Thursday, 20 April 2017

64 சிவ வடிவங்கள் (64)

64. சிஷ்ய பாவ மூர்த்தி


  


தமிழ்க்கடவுள் எனவும், தமிழர் கடவுள் எனவும் போற்றப்படுபவன் முருகபெருமான். தேவர்களைத் துன்புறுத்தி வந்த சூரபத்மனை அழித்தார் முருகபெருமான். முருகன் வேறு சிவசக்தி வேறல்ல. அவரே இவர். இவரே அவர். ஆறிற்கும் ஆறுமுகனுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஆறுமுகம் கொண்டவன், ஆறு எழுத்து கொண்டவன், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன், வளர்பிறை சஷ்டி அவனுக்கு உகந்த நாள். இப்படி அனைத்தும் ஆறு மயம் தான்.


ஒருமுறை கைலைக்கு பிரமதேவர்  வந்தார். அப்போது அகந்தை மேலிட குமரனை வணங்காமல் சென்றான். குமரன் பிரமனை அழைத்து அவன் யாரென்றும், செய்யும் தொழில் என்னவென்றும் கேட்டான். பிரமனும் நான் படைப்புத் தொழில் புரிபவன் என்றான். குமரனும் படைப்புத் தொழிலை எவ்வாறு செய்வாய் என்றான், வேதம் ஓதி செய்வதாகக் கூறினான். வேதம் ஓதுக என்றான் குமரன் பிரமனும் ஓம் என்று படித்தொடங்கினான். உடன் குமரன் பிரமனை நோக்கி இப்பொழுது நீர் கூறிய பிரணவத்தின் பொருள் கூறுக என்றான். பிரமன் பிரணவத்தின் பொருள் தெரியாது விழிக்க, பிரணவத்தின் பொருள் தெரியாத நீயெல்லாம் எவ்வாறு படைப்பை மேற்கொள்வாய் என்றபடியே பிரமனை சிறையில் அடைத்தான் இதனைக் கேள்வியுற்ற சிவபெருமான் குமரனிடம் வந்து குமரா நீ பிரணவத்தின் பொருளை அறிவாயா அப்படியெனில் எனக்கு கூறு என்றார். உடன் குமரனும் முறைப்படிக் கேட்டால் கூறுவதாகச் சொன்னான். உடனே சிவபெருமான் சீடராக மாறி கேட்க, குமரனோ குருவாக மாறி உபதேசித்தார்.



அப்பிரணவத்தின் பொருள் செவிகளில் தேனாய் இனித்தது. (அதன் பின்னர் பிரமன் சுவாமிமலை சென்று சிவபூஜை செய்து அவர் மூலமாக முருகபெருமான் பொருளுரைக்க பிரமன் அறிந்தார்) அதாவது (தந்தைக்கே) தகப்பனுக்கே சுவாமியாக அதாவது குருவாக இருந்து பிரணவத்தின் பொருள் உரைத்ததால் குமரனுக்கு தகப்பன் சாமி எனப் பெயர் ஏற்பட்டது. சிவபெருமான் சிஷ்யராகவும், குமரன் குருவாகவும் உபதேசம் கொடுத்ததால் இம்மூர்த்திக்கு சிஷ்ய பாவ மூர்த்தி என்றப் பெயர் உண்டாயிற்று.


 சுவாமிமலை குடந்தையருகே அமைந்துள்ளது. இத்தலத்திலேயே தந்தைக்கு உபதேசக் காட்சி நடைபெற்றது. என இத்தல இறைவனை வணங்க கல்வி மேம்பாடு அடையும். மேலும் இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியமும், திங்கள் செவ்வாய்களில் கொடுத்து நெய்விளக்கிட கல்வி சிறப்படையும் நீள் ஆயுள் உண்டாகும். அறிவு மேன்மையடையும்.





thanks to temple.dinamalar

64 சிவ வடிவங்கள் (63)

63. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி



  


