Thursday, 6 August 2015

64 சிவ வடிவங்கள் (39)

ஆபத்தோத்தாரண மூர்த்தி




ஆபத்திலிருந்து காக்கும் மூர்த்தி

அனைத்துவித மங்களமான ஒளிமயமான, ஜோதி மயமான சிவனே உலகில் சஞ்சரிக்கக்கூடிய அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் துன்பத்தின் போக்கக்கூடியவர். அவரையின்றி வேறொருவர் நமக்குத் துணை கிடையாது. அத்தகைய ஈடில்லா சிறப்பினைப் பெற்ற சிவபெருமானைச் சுற்றிலும் எண்ணற்ற தேவகணங்கள், பூதகணங்கள், நடனமங்கையர், நான்முகன், இந்திரன், திருமால், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், அசுரர், கிம்புருடர், கின்னரர், யமன், பதினென் கணங்கள், முருகன், வினாயகன், தேவியர், பார்வதி, காளி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, அபிராமி, மகேஸ்வரி, சப்தகன்னியர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆயுதங்கள், சப்தமாதர்கள், நாரதர், சந்திர, சூரிய, கிரகங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சப்தரிஷிகள், நட்சத்திக் கூட்டங்கள், மனிதர், நரகர், நாகர் என அனைத்து வகையான ஜீவராசிகளும் அவரைச் சுற்றிலும் நின்றபடி அனைவருக்கும் வேண்டிய வரங்களையும், வேண்டுவனவற்றையும் கொடுப்பார். அச்சமயங்களில் அவர்களது எண்ணப்படி சாதாரண மானிடர் போல் சட்டையணிந்து இருத்திருக்கரத்தினால் தண்டமும், கபாலமும் ஏந்தியபடி அவர் வீற்றிருப்பார்.


 இவ்வாறென்றுக் கூற முடியாதபடி அந்தந்த சமயத்திற்குத் தகுந்தபடி அனைவரின் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களின் துன்பங்களில் இருந்தும், ஆபத்திலிருந்தும் அவர்களைக் காத்து ரட்சிப்பார். ஆகவே அவரது அற்புதங்களும் அவதாரங்களும், மூர்த்தங்களும் இன்னக் காரணங்களுக்கெனக் கூறமுடியாது. துன்பம் அடைந்தோரையும், ஆபத்திலிருப்போரையும் காத்து ரட்சிக்கும் திருக்கோலமே ஆபத்தோத்தாரண மூர்த்தி யாகும். 

சீர்காழியில் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் பிரம்மபுரீஸ்வரர் என்றும், இறைவி பெயர் திருநீலைநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார். ஆபத்து சமயங்களில் இவரை வேண்ட, இவர் உதவுவார் என்பது ஐதீகம். அவரது திருவுருவங்கள் பலவற்றிற்கு இத்தன்மை இல்லையென்றாலும் அந்தந்த சூழலுக்கு கேற்றாற்போல் உதவிக்கிடைக்கும். இவர்க்கு எருக்கு, தும்பைப்பூ, முல்லை அர்ச்சனையும், புனுகு அபிசேகமும் வெள்ளியிரவு 12 மணியளவில் செய்தோமானால் வேண்டிய பலன் உடனே கிடைக்கும் என்பது உறுதி.

Wednesday, 5 August 2015

64 சிவ வடிவங்கள் (38)

