Thursday, 6 August 2015

64 சிவ வடிவங்கள் (39)

ஆபத்தோத்தாரண மூர்த்தி




ஆபத்திலிருந்து காக்கும் மூர்த்தி

அனைத்துவித மங்களமான ஒளிமயமான, ஜோதி மயமான சிவனே உலகில் சஞ்சரிக்கக்கூடிய அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் துன்பத்தின் போக்கக்கூடியவர். அவரையின்றி வேறொருவர் நமக்குத் துணை கிடையாது. அத்தகைய ஈடில்லா சிறப்பினைப் பெற்ற சிவபெருமானைச் சுற்றிலும் எண்ணற்ற தேவகணங்கள், பூதகணங்கள், நடனமங்கையர், நான்முகன், இந்திரன், திருமால், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், அசுரர், கிம்புருடர், கின்னரர், யமன், பதினென் கணங்கள், முருகன், வினாயகன், தேவியர், பார்வதி, காளி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, அபிராமி, மகேஸ்வரி, சப்தகன்னியர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆயுதங்கள், சப்தமாதர்கள், நாரதர், சந்திர, சூரிய, கிரகங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சப்தரிஷிகள், நட்சத்திக் கூட்டங்கள், மனிதர், நரகர், நாகர் என அனைத்து வகையான ஜீவராசிகளும் அவரைச் சுற்றிலும் நின்றபடி அனைவருக்கும் வேண்டிய வரங்களையும், வேண்டுவனவற்றையும் கொடுப்பார். அச்சமயங்களில் அவர்களது எண்ணப்படி சாதாரண மானிடர் போல் சட்டையணிந்து இருத்திருக்கரத்தினால் தண்டமும், கபாலமும் ஏந்தியபடி அவர் வீற்றிருப்பார்.


 இவ்வாறென்றுக் கூற முடியாதபடி அந்தந்த சமயத்திற்குத் தகுந்தபடி அனைவரின் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களின் துன்பங்களில் இருந்தும், ஆபத்திலிருந்தும் அவர்களைக் காத்து ரட்சிப்பார். ஆகவே அவரது அற்புதங்களும் அவதாரங்களும், மூர்த்தங்களும் இன்னக் காரணங்களுக்கெனக் கூறமுடியாது. துன்பம் அடைந்தோரையும், ஆபத்திலிருப்போரையும் காத்து ரட்சிக்கும் திருக்கோலமே ஆபத்தோத்தாரண மூர்த்தி யாகும். 

சீர்காழியில் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் பிரம்மபுரீஸ்வரர் என்றும், இறைவி பெயர் திருநீலைநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார். ஆபத்து சமயங்களில் இவரை வேண்ட, இவர் உதவுவார் என்பது ஐதீகம். அவரது திருவுருவங்கள் பலவற்றிற்கு இத்தன்மை இல்லையென்றாலும் அந்தந்த சூழலுக்கு கேற்றாற்போல் உதவிக்கிடைக்கும். இவர்க்கு எருக்கு, தும்பைப்பூ, முல்லை அர்ச்சனையும், புனுகு அபிசேகமும் வெள்ளியிரவு 12 மணியளவில் செய்தோமானால் வேண்டிய பலன் உடனே கிடைக்கும் என்பது உறுதி.

Wednesday, 5 August 2015

64 சிவ வடிவங்கள் (38)

பைரவ மூர்த்தி


பார்க்கும் யாவரும் அச்சப்படும் "அந்தகன் என்ற பெயருடைய அசுரனொருவன் சிவபெருமானை நினைத்து, பஞ்சாக்கினி மத்தியில் தவம் செய்தான். அத்தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் வந்து என்னவேண்டுமென்றுக் கேட்டார். நான்முகன், விஷ்ணு இவர்களை விட பலமும், யாவரும் அழிக்கமுடியாத ஆற்றலும் வேண்டுமென்றான். உடனே தந்து மறைந்தார் சிவபெருமான். சிவபெருமான் கொடுத்த வரத்தினால், பெற்ற ஆங்காரத்தினால் இந்திரன், விஷ்ணு, நான்முகன் என அனைவரிடமும் சண்டைப் போட்டான். அவனது சண்டைக்கு முன் அனைவரும் தோல்வியுற்றனர். அவனை மிஞ்சுபவர்கள் யாருமில்லை எனவே அவனிடமே சேர்ந்து விடுவதென முடிவெடுத்து விஷ்ணு முன்செல்ல தேவகணங்ளும் பின்சென்றனர். அனைவரும் அந்தகனிடம் சரணடைந்தனர். இதனால் அந்தகன் அனைவரையும் பெண்களைப்போல் உடை, நடை, பாவனைகளில் இருக்கும்படி கட்டளையிட்டான். அதன்படியே அனைவரும் பெண்களாயினர். பெண்களானபின்பும் அவனது கொடுமைத் தொடர அனைவரும் அக்கோலத்துடன் சிவபெருமானை வழிபட்டனர். சிவபெருமான் உடன் தோன்றி அவர்களை பார்வதியின் அந்தப்புரத்துப் பெண்களுடன் இருக்கச் செய்தார். இருப்பினும் விடாமல் தொல்லைக் கொடுத்து வந்தான் அசுரன். பொறுத்துப்பார்த்த தேவகணத்தினர் கையிலை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டனர். 


