Sunday, 24 April 2016

64 சிவ வடிவங்கள் (43)

அகோர மூர்த்தி 
(சச்தந்துவை கொன்ற வடிவம்)


சத்ததந்து என்றும் மன்னன் சிவனருளால் பல வரங்களைப் பெற்று தனக்கு நிகர் எவருமில்லை என வாழ்த்து வந்தான், அவனது செருக்கால் தான் சிவபெருமானுக்கு செய்த அர்ச்சனையே அனைத்திற்கும் காரணமென நினைத்தான். தான் ஒரு வேள்வி செய்ய எண்ணி தேவர்களையும், முனிவர்களையும் மேரு மலையடிவராத்திற்கு அழைத்து வேள்வி செய்யத் துவங்கினான். பின்னர் நான்முகனை அழைத்து "நீ வேள்வி செய் என்றான்.

 இதனைக்கண்ட விஷ்ணு சிவபெருமானைத் தொழுதுதான் நீ குறைவில்லா செல்வத்தையும் எல்லா வளத்தையும் பெற்றாய். எனவே அவரை கண்டிப்பாக அழைக்க வேண்டு மென்றார். நான்முகனும், அதையே ஆமோதித்தார். பின் மற்ற அனைவருக்கும் இந்த யாகம் முறையற்றது என்றனர். இதனைக் கேட்ட சத்ததந்து மிகவும் ஆத்திரத்துடன் பற்களைக் கடித்து கோபப்பார்வைப் பார்தத்தான். இதனால் என்ன விளைவு ஏற்படுமோ என அனைவரும் பயந்தனர். இருப்பினும் அந்த வேள்வியை அவன் முடித்தான். இச்செய்தி நாரதர் மூலம் சிவபெருமானை அடைந்தது. கோபம் கொள்ளச் செய்தது இச்செய்தி. 

எனவே உடனே மண்டலத்தை தேராக்கி, உலகை சக்கரமாக்கி, அக்னியை வில்லாக்கி,சந்திரனை நாணாக்கி, வருணனை பாணமாக்கி, குமரனை தேரோட்டுபவனாக்கு போர்க் கருவிகளுடன் தன்னருகில் இருந்த வீரபத்திரரை நோக்கி சத்ததந்துவை அழித்து வரும்படி ஏவினார். அதற்கு அடிப்பணிந்த வீரபத்திரர் மேருமலையை அடைந்தார்.


இச்செய்தி தெரிந்த தேவர்குலம் நாலாபுறமும் சிதறித் தெரித்து ஒடினர். ஆனாலும் அனைவரையும் பிடித்து தான் நினைத்தபடி துன்புறுத்தினார். பின்னர் தனது வர்ணாஸதிரத்தால் வேள்வியை அழித்தார். உடன் சத்ததந்து கோப்பட, அவனையும் அகோர அஸ்திரத்தினால் கொன்றார். இவரது கோபத்தைக் கண்ட தேவ முனிவ, ரிஷிக்களின் மனைவியர் தங்கள் கணவரை தரும்படி வேண்ட, இறந்த வர பிழைந்தனர். பின் அவர்களை அவரவர்க்குரிய பதவியில் அமர்த்தினார். பின் வீரபத்திரர் சிவபெருமானிடம் சரணடைந்தார். அகோர அஸ்திரத்தினால் சத்ததந்து வேள்வியை அழித்துக் கொன்ற மூர்த்தமே "அகோர அத்திர மூர்த்தி எனப் பெயர் பெற்றது. 

