டில்  கலசத்தில்  வைத்து வழிபட  லஷ்மி கடாட்சம் கிடைக்கும். 

Monday, 8 June 2015

64 சிவ வடிவங்கள் (17)

17. சண்ட தாண்டவ மூர்த்தி


திருவாலங்காட்டில் மகிமையை உணர்ந்த  சுனந்த முனிவர் அங்கு தாண்டவ நடத்தைக் காட்ட வேண்டிய தவமியற்றினார். அப்போது சிவபெருமானின் கைவிரலில்  உள்ள பாம்பு அவரது  திருவிரலில்  விஷம் கக்கியது. இதனைக் கண்ட இடபம் நீ செய்த தீமைக்காக  திருக்கைலையை விட்டு நீங்குமாறு  கார்கோடகனிடம்  கூறியது. கார்கோடகனும் பயந்து சிவனிடம்  முறையிட்டது. உடன் சிவபெருமான்  திருவாலங்காட்டில்  தவமியற்றும் சுனந்தருடன்  சேர்ந்து  சண்டதாண்டவத்தை தரிசித்த உடன் கைலை வருவாயாக என்றார்.  திருவாலங்காடு சென்ற கார்கோடகன் சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள்  அனைவரையும் கொடுமைபடுத்தி வந்தார்கள்.  இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதியும்  சப்தமாதர்கள், சிவகணங்களுடன் சாமுண்டி  என்ற சக்தியாக மாறி  அவர்கள் இருவரையும் கொன்றனர்.   அவர்களிருவரின் சகோதரியான குரோதி  என்பவளின்  மகன் இரத்த பீசன்.

அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால்  அதுவொரு இரத்தபீசனாக மாறீவிடும். இத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி பார்வதி காளி தேவியை தோற்றுவித்தாள். காளி அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் பருகினாள். போர் நல்லபடியாக முடிந்தது. பார்வதி சண்டியாகிய காளி தேவி சிவபெருமானிடம் நடனம்  செய்து அவருடன் வசிக்கும் வரத்தையும் வழங்கிவிட்டு சென்றார்.  அசுரனின் மாமிசத்தையும், இரத்தத்தையும்  குடித்ததால் காளிதேவி யாருக்கும் அடங்காமல்  வனங்களில்  அரசாட்சி புரிந்து வந்தார்.  அவ்வாறே  திருவாலங்காடு  வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி அட்டகாசத்தை ஆரம்பித்தார்.  இச் செய்தி முனிவர் மூலம் நாரதரிடம் தெரிவிக்கப் பட்டது.  நாரதர் மூலம் சிவபெருமானிடம் தெரிவிக்கப்பட்டது. சிவபெருமான் உடன் பைரவராக மாறி போர் புரிந்தார்.  காளி தேவி தோற்றுவிட்டார். தோற்றக் காளி நடனப் போர்புரிய பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப  நடனம் ஆடினார். நவரசங்கள்  ததும்ப இருவரும் சலைக்காமல் ஆடினர்.  இந்த சண்ட தாண்டவம் நடை பெறும் போது சிவனின்  குண்டலம் கீழே விழ, அதைத்தன் காலால் எடுத்துக் காதில் பொருத்தினார் போட்டியாக ஆடிய காளி வெட்கத்துடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

காளியின் செருக்கும்  அழிந்தது. சுனந்தர், கார்கோடகன், உற்பட அனைத்து தேவர், முனிவர்களும் எல்லாக் காலமும்  காணும்படி  தாண்டவக் கோலத்தை அருளினார்.  இக்காரணத்தால்  அவரை சண்ட தாண்டவ மூர்த்தி என்கிறோம்.  

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது கீழ்க் கோட்டம். இறைவன் பெயர்  நாகநாதர், இறைவி பெயர்  பெரியநாயகி  ஆவார். இங்குள்ள நடராஜ மண்டபத்தை நாம் பேரம்பலம்  என்போம்.  இங்கமைந்த மூர்த்தியை வணங்கி சிவ தியானம் செய்தால்  தாண்டவ ஒலியைக் கேட்கலாம்.  முல்லைப்பூ   அர்ச்சனையும், வெண்சாத நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுத்தோமானால்  நடனம், பாட்டு, நட்டுவாங்கம், என அனைத்தும்   கைவரும். மேலும் இங்குள்ள மூலவரை கும்பநீரால்  அபிசேகம் செய்து வழிபட்டால்  பிறவிப் பயன்  பெறமுடியும்.