சிவபெருமான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவர்க்கு ஆணையிட்டு அந்தகனை அழிக்க உத்தரவிட்டார். பைரவர்க்கும், அந்தகனுக்கும் இடையே அதிபயங்கரப் போர் நிலவியது. ஆனால் அசுரனின் சேனைகள் சுக்கிராச்சாரியால் உயிர் பெற்று வந்தன. உடனே சிவபெருமான் சுக்கிரனை விழுங்கினார். அடுத்த நொடி அசுரசேனைகள் அழிந்தன. பைரவர் தனது சூலத்தால் அந்தகனை குத்திச் சிவபெருமானை அடைந்தார். 


இதனால் மனம் மாறிய அந்தகன் தனது அகங்காரமெல்லாம் மறைய சிவபெருமானிடம் தன்னை பூதகணங்களுக்கு தலைவனாக்க வேண்டினார். அவனது ஆசையை நிறைவேற்றினார். சிவபெருமானின் வயிற்றிலிருந்த சுக்கிரன் அவரது சுக்கிலத்துடன் வெளிவந்தான். பின்னர் தேவர்கள் தொல்லையின்றி நிம்மதியுடன் வாழ்ந்திருந்தனர். அந்தகனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் எடுத்த வடிவமே "பைரவமூர்த்தி யாகும்.

(சிவபெருமானைப் போல் ஐந்துதலையுடன் இருந்த நான்முகனின் அகந்தையை அடக்க சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளியெடுத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன)

காசி முதல் பதினாறு பைரவர்


தேய்பிறை அஷ்டமியில் செவ்வரளியால் சகஸ்ரநாமம் தொடர்ந்து ஆறு தேய்பிறைகள் கூற புத்திரபாக்கியம் கிடைக்கும். பன்னிரெண்டு தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் சகஸ்ரநாமம் கூறி ஜென்ம நட்சத்திரர் அர்ச்சித்து பூந்தியை நைவேத்தியமாகக் கொடுக்க சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டிற்க்கு வரும். தேனாபிசேகம் செய்து நெய்விளக்கிட்டு உளுந்தவடை சாற்றி ஜென்ம நட்சத்திரத்தில் வழிபட வியாபாரம் செழிக்கும், மேலும் நாயுருவி இலை அர்ச்சனையும், சுத்த அன்னம் வெண்ணிற பசுவின் பால் கொண்டு சனிதோறும் நைவேத்தியம் கொடுக்க யமபயம் நீங்கி சுகம் உண்டாகும்.

Sunday, 19 July 2015

64 சிவ வடிவங்கள் (37)

 இலகுளேஸ்வர மூர்த்தி




நம்முடைய பூமியைப் போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் அளவிட முடியாத பரந்து விரிந்துள்ள வானில் உள்ளன. இவை அறிவியல் பூர்வமான உண்மையாகும். இதையே ஆன்மிகத்தோடு இணைத்து பார்ப்போம். இவ்வுலகம் எட்டுக்கொண்டது திரசரேணு, திரிசரேணு எட்டுக் கொண்டது லீகை, லீகை எட்டுக் கொண்டது யவை, யவை குறுக்குவாட்டில் எட்டுக் கொண்டது மானங்குலம் மானங்குலம் இருபத்தி நான்கு கொண்டது முழம், முழம் நான்கைக் கொண்டது வில், வில் இரண்டுடையது தண்டம், தண்டம் இரண்டாயிரம் கொண்டது குரோசம், குரோசம் இரண்டுடையது கெவியூதி, அக்குரோசம் நான்கைக் கொண்டது யோசனை, யோசனை நூறு கோடி கொண்டது நிலத்தின் தத்துவத்தின் விரிவாகும்.

