Saturday, 11 June 2016

சப்தபதி (உரையுடன் )

மணமகன் மணமகளிடம் சொல்வது:


ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ் 
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்

ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ் 
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம் 
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி 
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை 
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.
============================================
முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
========================================
இருவரும் சொல்வது
========================================


ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்மானுஷட்டான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.


Saturday, 4 June 2016

64 சிவ வடிவங்கள் (50)

50. ஏகபாதத்ரி மூர்த்தி




தொடக்கமும், முடிவும் அற்றவன் சிவபெருமான். அவரே உலகின் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பவர், அவரன்றி எப்பொருளும் பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை அனைத்து இயக்கமும் அவராலேயோ தொடர்ந்து நடைபெறுகின்றன. அவராலேயே முடிகின்றன, அவர் ஒரு பாதம் கொண்டவராக உலகை உருவாக்க சுத்தமாயையின் அடிப்புறமாக அசுத்தமாயையின் இடத்தில் புலப்படாத பல மகான்களை உருவாக்கினார். 

அவர்களின் ஆணவம் மட்டும் கொண்ட ஆன்மாவாகவும், ஆணவம், கன்மம் என இரண்டு கொண்ட ஆன்மாக்களும் மும்மலம் கொண்ட ஆன்மாக்களுக்கு வேண்டிய உடல், செயல், ஐம்புலன்கள், சுகதுக்க அனுபவங்கள் ஆகியவற்றிற்கு உதவுபவராக உள்ளன. மேலும் இவரே மும்மூர்த்திகளாகி படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்கின்றார். இவரது அனைத்து திருவிளையாடல்களும், அனைத்தும் மூர்த்தங்களும் உலக ஆரம்பத்தில் இவரிடம் தோன்றி இவரிடமே முடிவில் ஐக்கியமாகி விடுகின்றது.


 இவரது இதயத்தில் உருத்திரனும், இடப்பாகத்தில் பிரமனும், வலப்பாகத்தில் திருமாலும், அவரது கண்களில் இருந்த சந்திர சூரியனும், அவரது துவாசத்திலிருந்து வாயுதேவனும், கழுத்திலிருந்து கணேசனும், (தொப்பையில்) வயிற்றிலும் இருந்து யமன், இந்திரன், வருணன், குபேரனும், பிறப்பர், மேலும் பிரத்யங்கத்திலிருந்து ஐம்பது கோடி தேவர்களும் தோன்றுவர். அவரது முடிவுகளில் இருந்து பலகோடி முனிவர்கள் தேவர்கள் தோன்றுவர். 

ஒவ்வொரு முறையும் உலகம் புதிதாய் புதுப்பிக்கும் போது மேற்க்கண்ட அனைவரும் தோன்றுவர். உயிரினங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி, தீயவர்களை அழித்து இறுதியில் அவருள்ளே ஐக்கியமாவார்கள். மீண்டும் மீண்டும் தோற்றுவித்து தம்முள் அடக்குவதால் இவர்க்கு பிறப்பென்பதும் இல்லாமல் இறப்பென்பதும் இல்லாமல் அனைத்தின் பிறப்பிடமான சிவபெருமானை நாம் ஏகபாதத்ரி மூர்த்தி என்போம்.

மாயவரமருகேயுள்ள தலம் இடைமருது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் மகாலிங்கேஸ்வரர், இறைவி பெருநலமுலையம்மை யாகும். இங்கமைந்துள்ள காருண்ய தீர்த்ததில் நீராடி அஸ்வமேத பிரகாரத்தில் வலம் வர ஏவல், துர்தேவகைள் மனநிலை பிறழ்வு போன்ற நோய்கள் மற்றும் கொடுமைகள் விலகும், இவர்க்கு வில்வார்ச்சனையும், வெண்பொங்கல் நைவேத்தியமும் வெள்ளிக்கிழகைளில் கொடுக்க மூன்று காலத்தையும் அறியும் அறிவு, முப்பிணி அகவல், நீள் ஆயுள் உண்டாகும்.