Saturday, 6 June 2015

64 சிவ வடிவங்கள் (16)


16. சதா நிருத்த மூர்த்தி




சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்சாட்சரத்தையே தன் மேனியாகக் கொண்டு இருப்பவர். அவரது மூன்று கரங்களும், இருபாதங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்  ஆகிய  ஐந்து  செயல்களை செய்கிறது. அது எப்படியெனில்  டமருகம் தாங்கிய கரத்தினால் படைத்தலும், அமைந்த கரத்தினால் காத்தலும், மழு தாங்கிய கரத்தினால்  அழித்தலும், முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால்  மறைத்தலும், அனவரத நடனம் புரியும்  அடிப் பாதத்தினால்  அருளலும் புரிகின்றார்.

மேலும் உலக உயிர்கள் அனைத்தும் எங்கும் நிறைந்துள்ள  இறைவனுடன் ஐக்கியமாவதைக் குறிக்கிறது. இந்த நடனத்தை இடது புறமாக நின்று தரிசிக்கும் உமாதேவியாரின்  தோற்றம். சிவபெருமான் திருத்தக் கோலம் கொண்டு நடனம் புரியும் திருவடியில்  கரமும், திருவயிற்றின் மீது  கரமும், திருத்தோளின் மீது சி கரமும், திருமுகத்தில் வா கரமும், திருமுடியின் மீது கரமும் கொண்டு கருணையால் இயற்றினார். சிவபெருமான் பல காரணங்களால் பல முறை நடனம் புரிந்துள்ளார்.  இருப்பினும்  உமாதேவியார் தரிசிக்கும் நிலையில்  தேவர்கள், சிவகணங்கள்  நத்திதேவர் போன்றவர்களோடும், இசைவாத்தியங்களோடும், பஞ்சாட்சரமேனியோடு எப்பொழுதும் திருநடனம் புரிந்து கொண்டே இருப்பதால் இவரது பெயர்  சதா நிருத்த மூர்த்தி யாகும்.

சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில்  சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம்  ஆடிக்கொண்டேயுள்ளார். எங்கெங்கெலாம் நடராஜர் இருப்பினும் அவர்களனைவரும் இரவில் இங்கு வருவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில்  நடராஜ பெருமானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை  செய்யலாம். இறைவனைக் கூத்தபிரான் என்றும், இறைவியை சிவகாம சுந்தரி என்றும் அழைப்பர். கவியாற்றுவதற்கும், வாதப் போர்புரிவதற்கும், தடைபெற்ற தேர் திருவிழா மறுபடியும் நடைபெறவும், இவரை வணங்கினால் தடை நீங்கி நடைபெறும் என்பது கண் கூடு.  இவருக்கு  முல்லைப்பூ  அர்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய விரோதியும் நண்பனாவான். மேலும் இங்குள்ள கூத்தப்பிரானுக்கு   அன்ன அபிசேகம் செய்ய கைவிட் அரசுரிமையும்  கிடைக்கும்.

64 சிவ வடிவங்கள் (15)