பஞ்சபூதங்களைக் கொண்ட ஆயிரமாயிரம் பேரண்டங்கள் உலகில் உள்ளன. பொதுவாக பத்து (புவனங்கள்) உலகங்கள் மேலேயும், பத்து உலகங்கள் கீழேயும் இருக்கும் அதுத்தவிர ஈசானத்தில் பத்தும், வடக்கு, வாயுமூலை, மேற்கு, நிருதிதிக்கிலும், தெற்கிலும், அக்னிமூலையிலும், கிழக்கிலும் முறையே பத்து பத்து உலகங்கள் இருக்கும். இவைத்தவிர எண்ணிலடங்கா உலகங்கள் இருக்கின்றன. அந்த உலகங்கள் ஆயிரக்கணக்கான பேரண்டத்தில் பரவியுள்ளன. 

அதில் நடுநாயகமான சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரது திருமேனியைக் காணக் கண்கள் ஒளியிழக்கின்றன. அவ்வாறான ஒளிவெள்ளத்தின் நடுவே அவர் வீற்றிருக்கும் கோயிலின் விரிவு அநேக கோடியமாகும், அந்தத் திருமேனியின் அளவு அநேக கோடியாகும். அவர் வலப்புறமாக மழுவும், சூலமும், இடப்புறமாக கலசமும் கொண்டு இவ்வுலகிலுள்ள உயிரினங்களின் மும்மலங்களைப் போக்கும் நல் ஞானாசிரியனாக அவர் வீற்றிருக்கிறார். 


இத்தகைய பெருமையுடன் ஒவ்வொரு அண்டத்திலும் ஒருவராக எழுந்தருளி அங்குள்ள உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அருளாட்சி செய்யக்கூடிய மூர்த்தியே "இலகுளேஸ்வர மூர்த்தி யாகும். இவரை தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம் என்ற ஊரில் காணலாம். இறைவன் பெயர் சிவக்கொழுந்தீசர், இறைவி பெயர் பெரிய நாயகி ஆவார். இங்கமைந்துள்ள சூலதீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு அர்ச்சனை செய்ய திருமணத்தடை விலகும். இவர்க்கு மகாவில் வார்ச்சனையும், முக்கனிப்படையல் நைவேத்தியமும் புதன்கிழமைகளில் செய்ய மும்மலம் மறைந்தோடும் பதவியை தக்க வைக்க முடியும்

Saturday, 18 July 2015

64 சிவ வடிவங்கள் (36)

 காமதகன மூர்த்தி


பார்வதிதேவியார் பர்வத மன்னனின் மகளாகி இமயமலையில் சிவபெருமானையே கணவனாக எண்ணி தவத்தில் இருந்தார். இங்கு சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு யோக முறையை விளக்கி அந்நிலையிலேயே இருந்தார். அவரால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே யோகநிலையில் இருந்தன. இதனால் உலக இயக்கம் நின்றது, நான்முகனின் படைப்புத் தொழிலும் நின்றது. 

இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானை பார்க்க அனுமதிக்குமாறு நந்திதேவனை வேண்டினர். நந்திதேவன் மறுத்திடவே அனைவரும் சிவதியானத்தில் ஈடுபட்டனர். உடன் இந்திரன் கனவில் சிவபெருமான் தோன்றி பார்வதியை திருமணம் செய்வோம். எங்கள் மகனால் இத்துயரம் தீரும் என்றுரைத்தார். பின்னர்  இந்திரன் அனைத்து தேவர்குழாமுடன் சென்று நான்முகனிடம் ஆலோசனை கேட்க நான்முகனோ மன்மதன் சிவபெருமான் மீது பாணம் விட்டால் அவரது யோகம் கலையும். உலகம் முன்போலவே இயங்கும் என்று  ஆலோசனைக் கூறினார். இதனால் மன்மதனும் வந்தார். பாணம் விட மறுத்தார். இறுதியில் உலக நன்மைக்காக அந்தக்காரியத்திற்கு ஒத்துக் கொண்டார். யோக நிலையிலுள்ள சிவபெருமானிடம் சென்றார். அவரை மேற்கு வாசல் வழியே நந்திதேவர் உள்ளனுப்பினார் சென்றவுடன் அவர் மீது பாணம் விட, சிவபெருமானின் யோகம் கலைந்தது. அதனால் கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பின்னர் பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி வேண்டினார். அதன்படி மன்மதன் மீண்டும் உயிர்த் தெழுந்தார். உடனே ஒரு நிபந்தனை விதித்தார். ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர்க்கு அரூபமாகவும் இருக்கும்படி நிர்பந்தித்தார். 