64 சிவ வடிவங்கள் (49)

49. சலந்தரவத மூர்த்தி



தேவலோகத்தரசனான இந்திரன் திருக்கைலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கிவர கிளம்பினார். வழியில் சிவபெருமான் உருமாறி நின்றிந்தார். இதை கண்ட இந்திரன் அவரிடம் பலவிதமானக் கேள்விகள் கேட்டார். எதற்கும் பதில் கொடுக்காமல் இருந்தபடியால் இந்திரன் சிவபெருமானை தன்னுடைய வச்சிராயுதத்தால் அடித்தான். அது தவிடுபொடியானது, இதனால் கோபமடைந்த சிவபெருமான் ருத்ரவடிவம் கொண்டார். உண்மை அறிந்த இந்திரன் பயந்துப்போய் அவரிடம் மன்னிக்க வேண்டினார். எனவே கோபம் அடக்கினார். 

அப்பொழுது கோபத்தால் உண்டான வியர்வையை வழித்தெடுத்தார். அது கடலில் விழ, அதுவொரு குழந்தையானது. அதனை கடலரசன் எடுத்து வளர்த்தான், அக்குழந்தையின் பெயர் சலந்தரன் ஆகும். சலந்தரன் வளர்ந்தவுடன் அசுரர்களுடன் சேர்ந்து பலவகையான ஆற்றல்களைப் பெற்றான். பின் தேவலோக தச்சனான மயனின் மேற்பார்வையில் ஒரு அழகிய தேரை உருவாக்கினான். அதன்பின் விருத்தை என்பவளை மணந்து வாழ்ந்து வந்தான். ஒருமுறை தேவர்களுடன் போரிட முடிவு செய்து மேருமலைக் சென்றான். அங்கிருந்த தேவர்கள் பயந்து திருமாலிடம் கூறினர். திருமால் சலந்தரனுடன் இருபதினாயிரம் ஆண்டுகள் போரிட்டும் முடிவில் சலந்தரனே வென்றான் திருமாலின் பாராட்டையும் பெற்றான்.

 இந்திரன் பயந்துக் கொண்டு திருக்கைலையிலேயேத் தங்கினான். இந்திரனின் இச்செயலைக் கேள்வியுற்ற சலந்தரன் திருக்கைலைச் சென்றான். இதற்கிடையே இந்திரனின் பயத்தைப் போக்கிய சிவபெருமான் சலந்தரனை அழிப்பதாக வாக்குறுதிக் கொடுத்தார். அதன்படி வயதான முனிவர் போல் தளர்ந்த உடல், கையில் கமண்டலம், தடியை ஊன்றிய படி சிவபெருமான் மாறினார். அவரது சேனைகள் அவர் பின்னால் நின்றன.

சலந்தரனை வழிமறித்த சிவபெருமான் அவனைப் பற்றி விசாரித்தார். சலந்தரன் தன்னைப் பற்றியும் தன்தகப்பனைப்பற்றியும் கூறி சிவபெருமானுடன் போரிட வந்துள்ளதாகக் கூறினான். சிவபெருமானும் சிரித்துக் கொண்டே சிவனை எதிர்த்தால் ஒரு நொடியில் மாள்வாய் என்றார். சலந்தரன் அவரிடம் தன் ஆற்றலைக் காட்டினான். 

உடனே வயதான தோற்ற சிவபெருமான். நான் சிவனுக்கு அடுத்தநிலை உள்ளவன் எனவே இந்த சக்கரத்தை உன்தலையில் வை பார்ப்போம் என்றபடியே தனது பாதத்தால் தரையை கீறி ஒரு சக்கரத்தை உண்டாக்கினார். உடனே சலந்தரன் அதை எடுத்து தலைமேல் வைக்க அது அவனை இருகூறாக்கியது. பின் சிவனிடம் தஞ்சமடைந்தது. பின் அசுரக்கூட்டத்தை சாம்பலாக்கினார். சலந்தரன் அழிந்ததால் அனைவரும் ஆனந்தப்பட்டனர். அவரவர் பதவியை மீண்டும் வகித்தனர்.