15. சந்த்யாந்ருத்த மூர்த்தி




தேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்தனர்.  இதில் வாசுகியின் வாயையும் வாலையும் தேவர்களும், அசுரர்களும்  இழுக்கும் பொருட்டு  வாசுகி கொடிய ஆலகால விஷத்தைத் துப்பியது அவ்விஷம் அனைவரையும் எதிர்த்தது, எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். இதனைக் கண்ட தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க அவ்விஷத்தை உண்டார். அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை எனினும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கியது போல், மயங்குவது போல் உமா தேவியின் முன்பு மௌனமாய் உறங்குவது போல் இருந்தார்.  இதனைக் கண்ட தேவர்கள் அவரை அர்ச்சித்து அன்று முழுவதும் உறக்கம், உணவின்றி இருந்தனர்.  அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறுநாளாகிய துவாதசியில் தேவர்கள் பாராயணஞ் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவயபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு சாமகாலம் திருநடனம் செய்தார். அந்த காலத்தை நாம் பிரதோஷம் என்போம். அதாவது பதினைந்து தினங்களுக்கொருமுறை வரும் திரயோதசியை நாம் மாத பிரதோஷம் என்றும், வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோஷம் என்றும், தினசரி மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தையும் நாம் பிரதோஷ காலமாகக கொள்ளலாம்.

சிவபெருமான் நிருத்தம்(நிருத்தம் - நடனம்) செய்வதைக் கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தனது கரங்களை சிரத்திற்கு மேல் தூக்கி சிவசிவ என்று   ஆர்ப்பரித்தனர்.  ஆடினர், பாடினர், தேவர்கள் அவர் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்களும், விஷ்ணு மிருதங்கமும் வாசித்தனர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம்  ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்றானது. அவரை தரிசிக்க  மதுரை செல்ல வேண்டும்.  சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான  முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜமூர்த்தி யாவார். அவரது வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி போன்ற பல வடிவமாகப் பறந்து விரிந்தது.

 மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார்.  செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள்  ஒழிவர். நன்மை பாராட்டுவர்.  மதுரை நடராஜ பெருமானுக்கு பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு  மேன்மையடையும் என்பது ஐதீகம்.

Friday, 5 June 2015

64 சிவ வடிவங்கள் (14)

14. புஜங்கத்ராச மூர்த்தி


தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ  கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர். இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும், மோகிணி கோலத்தில்  திருமாலும் அவ்வனம் சென்று  முனிவர்களின் தவத்தையும், துணைவியரின்  கற்பையும் சோதித்தனர்.  இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகிணி அவதார மெடுத்த திருமால் என்றும், கற்பை பரிசோதித்தது  பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும்   தங்களது தவ வலிமையால் அறிந்தனர்.  அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி  அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர்.  அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவனே அவற்றையெல்லாம்  உடை, சிலம்பு, ஆயுதம், சிரோ மாலை, சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த  முனிவர்கள்  பெரும் கோபம் கொண்டனர்.

மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர். அந்த பாம்பு  உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய  நான்து பற்களில்  கடும் விஷத்துடன்  சிவபெருமானை அடைந்தது  அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு தன்னுடலில்   ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன்  சேர்ந்து விடும்படி  கூறி சேர்த்தார். அப்பாம்புகள் அவருடலில் கங்கணம்(கைவளை, காப்பு) காலணி அரைஞான் கயிறு ஆகியவையாக அணிந்து  கொண்டு காட்சிக்  கொடுத்தார்.  தாருவனத்து  முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுருத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர். (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்)


புஜங்கத்ராச மூர்த்தி யை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய  ஆடையாக  பாம்புகளை அணிந்த படி  காட்சிக் கொடுக்கின்றார். இந்த வடிவத்தையே  நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம்.  இவரை வணங்கினால்  ராகு தோஷம் நிவர்த்தியடையும்.  இவருக்கு சோமவாரம் அல்லது குருவாரத்தில்  வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் கொடுக்க கடன் தொல்லை தீரும். இங்குள்ள சிவபெருமானை மஞ்சள் நீரால் அபிசேகம் செய்ய ராகு கால தோஷம், சர்ப்ப கால தோஷம்  விலகும்.