சிவபெருமானை பார்த்து ஏளனமாய் சிரித்த நான்முகனின் நடுத்தலையை பைரவர் தன்னுடைய நகத்தினால் திருகி எடுத்தார். அதன் பின்னர் அவருடைய ஆணைப்படி அவரால் உருவாக்கப்பட்ட அதிபலன், ஆலகாலன், கனன்முகன், காலவேகன், சோமகன் போன்ற கணத்தலைவர்களுடன் வனம் சென்று அங்கிருந்த முனிவர்கள், ரிஷிகள், தவசிகள் இவர்களிடமிருந்து இரத்தத்தை தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி அதனால் வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார். இதனால் இறந்தவர்களை உயிர்பித்து அவர்களின் செருக்கை அழித்தார். 



அவர்கள் அடுத்து சென்ற இடம் வைகுந்தம். அங்கே தன்னையும், கணத்தலைவர்களையும் தடுத்த திருமாலின் முழுமுதற்காவலனான விடுகசேனனை சூலாயுதத்தால் கொன்றார். தன் தோள் மீது போட்டார். பின்னர் தேவியர் படை சூழ பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் பைரவர் தனது கணத்தலைவர்களுடன் சென்று திருமாலிடம் இரத்தப் பிட்சை ஏற்க வந்ததைச் சொல்ல சந்தோஷத்துடன் திருமால் தனது நகத்தினால் நெற்றியியை கீறி ஒரு ரத்த நரம்புருவி அதிலிருந்து சொட்டிய இரத்தத்தை கபாலத்தில் விட்டார்.

இவ்வாறாக ஆயிரம் ஆண்டுகள் இரத்தம் கொடுத்தும் பைரவரின் பிட்சா பாத்திரம் நிறையவில்லை, இதனால் திருமால் பலவீனமடைந்து மயங்கினார். இதனைக் கண்ணுற்ற அவன் தேவியர் திகைக்க, பைரவர் அவர்களைத் தேற்றி திருமாலை எழச்செய்தார். பின்னர் திருமாலின் வேண்டுகோளின்படி வடுகசேனனை மறுபடி உயிர்பித்தார். இவ்வாறு முனிவர், ரிஷிகள், தவசிகள், தேவர்கள், திருமால் போன்றோரிடம் இரத்தம் பெற்றதற்குக் காரணம் அவர்களுடைய அகந்தையையும், கர்வத்தையும் அழிப்பதற்குத்தானே ஒழிய வேறில்லை. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க பிட்சையாக பெற்ற சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று. 



இவரை தரிசிக்க நாம் செல்லவேண்டிய தலம் காசியாகும். இங்குள்ள விஸ்வநாதர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், வாழைப்பழ நைவேத்தியமும், எள் தீபமும் செவ்வாய்கிழமைகளில் கொடுக்க விளக்கிட பகைவர் தொல்லை மறையும். நாம் செய்த பாவங்கள் கங்கையில் மூழ்கி பின் விஸ்வநாதரை தரிசிக்கத் தீரும்.




thanks to temple.dinamalar

Friday, 7 April 2017

64 சிவ வடிவங்கள் (62)

62. பிரார்த்தனா மூர்த்தி




தாருவன முனிவர்கள் தவமும், யாகமுமே முக்தி கிடைக்கக் கூடிய வழியென நினைத்திருந்தனர். அவர்கள் சிவபெருமானை வணங்காது செருக்குடன் இருந்தனர். அவர்கள் செருக்கை அழிக்க சிவபெருமான் பிட்சாடனராக மாறி முனிவர்களின் மனைவியர் கற்பையும் (பிறஆடவனின் அழகை நினைப்பதே) அழித்தார். திருமால் மோகினி அவதாரத்துடன் முனிவர்களின் தவத்தை அழித்தார். இதற்கெல்லாம் யார்காரணமென தவவலிமையால் முனிவர்கள் உணர்ந்தனர். உடனே அப்சார வேள்வி நடத்தி அதிலிருந்து வெளிவந்த பொருட்கள் அனைத்தையும் சிவபெருமான் மீது பிரயோகித்தனர். முயலகன் என்ற அசுரனும் சிவபெருமானை நோக்கி வர அவனது முதுகில் ஏறி நடனமாடி முனிவர்களுக்கு ஞானமளித்தார். இச்செய்தியைக் கேள்வியுற்ற உமாதேவியார் வருந்தினார். தாமே சக்தியாக உள்ளோம். அவர் என்னை விடுத்து திருமாலை மோகினியாக்கிச் சென்றுவிட்டாரென்ற செய்தியைக் கேட்டதும், ஓர் திருவிளையாடல் நடத்த எண்ணி ஊடல் கொண்டார்.