மன்மதனை எரித்ததால் சிவபெருமானுக்கு காம தகன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது, இவரை மாயமவரம் அருகே உள்ள குறுக்கையில் காணலாம். இவரை வணங்கினால் அளவுக்கதிகமான காம உணர்வு அடங்கும். சிவத்தில் ஐக்கியமாக விரும்பும் ஆன்மாக்கள் இவரை வணங்க, காமம் தலைதூக்காது. இவர்க்கு தேனாபிசேகமும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடுக்க உடன் பிறந்தோருடைய அன்பு மேலோங்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

Sunday, 12 July 2015

64 சிவ வடிவங்கள் (35)

காலந்தக மூர்த்தி


மிருகண்டு முனிவர் என்பவர் மருத்துவதி என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார். ஆண்டுகள் பலவாகியும் குழந்தையில்லாத காரணத்தால் மிருகண்டு காசி சென்று குழந்தை வேண்டி தவமியற்றத் துவங்கினார். தவத்திற்கு மெச்சி சிவபெருமான் காட்சிக் கொடுத்து என்ன வேண்டும் என்றுக் கேட்டார். குழந்தை வேண்டுமென்றதும் முனிவரே தீயகுணம், உடல் நோய், ஐம்பொறி ஊனம், அறிவின்மை இவற்றுடன் நூறாண்டு வாழும் பிள்ளை வேண்டுமா? அல்லது அழகு, அறிவு, நோயின்மை, எம்மருள் கொண்ட பதினாறு வயது வரை ஆயுள் கொண்ட பிள்ளை வேண்டுமா என கேட்க முனிவரோ பதினாறு வயது வரை ஆயுள் கொண்ட பிள்ளையே வேண்டுமென்றார். உடன் வரம் கொடுத்து மறைந்தார். பின் சிறிது நாளில் ஒரு நல்ல சுபமுகூர்த்த தினத்தில் மருத்துவதி அழகான பிள்ளையைப் பெற்றெடுத்தார். தேவர்கள் பூமாரி பொழிந்து, தேவதுந்துபி இசைத்து வரவேற்றனர். நான்முகன் அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டார்.

மார்க்கண்டேயன் நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளரத்துவங்கினான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்னக்காரணம் என்றுக் கேட்க. பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாககக்க கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகையருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்குக என்று வரமளித்தார். பின் ஊர் திரும்பினார். அங்கும் வழிபாட்டைத் தொடர்ந்தார். இவ்வாறிருக்கும் போது அவனது ஆயுள் முடிவடையும் சமயத்தில் எமதூதன் அழைத்தான். பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக்கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும், எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை அசைக்க கூட முடியவில்லை முடிவாக எமனே வர மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவிக் கொண்டான். உடன் சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்தார். இதனால் எமன் இறந்தான். உடன் பூமியில் மரணம் நிகழாததால் பூமியின் எடைக் கூடிக் கொண்டே சென்றது. பாரம் தாங்காத பூமாதேவி சிவபெருமானை வேண்டினார். உடன் எமன் உயிர்த்தெழுந்தான் மிருகண்டு மகனான மார்க்கண்டேயனுக்கு நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார். 

மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்த கோலமே காலந்தக மூர்த்தி யாகும். அவரை வணங்க நாம் சொல்ல வேண்டிய தலம் திருக்கடவூர் ஆகும். இத்தலம் மாயவரம் அருகேயுள்ளது. எமபயம் நீங்க இத்தல இறைவனை வணங்க வேண்டும். ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் என அனைவரும் எமபயம் நீங்க இங்குள்ள இறைவனை தினமும் வழிபடுவதாக ஐதீகம். இங்கு அறுபது வயதைக் கடந்தோர் சஷ்டியப்த பூர்த்தி விழாவினை இங்கு வந்துக் கொண்டாடுகின்றனர். செந்தாமரை மலர் அர்ச்சனையும், தேங்காய், மஞ்சள், பூ நைவேத்தியமும் வெள்ளிக்கிழமைகளில் கொடுக்க ஆயுள் அதிகரிக்கும். எமபயம் நீங்கும்.