Thursday, 4 June 2015

64 சிவ வடிவங்கள் (13)



13. புஜங்கலளித மூர்த்தி




காசிப முனிவரின்  மனைவியரான  கத்துருவிற்கும், வினதைக்கும்  தங்களில்  அழகானவர்  யார் என்றப் போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவள்  மற்றவளை சிறையில்  அடைக்க  வேண்டும் என்ற  முடிவுடன்  கணவரான  காசிபரை  நாடினார். கணவரோ கத்துருவே  அழகி  என்றுக்கூறினார், இதன் விளைவாக வினத்தை சிறையில்  அடைக்கப்பட்டார். தன்னை விடுவிக்கும் படி கத்துருவை  வேண்டினாள். கத்துருவோ தனக்கு  அமிர்தம்  கொடுத்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்றார். உடன்  வினந்தை தன் மகனான கருடனின் வனத்திற்கு இதைக் கொண்டு சென்றார். கருடனும் தேவலோகம் சென்று போரிட்டு  அமிர்தத்துடன் செல்லும் போது திருமால் கருடனுடன் போரிட்டு வெல்ல முடியாமல் பறவை ராஜனே உன் பெருமைகளைப் போற்றினோம், உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் என்றார். கருடனே பதிலுக்கு திருமாலே உன் வலிமையை கண்டுகளித்தேன் நீ உனக்கு வேண்டிய இரண்டு வரங்களை கேள் என்றார். திருமாலும் இதுதான் சந்தர்ப்பமென  தனக்கு வாகனமாக இருக்க வேண்டியும், அரவங்களுக்கு அமுதம் கொடுக்காதிருக்கவும் வரம் வாங்கினார்.

கருடனும் அதற்கிசைந்து கொடுத்து விட்டு  அமுதத்துடன் சிறைக்கு வந்து தாயிடம் கொடுத்தார். பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பலவரங்களைப் பெற்றுப் பின்னர் அன்று முதல் திருமாலின் வாகனமானார். மேலும் கருடன் திருமாலிடம் பெற்ற வரத்தினால் மற்றொரு தாயான கத்துருவின் கட்செவிகளைக் கொன்று கொடுமைப் படுத்தினார். இதனால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு இறவாபுகழும், கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர். உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில்  ஆபரணமாக  அணிந்து கொண்டார். இதனையே நாம் என்ன கருடா சௌக்கியமா  என நாகங்கள் கூறுவதாக கொள்வோம். அதற்கு என்ன பொருளெனில் சிறியோரை கூடுதலைவிட  பெரியோரைச் சேருதலே சிறந்தது என்பதாகும்.  பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது.

 புஜங்கம் - நாகம், லளிதம்- அழகு, ஆபரணம்,  புஜங்கலளித மூர்த்தியை நாம் தரிசிக்க கல்லனை அருகேயுள்ள திருப்பெரும்புலியூர் செல்ல வேண்டும். சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் என்பதால் சிறப்பு பெற்றது. ராகுவின் அதிதேவதையான பாம்புவின் தலமென்பதால் இத்தல மூர்த்தியை வழிபட ராகு கிரகத் தொல்லைகள் விலகும், அவரது பார்வை நம்மீது பட்டு நற்பலன்களைக் கொடுக்கும். இவருக்கு நீலமலர் அர்ச்சனையும், பால், பழம், தேன் கொண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில் கொடுக்க  சர்ப்ப கால தோஷம் விலகும். பாம்பு பயம் நிவாரணம் பெறும்.  இங்குள்ள இறைவன் பெயர் வியாக்கிரபுரிஸ்வரர் இறைவி பெயர் சௌந்திரநாயகி என்பதாகும். இவர்களுக்கு மஞ்சள் நீரால் அபிசேகம் செய்தாலும் சர்ப்பகால, ராகு தோஷம் விலகும் என்பது கண்கூடாகும்.

Tuesday, 2 June 2015

64 சிவ வடிவங்கள் (12)

12.இடபாந்திக மூர்த்தி


சதுர்யுகங்கள் இரண்டாயிரம் நான்முகனுக்கு ஒரு நாளாகும். அது நூறு கொண்டது நான்முகனது ஆயுட்காலமாகும், நான்முகனின் ஆயுட்காலமே விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது  கணக்கு, அழியும் ஊழிகாலத்தில்  உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்மதேவதை வேதனை கொண்டது. தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது  சிவபெருமானிடம்  சரணடைவதுத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்மதேவதை  சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது.கேட்ட வரம் கொடுக்கும் அருட்கடலான சிவபெருமானும் இடபத்தில் தலை மேல் தனது கை வைத்து  தர்மதேவதையே உன் விருப்பம் நிறைவேற்றப்படும்.