இதனையறிந்த சிவபெருமான் சக்தியின் ஊடலுக்கான காரணத்தை அறிந்தும், அதனைப் போக்க நினைத்தார், அவர் சக்தியிடம் சென்று தேவி எனது ஒரு சக்தியான நீயே செய்கின்ற வேலையைப் பொறுத்து நான்காகப் பிரிகிறாய். அதாவது நீயாகவும், திருமாலாகவும், காளியாகவும், துர்க்கையாகவும் பிரிகின்றிர்கள். என் மனைவியாக கையில் நீயும், ஆணுருவம் கொள்கையில் திருமாலாகவும், யுத்தக் களத்தில் துர்க்கையாகவும், கோபத்தில் காளியாகவும் உருமாறுகின்றீர்கள். எனவே திருமால், காளி, துர்க்கை இவர்கள் அனைவரும் நீயே என்பதை உணர்க என்றார். உடன் உமாதேவியார் கோபம் மறைய இறைவா தாருகாவனத்தில் நீர் ஆடிய அத்திருநடனத்தை நான் காண வேண்டும். எனக்கு ஆடிக்காட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். உடன் சிவபெருமானும் ஆடிக் காட்டினார் இந்த நடனத்தையே கௌரி தாண்டவம் என்றழைப்பர். தனது ஊடலுக்கு பலமுறை இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் மன்னித்து தன்னுள் ஐக்கியப்படுத்தினார். 

சிவபெருமான் உமாதேவியின் ஊடலுக்கான காரணத்தை விளக்கியதாலும் அவர் நடனம் காண பிரார்த்தித்தமையால் திருநடனத்தை மறுபடியும் அவர் முன் நிகழ்த்திக் காட்டினார். இம்மூர்த்தியே பிரார்த்தனா மூர்த்தி ஆவார். இவர்க்குரியத் தலமாக ருத்ரகங்கை குறிப்பிடப்படுகிறது. இவர்க்கு வெண்தாமரை அர்ச்சனையும், நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலும் புதன் அன்று கொடுத்து, நெய் தீபமிட்டால் திருமணத்தடை விலகி திருமணம் கைக்கூடி வரும் வேண்டிய செல்வமனைத்தும் கிடைக்கும்.



64 சிவ வடிவங்கள் (61)

61. வராக சம்ஹார மூர்த்தி





இரணியாக்கன் எனும் அசுரன் பிரமனை நோக்கி தவமிருந்தான், அவனது தவத்திற்கு மெச்சிய பிரமன் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்தார். இதனால் அந்த அசுரன் உலகை பாய்போல் சுருட்டி கடலில் சென்று மறைந்தான். தேவர்கள் இதனால் செய்வதறியாது திகைத்தனர். பின் திருமாலிடம் முறையிட்டனர். திருமாலும் அனைவரது ஆசியுடன் கருடவாகனத்தில் சென்று வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம் கொண்டார். 

அது மலையை விட உயரமாகவும். ஒவ்வொரு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளியும். அதன் வால் அசைவு எட்டுத் திக்கையும் தொட்டு அதன் மூச்சுக்காற்றின் வெப்பத்தினால் உலகமே குலுங்குகிறது. இப்படியாக பயங்கரமான உருவம் கொண்ட திருமால் கடலையே பிரட்டிப்போட்டு அசுரனைக் கண்டுபிடித்தார். அவனை தன் கொம்பினால் கொன்று, உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார். பின் அவ்வராகம் பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் கொன்று தின்றது. 