இவரை திருவெண்காட்டில் காணலாம். இங்கு மட்டுமே இவரது திருவுருவம் உள்ளது. மாசிமாத கிருஷ்ணபட்ச ஞாயிறு இரவு 12 மணிக்கு இவர் தேன்றினார். ஒவ்வொரு ஆண்டும் இதே நேரத்தில் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் அகோர பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துக் கொள்ள அவரது பூரண அருள் நமக்குக் கிட்டும். மேலும் வில்வம் அல்லது செவ்வரளி அர்ச்சனையும், பால் நைவேத்தியமும் திங்கள், பிரதோஷம் அன்றுக் கொடுக்க பகைவர் ஒழிவர். நீண்டகால வழக்கு பைசலாகும். தம்பதியருடையே ஒற்றமை அதிகரிக்கும்

Saturday, 23 April 2016

64 சிவ வடிவங்கள் (42)

வீரபத்ர மூர்த்தி 





தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எப்பொழுதுமே இடைவிடாத போர் நடந்துக்கொண்டிருக்கும். இதனிடையே தேவர்கள் இந்திரனின் துணையுடன் அசுரர்களை போரில் தோற்கடித்து அவர்களின் உடலுறுப்புக்களைத் துண்டித்தனர். அசுரர்கள் தேவர்களை வெற்றி கொள்ள முடியாமல் தவித்தனர். அசுரர்கள் தங்கள் குருவான சுக்கிரனை ஆலோசித்தனர். அவரும் அசுரர்களுக்கு ஆலோசனைக் கூறித் தேற்றினார். முடிவில் சுக்கிரன் அசுரர்களில் வீரமார்த்தண்டன் என்பவனை அழைத்து நான்முகனை நினைத்து தவமியற்றச் சொன்னார். 

அதன்படியே வீரமார்த்தண்டன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் கடுமைத்தாங்காத நான்முகன் காட்சிக் கொடுத்தார். தவத்தினால் எலும்பும், தோலுமான வீரமார்த்தண்டனை பழையபடி ஆக்கி என்ன வேண்டுமெனக் கேட்டார். வீரமார்த்தண்டன் மூன்று உலகங்களையும் எனை வெல்ல யாருமில்லாதபடி நான் அரசாள வேண்டுமென்ற வரத்தை வாங்கினான். அதன்படி தேவர்களை, தேவபெண்டிரை துன்புறுத்தினான். தேவர்களை செய்தக் கொடுமை உச்சக்கட்டம் அடையவே பொறுக்கமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர். 

சிவபெருமான் அவர்களுக்கு ஆறுதல் கூறி வீரபத்திரரை அழைத்தார். வீரபத்திரரும் தேவர்களின் துயர்துடைக்கவும், சிவபெருமான் ஆணையாலும் வீரமார்த்தண்டனை எதிர்க்க முடிவெடுத்தார். முதலில் வீரமார்த்தண்டனின் படைபலங்களைக் கொன்றார். பின்னர் வீரமார்த்தண்டனை போரிற்கு அழைத்து போரிட்டார். மிகக் கடுமையான போராக அது அமைந்தது, வீரமார்த்தண்டனும் பலவிதமான மாயைகளைச் செய்து தப்பிக்கப் பார்த்தான். ஆனால் கடைசியில் ஒன்றும் ஆகவில்லை. 

வீரபத்திரர் வீரமார்த்தண்டனைக் கொன்றார். பின்னர் தேவர்களின் துயரினைத் துடைத்து இந்திரன், நான்முகன் என அனைவரையும் பதவியில் அமர்த்தி உலக உயிர்கள் அனைத்திற்கும் சுகவாழ்வளித்தார். வீரமார்த்தண்டனைக் கொன்று தேவர்களின் துயர்துடைக்க சிவபெருமான் கொண்ட கோலமே வீரபத்திர மூர்த்தி யாகும்.

காரைக்கால் அருகே அமைந்துள்ளது பெருந்துறையாகும். செவ்வாய்தோஷ நிவர்த்திக்கு வாழ்க்கை முறைக்கு வேண்டிய மனஉறுதியைத் தருபவர் இவரே, சித்திரை மாச செவ்வாய்கிழமைகளில் வீரபத்திர விரதம் மேற்கொள்ள வேண்டும். செந்நிறமலர் அர்ச்சனையும் புளிசாத நைவேத்தியமும் திங்கள் அல்லது வியாழக்கிழமைகளில் கொடுக்க எதிரி புத்தி அதிகரிப்பு, சகோதரபாசம், குடும்ப ஒற்றுமை நீடிக்கும்.