 ஆகவே தருமத்தினை உலகிற்கு  உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக  கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும்  எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் சிவபெருமானின்  இடப வாத்திக தரிசன ரகசியம் இதுவேயாகும்,

 இனி இடப வாத்திக மூர்த்தியை சரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருவாவடுதுறையாகும். இத்தலம் மயிலாடுதுறையருகே  அமைந்துள்ளது. இங்குள்ள மாசிலாமணிஸ்வரர்  கோயிலில்  அமைந்துள்ள இடபாந்திக மூர்த்தியை வணங்குவோமானால் ஊழிக்காலத்தில் நம்முடைய ஆன்மா சிவபெருமானை   தஞ்சமடையும்  என்பது  ஐதீகம்.  இவருக்கு திங்கள்,வியாழக்கிழமைகளில் வெண்தாமரை அர்ச்சனையும், பசுவின் பால் நைவேத்தியமும் கொடுக்க குரு தோஷ நிவர்த்தியுண்டாகும். மேலும் சிவபெருமானுக்கு வில்வ நீரால் அபிசேகம் செய்தால் மறுபிறவியிலும் சிவனருள் கிடைக்கும்.

64 சிவ வடிவங்கள் (6-10)

6. உமா மகேச மூர்த்தி

திருக்கைலையில்  பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும்  தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே  அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய  இறைவனாகிய  சிவபெருமானின் என்னப்படியே  அனைத்துச்  செயல்களையும்  செய்து வருகின்றார்.  பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து  புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ  அதுபோல் இவர் சிவத்திடம்  ஐக்கியமானவராவர். கருணையே வடிவான இவர்  ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார்.  முறையே
1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
2. ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
3. இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
4. ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
5. கிரியாசக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
இதில் பராசக்தி பக்குவமடைந்த  ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி  திருஷ்டித் தொழில் செய்து நம்மை  சிருஷ்டிப்பவர்.  கிரியாசக்தி  உலகப் படைப்பை செய்பவர்.  மேற்க்கண்ட  இந்த  ஐந்து சக்திகளும்  ஒன்றினைந்து  ஒரு செயல்  செய்யும் போது  ஒன்றாகி  சதாசிவமூர்த்தியாகி  விடுகின்றது.  எனவே  சிவன் - சக்தி பிரிக்க முடியாத  ஒன்று. இத்தகைய   சிறப்பு வாய்ந்த   உமா மகேஸ்வர மூர்த்தியை  நாம் தரிசிக்க வேண்டிய தலம் கும்பகோணம் அருகேயுள்ள  கோனேரி ராஜபுரம் தான் செல்ல வேண்டும். இங்கு கோயில் கொண்ட மூர்த்தியே  உமாமகேஸ்வரர் ஆவார்.  இறைவி பெயர்  தேகசௌந்தரி என்பதாகும். இங்குள்ள தீர்த்தத்தில்  நீராடி இறைவி, இறைவனுக்கு  இளநீர், பால், தேன் அபிசேகம் செய்ய  கடுமையான  குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின்  மற்றொரு திருநாமம்       பூமிநாதர்  என்பதாகும்.  பெயர்க்கேற்றார் போல் எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும்  இந்த பூமிநாதரை வணங்கி  இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால்  தொழில்  சிறப்படையும்.  புதன் தோறும்  சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வராது. இருந்தாலும் விலகும்.இங்குள்ள மண்ணால் வினாயகர் செய்து நம் வீட்டில் வைத்து வழிபட எந்தவொரு காரியத்தடையும்  அகலும்.