இதன் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த அவர் வேட வடிவம் கொண்டு வராகத்தை தன் சூலாயுதத்தால் கொன்று, அதன் ஒரு கொம்பொடித்து தன்மேனியில் ஆபரணமாக்கினார். அதனால் வராகத்தின் அகந்தை ஒழிந்தது. சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டியது. இதனால் அதனுடைய மற்றொரு கொம்பு பிழைத்தது.

 பின்னர் சிவனருளால் வராக உருவம் நீங்கி பழைய உருவம் அடைந்ததும் அனைவருக்கும் வராக புராணம் கூறி வைகுந்தம் சென்றார். திருமால் தேவர்கள் துயர்துடைக்க வராகத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காசியிலும், தமிழகத்திலும் உள்ள பழமலைக் கோயிலிலும் காணலாம். இவர்க்கு புதன்கிழமைகளில் நெய்விளக்கும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் கொடுக்க வியாபாரம் கொழிக்கும் பகைவர் பார்வையால் வளம் பெருகும்.


Saturday, 1 April 2017

64 சிவ வடிவங்கள் (60)


60. மச்ச சம்ஹார மூர்த்தி





சோமுகாசுரன் மூன்று லோகத்தினராலும் அழிக்க முடியாத வரத்தினை சிவபெருமானிடமிருந்துப் பெற்றிருந்தான். அந்த அகந்தையில் பிரமனிடம் சென்று வேதங்கள் நான்கையும் பிடுங்கிக் கொண்டு கடலிலுள் சென்று மறைந்தான். பிரமன் திருமாலிடம் நடந்தவற்றை கூறினான். திருமாலும் பெரிய மீன் வடிவம் ஏற்றார். 


கடலிலுள் சென்று சோமுகாசுரனைத் தேடிக் கடலையேக் கலக்கியது. பின்னர் ஒளிந்திருந்த சோமுகாசுரனை கண்டுபிடித்து அவனை துன்புறுத்திக் கொன்றது. அவனிடமிருந்து பறிக்க வேதங்களை மீண்டும் பிரமனிடம் சேர்ப்பித்தது. ஆனாலும் சோமுகனின் உடலிருந்து வெளிவந்த இரத்தம் சமுத்திரத்தை செந்நிறமாகக்கியது. பின் பெரிய மந்தரம் போன்ற அந்த மீன் கடலை இடித்தபடி கொள்ளாமல் திசை நான்கிலும் பரவி நிரம்பியிருந்தது. அது அங்கிருக்கும் அனைத்து மீன்களையும் அழித்து தின்றது. ஒரு கடல் விலங்கினங்களையும் கூட விடாமல் அனைத்தையும் கொன்று தின்றது. இச்செய்தி தேவர்கள் மூலமாக சிவபெருமானை எட்டியது. சிவபெருமானும் தேவர்களுக்கு ஆறுதல் கூறி அக்கொடிய மீனை பிடிக்க வேண்டிய வேலையுடன் மீனவர் போல் உருமாறி அக்கடலில் அம்மீனிற்கு தக்கவாறு உருவம் கொண்டு நின்றார். வலைவீசி அப்பெரிய மீனைப் பிடித்தார்.


 பின்னர் அதன் கண்னை தோண்டி தன் மோதிரத்தில் பதித்துக் கொண்டார். இதனால் கண்ணிழந்த மீன் வடிவம் கொண்ட திருமால் சிவபெருமானிடம் தன் பழைய உருவைத் தருமாறுக் கேட்க, அவரும் தந்து ஆசி கூறினார். தேவர்களின் வேண்டுகோளின்படி அட்டூழியம் செய்த மீனை அழிக்க சிவபெருமான் எடுத்த உருவமே மச்ச சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காஞ்சிபுரத்துக் கோயிலில் தரிசிக்கலாம். அங்கு கல் தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவர்க்கு வில்வார்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாய் அன்று கொடுத்து, எள் தீபமிட தொழில் விருத்தியடையும். பல புதியத் தொழில்கள் தோன்ற ஏதுவாகும்.