64 சிவ வடிவங்கள் (41)

ஷேத்திரபால மூர்த்தி 
(ஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம்)


 

ஆரம்பம் முடிவு இல்லாதவனும், ஆதியும் அந்தமும் கொண்டவனாகிய சிவபெருமானே பலகோடி உயிரினங்களைப் படைக்கின்ற பிரம்மனாகவும், உருத்திரனாகக் கொன்றும், மகேஸ்வரராக மறைந்தும், திருமாலாகி காத்தும், சதாசிவமூர்த்தமாகி அருள் செய்தும், இவ்வாறு மேற்கண்ட ஐந்தொழில்களையும் செய்து வருகிறார். அவர் அசைந்தால் மட்டுமே அசையும் உலகமனைத்தும் அவரது கட்டளையாகவே அனைத்துக் கோடி உயிரினங்களும், கோடிகோடியான அண்டங்களும் இயங்குகின்றது. அவரே அனைத்து மாசமுத்திரங்களையும் உருவாக்குபவர், முடிவில் அதனலேயே அழிப்பவர். தீவாந்திரங்களையும், ஈரேழு உலகத்தையும், ஆக்கவொண்ணா அண்டங்களையும் அவரே படைத்தார்,  படைக்கின்றார். 

அதுவொரு காலம். இந்த அண்டத்தினை ஒரு ஊழிக்காலமானது அலைகளால் மூடியது. அதில் மூழ்கியவை எட்டு பர்வத மலைகளையும் மூழ்கடித்ததுடன் அனைத்து பர்வதங்களையும் அழிக்கும்படி பெரும் வெள்ளம் தோன்றியது. அவ்வழி வெள்ளத்தில் நவகிரகங்கள் சூரிய, சந்திர, தேவர்குழாம், மகாநாகங்கள், எட்டு திசை காவலர்கள், கற்பகத்தரு, வாழ்வன, பறப்பன, ஊர்வன, மிருகங்கள், தாவரங்கள் மனிதர்கள், இந்திரன் என அனைவரும் அழிந்தனர். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துப்போயின நீண்ட நாட்கள் இந்நிலையேக் காணப்பட்டது.

பின்னர் மான், மழு ஏந்தி பாம்பு, புலித்தோலாடை அணிந்து கொன்றை மலர் சூடி நீலகண்டமும், நெற்றிக் கண்ணை மறைத்து, பார்வதியுடன், ஆயர்க்கலைகளையும் அழைத்து கொண்டு ஒரு படகில் ஏறிய சிவபெருமான் உலகை ஒளியால் நிரப்பி, இருளை இருட்டடீப்பு செய்தார். அழிவுக்கு காரணமான வருணன் அவர்களை வணங்கி தம்பதி சமேதரான இறைவனுக்கும், இறைவிக்கும் முத்து, பவளம் கொண்டு அர்ச்சித்து ஆசிவேண்டினார். சிவபெருமான் அருளாசி வழங்கினார். 

பின்னர் வெள்ளத்தை ஒரு நொடியில் துடைத்தெரிந்தார். பின்னர் மாண்டுவிட்ட அனைவரையும் எழுப்பி அவரவர் பணியில் அமர்த்தி அனைத்து உயிரினங்களையும் காத்தருளி ஈரேழு உலகத்திற்கும் நேர்ந்த துன்பத்தைக் கலைத்தார். அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களை காத்ததால் அவருக்கு சேத்திரபால மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.

 இவர் சேத்திரபாலபுரத்தில் உள்ளார். இவரை இடைவிடாது தரிசிக்க எதிரிகளிடமிருந்து விடுதலைக் கிடைக்கும். அரக்க குணமுடையவர்களிமிருந்து நம்மையும், நம் சொத்துக்களையும் காப்பவர் இவரே. இவரது படத்தை தொழில் நடைபெறும் இடம், வீடுகளில் வைத்து வழிபட தீயவர்கள் ஓடுவார்கள். இவர்க்கு நவமுக ருத்திராட்ச அர்ச்õனையும், இனிப்பு நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் கொடுக்க நம்முடைய தொழில் விருத்தியடையும்