7. சுகாசன மூர்த்தி

வெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட  ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அதில் ஜோதி மயமான சிவபெருமான் நடுவே நாயகனாக வீற்றிருக்க, அவரைச்  சுற்றிலும்  மும்மூர்த்திகளும் தேவகணங்களும், தேவலோக வாழ் அனைத்துமே அங்கே கூடியிருக்கின்றன. சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருக்கிறார். நேரம் கடந்தது. அனைவரும் தங்களது பணிக்கு, இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.
சற்றைக்கேல்லாம் உமாதேவியார் அங்கே பிரசன்னமாகி இறைவனின் தால் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின்  உண்மைகளை, விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்கிறார். உடன் சிவபெருமான்  சிவாகமங்களின்   உண்மைகளையும் ,  விளக்கங்களையும், ஐவகை  பந்த பாசங்களின்  நிலையையும், அவற்றை நீக்கினால் கிடைக்கும்  நன்மைகளையும், சிவாகமங்கள்  பற்றிய அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கின்றார். அச்சமயம்  அவர்  சுகாசன நிலையில்  அமர்ந்த படி  உறைக்கிறார். அருகே உமாதேவியார் நின்று கொண்டுள்ளார்.  சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி உறைத்த காரணத்தால்  இவரை நாம் சுகாசன   மூர்த்தி  என்கிறோம். இவரது கரங்களில் மான், மழு உள்ளது. தேவியார் அருகே இல்லை. 
இத்தகைய  சுகாசன மூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சீர்காழியாகும். இங்கு  கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம்  பிரம்மபூரிஸ்வரர், சட்டைநாதர், தோணியப்பர் என்று மூன்று திருநாமங்களை உடையவர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி யாகும். இங்கு   அருள்பாலிக்கும் சுகாசன மூர்த்தியை மனமுருக வேண்டி அர்ச்சிக்க வியாழன் சார்ந்த அனைத்து குறைகளும் தீரும். மேலும் தொழில் துறை நிர்வாகம் நல்ல முறையில்  நடைபெற இவர் நமக்கு அருள்புரிவார். வில்வ அர்ச்சனையும், கற்கண்டு நைவேத்தியமும் சோமவாரங்களில்  செய்தோமானால் நிர்வாகம் செழிப்பாகும். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு  உகந்த அபிசேகம் பலாப்பழத்தால் செய்யப்படுகிறது. இதனால் யோக சித்திகள் கைகூடும் என்பது ஐதீகம்

8.உமேச மூர்த்தி

முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை  மேற்க்கொள்ளாமல்  தவச்சாலையை நோக்கிச்  சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர். அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது  தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க  அவரது  சக்தியே உமாதேவியாக  வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன்  உமாதேவியை தன் இடபுறமாக இருக்க  செய்தார்.  பின்னர் எரிந்து சாம்பலானவர்களை  முன் போலவே படைத்தார்.  அவர்கள் அனைவரும்  இவர்கள்  இருவரையும் வணங்கி நின்றனர்.  இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்.  உலகமே செழித்தது.   உலகிலுள்ள அனைத்து உயிர்களையும்  படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை  உமையவளாக  இடது பாகத்தில்  வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில்  உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது. பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே  உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம்.  இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க  நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில்  கோயில் கொண்டுள்ள  உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக  அமைய அருள்புரிவார்.
இவரை திங்கள் அல்லது புதன் கிழமைகளில் செந்தாமரைப் பூவினால்  அர்ச்சனையும், நெய்யன்னத்தால் நைவேத்தியமும் செய்ய கடனில்ல பெருவாழ்வு வாழலாம். இங்குள்ள சிவபெருமானுக்கு நன்னீர்  அபிசேகம் செய்ய  அகஉடல்  தூய்மையடையும் என்பது திண்ணம்.

9. சோமாஸ் கந்த மூர்த்தி

சூரபத்மனின்  கொடுமைகள்  எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும்  ஈசனிடம் சென்று  முறையிட்டனர்.   வல்லமைபெற்ற தங்கள் மகனால்  அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள்  விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக  மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள  நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள்  அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று  மோதி சிதறும் படி அந்தப்புரம்  நடந்தார்.  இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார்.  கங்கையோ  அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.
ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும்  பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர்.   பார்வதி தேவியின் கொலுசுமணியில்  இருந்து சிதறிய  நவரத்தினங்கள்  நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல  தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு  ஆறு குழந்தைகளை பார்வதி  ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும்  விளங்கியது.  ஆறு முகங்களைக் கொண்டதால்  ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும்   அழைத்தனர்.  பின்னர் மூவரும் வெள்ளிமலையை  அடைந்தனர்.  அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம். சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம்  அருகே  சுரக்கும்  அமுத தீர்த்தத்தினால்  சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே      உபதேசிக்கும் அளவு  புத்தி வலுவடையும்.  மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில்  வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க   குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள்  தொழ வேண்டியவர் இவர்.