64 சிவ வடிவங்கள் (59)

59. கூர்ம சம்ஹார மூர்த்தி







ஒரு காலத்தில் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் தீராத சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் இருதரப்பிலும் எண்ணற்ற உயிர்சேதம் ஏற்பட்டது. இதனால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுதம் உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்ற யோசனையை பிரமனிடம் கூறினர். பிரமன் திருமாலிடம் கூற அவரது துணையுடன் பாற்கடலைக் கடைந்தனர். இருதரப்பிற்கும் ஈடு கொடுக்க முடியாமல் மந்திரமலை ஆடியது. இதனால் திருமால் மலையின் அடியில் சென்று ஆமையாகி மலையைத் தாங்கினார். இதனால் விஷம் வந்து, அதை சிவபெருமான் உண்டது வரை அனைவரும் அறிந்ததே. விஷம் வரக்காரணம் சிவனை வணங்காதது என்று உணர்ந்தோர் அவரை வணங்கினார். இவனது ஆசியுடன் அமுதம் கடைய சென்றனர். 

இப்பொழுதும் ஆமை வடிவம் தாங்கிய சிவபெருமான் மலையைத் தாங்கினார். அமிர்தமும் வந்தது. அதனைத் தொடர்ந்து பல அறிய பொருட்களும் வெளிவந்தது. அமிர்தத்தை தேவர்கள் மட்டும் அடையும் நேரத்தில் திருமால் மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுத்தார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தம் உண்டனர். இவ்விசயத்தை சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் சொன்னார்கள். திருமால் மிக்கக் கோபத்துடன் கையில் இருந்த அகப்பையால் அவர்களை இரு கூறாக்கினார். அவர்கள் அமுதம் உண்ட பலனால் இறக்காமல், சிவபூஜை செய்து ராகு, கேது கிரகங்களாக உருமாறி இன்றளவும் தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரர்களைப் பிடித்து வாட்டுகின்றனர். இதனிடையே மந்திமலையைத் தாங்கியபடி நின்ற (திருமால்) ஆமை ஏழு சாகரங்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் கடல் நீரையும் குடித்து சேற்றையும் உண்டது. ஆமை அனைத்தையும் உண்டது. இதனால் சந்திர, சூரியர் கடலில் சென்று மறைய பயந்து வேறொங்கோ ஒளிந்துக்கொண்டனர், இருளின் பிடியில் உலகம் அமிழ்ந்தது, 


இதனால் உலகமாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர். ஆமையை அழிக்குமாறு கூறினார். உடனே சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் அவ்வாமையின் உடலைக்குத்தி அதன் இறைச்சியை வழித் தெடுத்தார். பெருமானே அதன் ஓட்டை ஆபரணமாக்க வேண்டுமெனத் தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பப்படி தன் திருமார்பில் இருந்த பிரமனின் தலைமாலையின் நடுவே யொருத்தி இணைந்தார். திருமால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். திருமாலாகிய ஆமையைக் கொன்றதால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.



சென்னையிலுள்ள பாரிமுனைக்கருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் கோயிலில் இவரது வரை ஓவியம் காணப்படுகின்றது. அங்கு சிவமூர்த்திகளின் ஓவியம் நிறையக் காணப்படுகின்றது. இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், திங்களன்றுக் கொடுக்க நீர் கண்டம் மறையும் பயம் விலகும். தம்பதியர் ஒற்றுமைப் பெருகும்.



thanks to temple.dinamalr

64 சிவ வடிவங்கள் (58)