64 சிவ வடிவங்கள் (40)

வடுக மூர்த்தி




சிவார்ச்சனையால் பலனடைந்த துந்துபி என்போனின் மகனான முண்டாசுரன். இவன் இளமையிலேயே சிவபெருமானை நோக்கி, ஊண், உறக்கமின்றி, வெயில், மழை, குளிரெனப் பாராமல், ஐம்புலனையும் அடக்கி சிவபெருமானை மட்டுமே நிந்தையில் கொண்டு தவம் செய்தான். அவனது தவத்தில் மெச்சிய சிவபெருமான் நான்முகன், திருமால் இருபுறம் வரவும், தும்புருநாதர் இசைபாடவும், பார்வதியுடன் இடப வாகனத்தில் எழுந்தருளினார் முண்டாசுரன் மகிழ்ந்தான், பின் யாராலும் அழிக்க வொண்ணாத வரம் கேட்டான். கேட்டபடி கொடுத்து மறைந்தார். 

அவ்வரத்தினால் தேவர்கள், சந்திர, சூரிய, குபேரன் என அனைவரையும் துன்புறுத்தினான். பின்னர் குபேர சொத்துக்கள் அத்தனையையும் கொண்டுசென்றான். அவனுடன் போர்புரிந்து தோற்றனர். எனவே நான்முகனை சரணடைந்தனர். நான்முகன் முண்டாசுரனை அழிக்கப் புறப்பட்டார். இரு படைக்கும் கடும் போர் நடைபெற்றது. நான்முகனால் அசுரனை வெற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையில் நான்முகன் சிவபெருமானை வணங்கி ஐயனே ! எனது துயர் தீர உதவ வேண்டும். அசுரனை அழிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினார். அவ்விண்ணப்பத்தைக் கேட்ட சிவபெருமான் தன்னிடமிருந்து தோற்றுவிக்கப்பட்ட வடுக மூர்த்தியை அனுப்பி முண்டாசுரனை வதம் செய்யச் சொன்னார்.

வடுகமூர்த்தியும் அவ்விடம் சென்று முண்டாசுரனை ஒரு நொடியில் வதம் செய்தார். இதனைக் கண்ட நான்முகன் மனம் மகிழ்ந்தார். தேவர்கள் பூமாரிப் பொழிந்து வடுகமூர்த்தியை வாழ்த்தினார். பின்னர் வடுகமூர்த்திஅனைவரையும் விடுவித்து அவரவர் இடத்தில் அமர்த்தி விட்டு சிவபெருமானிடம் சென்று ஐக்கியமானார். 


நான்முகனின் வேண்டுகோளிற்கேற்ப சிவபெருமான் முண்டாசுரனை அழிக்க எடுத்த முர்த்தமே வடுக மூர்த்தி யாகும். வடுகரை தரிசிக்க நாம் செல்லவேண்டிய தலம் பாண்டிக்கருகேயுள்ள வடுகூர் ஆகும். இங்குள்ள இறைவன் பெயர் வடுகநாதன், வடுகூர்நாதன் என்பதாகும். இறைவி பெயர் திரிபுரசுந்தரியாகும். (திருவாண்டார் கோயில் எனவும் இத்தலத்தை வணங்குவர்) இங்கு வாமதேவ தீர்த்தமும், வன்னிமரம் தலமரமாகவும் உள்ளது. கார்த்திகை அஷ்டமியில் இங்கு பைரவர்க்கு விசேஷமாகும்.

 ஏழரை சனியின் துன்பம் அகல சனிதோறும் வடுக மூர்த்தி முன்பமர்ந்து சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும். நாள்பட்ட வழக்குகள் வெற்றிபெற பூஜையுடன் தேனாபிசேகம் செய்து 9 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். ஞாயிறன்ணு வடுகருக்கு விபூதியபிசேகம் செய்யத் திருமணம் விரைவில் நடைபெறும். மேலும் வெண்தாமரை அர்ச்சனையும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும், புதன் தோறும் கொடுக்க நீள் ஆயுள் கிடைக்கும். ஆரோக்கியம் நிலவும்