 தேவர்கள் துயர்துடைக்க சலந்தரனை வதம் செய்த மூர்த்தியே சலந்தரவத மூர்த்தி யாவார். இவரை தரிசிக்க நாம் செல்லவேண்டியத் தலம் திருவாருர் அருகேயுள்ளள திருவிற்குடி யாகும். இறைவன் வீரட்டானேஸ்வரர் இறைவி பரிமளநாயகி. இங்குள்ள சங்கு, சக்கர, ஞானதீர்த்தங்களினால் சலந்தரவத மூர்த்தியை அபிசேகம் செய்ய அவர்களின் தீராத துயரத்தினையும் தீர்த்து மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாயன்றுக் கொடுக்க விஷப்பூச்சிகள் அரவம் இவற்றினால் ஏற்படும் தொல்லை அழியும்.

64 சிவ வடிவங்கள் (48)

48. கஜாந்திக மூர்த்தி




சூரபத்மனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சீர்காழியில் மறைவாக வசித்து வந்தான். அங்கே சிவபெருமானைத் துதித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையே தேவர்கள் கொடுமைத் தாங்காததால் இந்திரனைத் தேடி சீர்காழி வந்தனர். இந்திரனையும் அழைத்துக் கொண்டு திருக்கைலை அடைந்தனர். இந்திராணி ஐயப்பனின் பாதுகாப்பில் இருந்தார். கைலையில் சனகாதி முனிவர்கள் யோகத்தினைப் பற்றி சிவபெருமானிடம் அளவளாவிக் கொண்டிருந்ததால் இவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்தனர்

. அச்சமயத்தில் சூரபத்மனின் தங்கையான அசுமுகையும் அவளது தோழியான துன்முகியும் சீர்காழி சென்றனர். இந்திராணியை சூரபத்மனை மணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். இதற்கு மறுத்த அவரை இழுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த ஐயப்பன் அவர்களுடன் கடுமையான போர் நடத்தினார். அவர்கள் இந்திராணியை கொடுமைப்படுத்தியதற்காக அவர்களின் கையையும் வெட்டி அனுப்பினார். இச்செய்தி கேள்வியுற்ற சூரபத்மனின் மகனான பானுகோபன் அவர்களைப் பழிவாங்கப் புறப்பட்டான். பின்னர் சூரபத்மன் தனது சகோதரிகளின் கையை வளரச் செய்தான். அதன்பின் பானுகோபன் இந்திராணியையும், இந்திரனையும் தேடி அலைந்தான் அவர்களைக் காணவில்லை. உடனே இந்திரலோகம் அடைந்தான் அங்கும் காணாததால் இந்திரனின் புத்திரனாகிய ஜெயந்தனிடம் போரிட்டு அவர்களது ஐராவதத்துடன் கிளம்பினான்.

அப்போரில் ஜெயந்தன் மயங்கினான். இதனால் ஐராவதம் பானுகோபனுடன் சண்டையிட்டது. அதுவும் அடிவாங்கி பின்வாங்கியது. பின் அனைத்து தேவர் குழாமையும் அமர்த்தினான். இதனால் மனம் வருந்திய ஐராவதம் திருவெண்காடு சென்று முப்பொழுதும் நீராடி இறைவனைத் துதித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அதற்கு காட்சிக்கொடுத்தார். அதன்பின் அதன் குறைகளை நீக்கி அதன் ஒடிந்த கொம்புகளை புதுப்பித்தார். பழையபடி இந்திரனின் வாகனமாக்கினார். அதற்குப்பிறகு முருகபெருமானால் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தன்னுலகம் திரும்பினான். ஐராவதமும் அவனுடன் சென்றது, தேவர்குழாம் மீட்கப்பட்டனர். ஐராவதமாகிய 


ஒரு யானையின் வேண்டுகோளுக்கு மனமிரங்கி காட்சிக் கொடுத்து வேண்டும் வரம் கொடுக்க சிவபெருமான் கஜாந்திக மூர்த்தி என வணங்கப்படுகிறார். இவரை சீர்காழியருகே அமைந்துள்ள திருவெண்காட்டில் வணங்கலாம். இங்குள்ள இறைவனின் திருநாமம் திருவெண்காட்டுநாதர் என்றும் இறைவி திருநாமம் பிரம்மவித்யா நாயகி என்றும் வணங்கப்படுகிறது. இங்கமைந்துள்ள அக்னி, சூர்ய, சந்திர தீர்த்ததில் அடுத்தடுத்து நீராடி இறைவனை வழிபட இந்திரலோக வாழ்வு தித்திக்கும். மே<லும் மகாவில்வார்ச்சனையும் சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க, தடைவிலகி எடுத்தக் காரியம் ஜெயமாகும் என்பது ஐதீகம்.