10. சந்திரசேகர மூர்த்தி

நான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே  இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு  திருமணம் செய்வித்தார்.  சந்திரன் திருமணம் நடைப்பெற்ற சிறிது காலம் வரை அனைத்து மனைவியரிடத்தும் அன்போடு இருந்தார். நாட்கள் செல்ல அவரது அன்பு கார்த்திகை, ரோகிணி இடத்தில் மட்டும் மிகுந்தது. இதனால் மற்றப் பெண்கள் மனம் சகியாது தந்தையாகிய தட்சனிடத்தில் கூறினர். தட்சனும் மருமகனை அழைத்து தம் அனைத்து மகள்களையும் சமமாக நடத்தும் படி, அவர்களுடன் அன்புடன் இருக்கும் படியும் புத்திமதிகள் கூறி அனுப்பி  வைத்தார்.  சிறிது காலத்திற்குப் பின் சந்திரனின் நடவடிக்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்தது.எனவே மறுபடியும் பெண்கள் தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெண்களின் துன்பம் சகியாது தட்சன் நாளுக்கொரு கலையாக குறைந்து இறப்பாய் என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார். 
சாபத்தின் வீரியத்தால் நாளொரு கலையாக சந்திரன் தேய்ந்து கொண்டே வந்து இறுதியாக ஒரு கலை மட்டுமே இருக்கும் நிலையில் இந்திரனின் ஆலோசனைப்படி நான்முகனை சந்தித்து தன் குறைகளைச் சொன்னான். நான்முகனோ தன் வேலையில் மகனும்  மகன் வேலையில் தானும் தலையிடுவதில்லை  என்று உறுதிகொண்டுள்ளோம். எனவே  இக் குறைகளை சிவபெருமானால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே  அவரை  சரணடையிமாறு சொன்னார்.   அதன்படி சந்திரன் சிவபெருமானிடம்  சரணடைய  சிவனும் சந்திரனின்  ஒரு கலையை  எடுத்து தன் சடையில்  வைத்து இனி உன் ஒருக்கலைக்கு  அழிவில்லை  ஆனாலும்  தட்சனின் சாபத்தால்  தினமொரு  கலையாக  அழிந்தும்,  என்னிடம்  உள்ளதால்  தினமொரு கலையாக  வளர்ந்தும்  காணப்படுவாய்  என  அருளாசி கூறினார்.  சந்திரனைத் தன் சடையில் தரித்ததால்          சந்திர   சேகரன் ஆனார்.  அவரது தலம்  திருவாரூர்(புகலூர்) நாகபட்டிணம் அருகே உள்ளது.  இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனின்  திருநாமம்  கோணபிரான்  மற்றும்  அக்னிபுரீஸ்வரர். இறைவி  கருந்தாழ்குழலி யாகும்.  நல்லவனவற்றை மட்டுமேக்  கொடுக்க கூடியவர்  இங்குள்ள சந்திர சேகர மூர்த்தி. இவரை வழிபட பித்தளையும்  வைரமாகும். மேலும்  வெண்தாமரை அர்ச்சனையும், நெய்யன்ன நைவேத்தியமும் சோமவாரம், பௌர்ணமி தினங்களில் கொடுக்க    அறிவு வளர்ச்சி மிகுவதோடு நினைவாற்றல்  பெருகும்.  மேலும்   இங்குள்ள                           சிவபெருமானுக்கு  குளிர்ந்த   சந்தனத்தால்  அபிசேகம் செய்தால்  நற்புகழ் அடையலாம்