பைரவ மூர்த்தி


பார்க்கும் யாவரும் அச்சப்படும் "அந்தகன் என்ற பெயருடைய அசுரனொருவன் சிவபெருமானை நினைத்து, பஞ்சாக்கினி மத்தியில் தவம் செய்தான். அத்தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் வந்து என்னவேண்டுமென்றுக் கேட்டார். நான்முகன், விஷ்ணு இவர்களை விட பலமும், யாவரும் அழிக்கமுடியாத ஆற்றலும் வேண்டுமென்றான். உடனே தந்து மறைந்தார் சிவபெருமான். சிவபெருமான் கொடுத்த வரத்தினால், பெற்ற ஆங்காரத்தினால் இந்திரன், விஷ்ணு, நான்முகன் என அனைவரிடமும் சண்டைப் போட்டான். அவனது சண்டைக்கு முன் அனைவரும் தோல்வியுற்றனர். அவனை மிஞ்சுபவர்கள் யாருமில்லை எனவே அவனிடமே சேர்ந்து விடுவதென முடிவெடுத்து விஷ்ணு முன்செல்ல தேவகணங்ளும் பின்சென்றனர். அனைவரும் அந்தகனிடம் சரணடைந்தனர். இதனால் அந்தகன் அனைவரையும் பெண்களைப்போல் உடை, நடை, பாவனைகளில் இருக்கும்படி கட்டளையிட்டான். அதன்படியே அனைவரும் பெண்களாயினர். பெண்களானபின்பும் அவனது கொடுமைத் தொடர அனைவரும் அக்கோலத்துடன் சிவபெருமானை வழிபட்டனர். சிவபெருமான் உடன் தோன்றி அவர்களை பார்வதியின் அந்தப்புரத்துப் பெண்களுடன் இருக்கச் செய்தார். இருப்பினும் விடாமல் தொல்லைக் கொடுத்து வந்தான் அசுரன். பொறுத்துப்பார்த்த தேவகணத்தினர் கையிலை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். 


சிவபெருமான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவர்க்கு ஆணையிட்டு அந்தகனை அழிக்க உத்தரவிட்டார். பைரவர்க்கும், அந்தகனுக்கும் இடையே அதிபயங்கரப் போர் நிலவியது. ஆனால் அசுரனின் சேனைகள் சுக்கிராச்சாரியால் உயிர் பெற்று வந்தன. உடனே சிவபெருமான் சுக்கிரனை விழுங்கினார். அடுத்த நொடி அசுரசேனைகள் அழிந்தன. பைரவர் தனது சூலத்தால் அந்தகனை குத்திச் சிவபெருமானை அடைந்தார். 


இதனால் மனம் மாறிய அந்தகன் தனது அகங்காரமெல்லாம் மறைய சிவபெருமானிடம் தன்னை பூதகணங்களுக்கு தலைவனாக்க வேண்டினார். அவனது ஆசையை நிறைவேற்றினார். சிவபெருமானின் வயிற்றிலிருந்த சுக்கிரன் அவரது சுக்கிலத்துடன் வெளிவந்தான். பின்னர் தேவர்கள் தொல்லையின்றி நிம்மதியுடன் வாழ்ந்திருந்தனர். அந்தகனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் எடுத்த வடிவமே "பைரவமூர்த்தி யாகும்.

(சிவபெருமானைப் போல் ஐந்துதலையுடன் இருந்த நான்முகனின் அகந்தையை அடக்க சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளியெடுத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன)

காசி முதல் பதினாறு பைரவர்


தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளியால் சகஸ்ரநாமம் தொடர்ந்து ஆறு தேய்பிறைகள் கூற புத்திரபாக்கியம் கிடைக்கும். பன்னிரெண்டு தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் சகஸ்ரநாமம் கூறி ஜென்ம நட்சத்திரர் அர்ச்சித்து பூந்தியை நைவேத்தியமாகக் கொடுக்க சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டிற்க்கு வரும். தேனாபிசேகம் செய்து நெய்விளக்கிட்டு உளுந்தவடை சாற்றி ஜென்ம நட்சத்திரத்தில் வழிபட வியாபாரம் செழிக்கும், மேலும் நாயுருவி இலை அர்ச்சனையும், சுத்த அன்னம் வெண்ணிற பசுவின் பால் கொண்டு சனிதோறும் நைவேத்தியம் கொடுக்க யமபயம் நீங்கி சுகம் உண்டாகும்.