58. பிரம்ம சிரச்சேத மூர்த்தி



மேருமலையில் இருக்கின்ற உயர்ந்த சிகரமொன்றில் திருமாலும், பிரம்மனும் வீற்றிருக்கின்றனர். அப்போது எண்ணற்ற முனிவர்களும், தேவர்களும் அங்குவந்து இருவரையும் தாழ்மையுடன் வணங்கி அவர்களிடம் உலக உயிர்கள் அனைத்தின் மனதிலும் இருப்பவர் உங்களில் யாரென்றுக் கூறுங்கள் என்றுக் கேட்டனர். இச்செய்தியால் கர்வம் கொண்ட திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தானே அனைவர் மனதிலும் இருப்பவன் என்ற ரீதியில சண்டை ஏற்பட்டது, இதனைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் நழுவினர். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னும் சண்டைத் தொடரவே வேதமும், பிரணவம் உங்களில் இருவரும் பெரியவர் அல்ல, சிவபெருமானே பெரியவர் என்றது. மீண்டும் கேளாமல் சண்டை நீண்டது, இதனையறிந்த சிவபெருமான் ஜோதி வடிவத்துடன் அங்கே வந்து அதன் நடுவே தம்பதி சமேதராய் திருக்கைலையில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காட்டினார். இதனைக் கண்ட திருமால் சிரம் தாழ்த்தி வணங்கி தோல்வியை ஒப்புக் கொண்டு சிவபெருமானை துதித்தார். ஆனால் பிரம்மனோ கர்வமடங்காமல் தன்னுடைய நடுத் தலையால் சிரம் சிவபெருமானை இகழ்ந்துப் பேசினார். இதனைக் கண்ட சிவபெருமான் அவரது கர்வத்தை அழிக்கவென்னி பைரவரை நினைத்தார். 

பைரவர் வந்தவுடன் பிரம்மனின் நடுத்தலையை தன் நக நுனியால் கிள்ளியெடுத்து தன் கைகளில் ஏந்தியபடி அனைத்து தேவர் முனிவர்கள் இருப்பிடம் சென்று இரத்தப் பிச்சைக் கேட்டார். இரத்தம் கொடுத்து மயங்கிய பிரம்மாவை எழுப்பி அவர்கள் கர்வத்தை அடக்கினார். பின்னர் பிரம்மன் தன்னுடைய கர்வம் பைரவரால் அழியப் பெற்றார். சிவபெருமானை தவறாகப் பேசியதற்காக மன்னிப்பு வேண்டினார். பின் அவரை பலவிதமாகப் பாடித் துதித்து வழிபட்டார். அந்த சிரச்சேதம் செய்த தலை சிவபெருமானிடமே இருந்தது. இதனால் பிரம்மன் நான்முகன் என்றும் சதுர்முகன் என்றும் பெயர் பெற்றார். பிரம்மனின் கர்வத்தை அடக்க ஐந்தாவது தலையை நகநுனியால் கிள்ளியதால் சிவபெருமானுக்கு பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்றப் பெயர் ஏற்படலாயிற்று. இவரை வழிபட திருக்கண்டியூர் செல்ல வேண்டும். இத்தலம் திருவையாறு அருகே அமைந்துள்ளது. இறைவனது திருநாமம் பிரம்மநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் வணங்கப் படுகின்றார். இங்கமைந்த பிரம்ம தீர்த்ததில் மூழ்கி இறைவனுக்கு வில்வார்சனை செய்ய பிரம்மஹஸ்தி தோஷம் விலகும். தோல் சம்பந்தப்பட் வியாதிகள் குணமடையும்.

மாசிமாத 13,14,15 ஆகிய தேதிகளில் மாலை 5.45-6.15 வரை சூரிய ஒளி இறைவன் மீதுப்படுவது சூரியனே இவரை வணங்குவதாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் நாமும் அவருடன் வழிபட சூர்ய சம்பந்தமான தோஷம் விலகும். இவர்க்கு குவளைமலர் அர்ச்சனையும், சக்கரைப் பொங்கல் அல்லது கொண்டைக் கடலை நைவேத்தியம் சனி அல்லது திங்களன்று கொடுக்க திருமணம் கைகூடும் தொழிலில் முன்னேற்றமும், பகைவர் தொல்லையும் தீரும்.

thanks to temple.dinamalar