64 சிவ வடிவங்கள் (47)

47. அசுவாருட மூர்த்தி






மாணிக்கவாசகர் சிவபெருமானின் கூற்றுப்படி ஆவணி திங்களில் குதிரைகள் வரும் என அரண்மனையில் காத்திருந்தார். அரசரும் மாணிக்கவாசகரை அழைத்து குதிரைகள் எப்பொழது வருமென கேட்டார். இன்னும் ஓரிரண்டு நாட்களில் வரும் என்றார். அனைவரும் காத்திருந்தனர், ஆனால் குதிரைகள் வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. ஆகவே மாணிக்கவாசகரைத் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி சிறையிலடைத்தார். சிறையில் மாணிக்கவாசகர் சோர்ந்துவிடாமல் சிவபெருமானைத் துதித்தபடியே இருந்தார் பாடல்கள் பலப்பாடியபடி இறைவனை துதித்தார். 


இதனால் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவர் தனது கணங்களை அழைத்து 
கானகத்திலுள்ள நரிகள் அனைத்தையும் பிடித்து வருமாறும், பின்னர் நரிகளை பரிகளாக்கி அவற்றை அழைத்துச் செல்லும் பொறுப்பை தனது கணங்களுக்கு ஒப்படைத்து விட்டு, அதன் தலைவர் பொறுப்பை ஏற்று அதனை வழிநடத்தியபடி சிவபெருமான் உயர்ந்த வகை குதிரைமீதேறி வந்தார்.

குதிரைகள் வருவதைக் கண்டு மன்னன் மனம் மகிழ்ந்து அனைவரையும் உபசரித்தார் குதிரைகளை லாயத்தில் கட்டினார். இதனால் மாணிக்கவாசகரை விடுவித்தான். இரவில் குதிரைகள் தனது சுயரூபத்தைக் காட்டி நரிகளாக மாறி கானகத்திற்கேச் சென்றனர். இச்செய்தி மன்னனை அடைந்ததும் மாணிக்கவாசகர் பழையபடி கொடுமைபடுத்தப்பட்டு சிறைக்குச் சென்றார். அச்சமயத்தில் மாணிக்கவாசகரின் எண்ணத்தின் விளைவாகவும், சிவபெருமான் மேல்கொண்ட நிந்தனையாலும், வைகையில் வெள்ளம் வந்து கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. அதையும் அடைக்கும் பணியில் வீட்டிற்கொவர் ஈடுபட்டிருந்தனர். 


அப்பொழுது வயதானப்பாட்டி தனக்கு ஆள்இல்லாமல் வருந்தினார். அப்பொழுது கூலியான் போல் வேடமுற்று பாட்டியின் பிட்டுவை உண்டு வேலை செய்யாமல் படுத்திருந்தார். அச்சமயம் அங்குவந்த மன்னன் சிவபெருமானைப் பிரம்பால் அடிக்க அவ்வடி உலக உயிர்கள் ஒவ்வொருவரின் மேலும் பட்டது. உடன் வானில் அசரீரீ தோன்றி மாணிக்கவாசகரை விடுவிக்கும்படி சொன்னது உண்மையறிந்த மன்னன் அவரை விடுவித்து சிவபெருமானிடமும், அவரிடமும் மன்னிப்பு வேண்டினான். மாணிக்கவாசகர்க்காக நரிகளை பரிகளாக்கி அதன் தலைவனாக சென்று வந்த கோலமே அசுவாருட மூர்த்தி யாகும்.

மதுரையில் கோயில் கொண்டுள்ள இறைவனது திருநாமம் சொக்கநாதர். இறைவி திருநாமம் மீனாட்சி யாகும். இங்கமைந்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி இறைவனை வணங்கினால் பக்தி நமக்கு மேலிடும். இவர்க்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் திங்களன்று கொடுக்க வாகன யோகம், மனம் பக்குவமடையும்.