Monday, 6 July 2015

64 சிவ வடிவங்கள் (34)

வீணா தட்சிணாமூர்த்தி



திருக்கையிலையில் பக்தர்களுக்கும், தேவர்களுக்கும் அருள் செய்ய தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளினார். அப்போது நாரதர். சுக்ரமுனிவர்களின் இசைஞானத்தை உணரவும், சாமவேதத்தை இசையுடன் வீணையில் ஏற்றிப்பாடவும் தங்களுக்கு அருள்புரிய வேண்டினார். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வீணையையும், இசைக்கலையைப் பற்றியும் கூறத் தொடங்கினார். அப்போது எந்த வகையான மரத்திலேயே வீணை செய்ய வேண்டும். அதனால் என்னப் பலன், என்றும் எம்மரத்தில் வீணை செய்யக்கூடாது அதனால் என்ன இசைக்குற்றம் ஏற்படுமென்னும் விளக்கிக்கொண்டு வந்தார். அப்போது கொன்றை, கருங்காலி மரங்களால் வீணை செய்ய வேண்டும் என்றார். அவற்றில் இசை இலக்கணம் சம்பந்தப்பட்ட நால்வகை வீணைகளையும் செய்யலாம் என்றார். 

அந்த நால்வகை வீணையாவன பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பனவாகும். இதில் பேரியாழுக்கு 21 நரம்பும், மகரயாழுக்கு 17 நரம்பும், சகோடயாழுக்கு 16 நரம்பும், செங்கோட்டியாழுக்கு 7 நரம்பும் இருக்கவேண்டும். மேலும் இலக்கணப்படி யாழிற்கு பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு வகை இலக்கணப்படியே இசையெழுப்ப வேண்டும். முக்கியமான வீணையுடன் பாடும்போது உடல் குற்றம் இல்லாமலும், பாடலில் குற்றம் இல்லாமலும் இசையில் குற்றம் இல்லாமலும் ஒரு பாடல் அமைய வேண்டும் என்பது மரபு. 

இவ்வாறாக வீணையைப் பற்றியும், இசையைப் பற்றியும், அதன் பாடல்களைப் பற்றியும், அதன் உட்பிரிவுகளைப் பற்றியும் எடுத்துரைத்து விரிவாகக் கூறி அந்த வீணையை தோளின் மீது வைத்து இசையெழுப்பி பாடிக்காட்டினார். இதனைக்கண்ட, கேட்ட அனைவரும் ஆனந்தப்பட்டனர். தங்கள் கண்களையே நம்பமுடியாமல் ஆச்சர்யப்பட்டனர். இவ்வாறு நாரதர், சுகர் பொருட்டு வீணையுடன் காட்சிதருவதால் அவர்க்கு வீணா தட்சிணாமூர்த்தி என்றப் பெயர் உண்டானது.

திருச்சிக்கருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் வீணா தட்சிணாமூர்த்தி இருக்கின்றார். இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக்கிழமைகளில் இவர்க்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

Sunday, 5 July 2015

64 சிவ வடிவங்கள் (33)

யோக தட்சிணாமூர்த்தி


சிவபெருமான் திருக்கையிலையில் தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக்கும் போது நான்முகனின் நான்கு மகன்களான சனகாதி முனிவர்களுக்கு பதி, பசு, பாசம் பற்றி உபதேசித்துக் கொண்டே வந்தார். அப்போது அவர்கள், இறைவா ! எங்கள் மனம் விரிவடைந்துள்ளது, ஆகையால் அவை ஒடுங்கும் யோக மார்க்கங்களை எங்களுக்கு உரைக்கவும் என்று விண்ணப்பித்தனர். உடனே அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த சிவபெருமான் கீழ்கண்டவாறு யோக மார்கங்களை கூறலானார். அவையாவன யோகம் என்பது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கலப்பது. அது எப்படியெனில் வெளிக்காரணத்தை அந்தக்காரணத்தில் அடக்கி மனதை ஆன்மாவில் அடக்கி தூய்மையான ஆன்மாவை பரத்தில் சேர்த்தலாகும். அத்துடன் யோகப்பயிற்சி இருந்தால் மட்டுமே பரம்பொருளை தரிசிக்க முடியும்.

தசவாயுக்களான பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனும் தசவாயுக்களை அடக்குவது யோகமாகாது. யோகத்தை எட்டாகப் பிரிக்கலாம் அவை இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம் இவற்றில் இயமம் என்பது கொல்லாமை, பிறர்பொருளுக்கு ஆசைப்படாமை, நியமம் என்பது தவநிலை, ஆதனம் என்பது சுவந்திகம், கோமுகம், பதுமம், வீரம், பத்திரம், முத்தம், மயூரம், சுகம் என எட்டாகும், பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி, பிரத்தியாகாரம் நம்மைப் பார்ப்பது, தாரணை என்பது ஏதாவது, ஒரு உடலுறுப்பின் மீது சிந்தையை வைப்பது, தியானம் என்பது மனத்தை அடக்குதல், சமாதி என்பது மேற்சொன்னவற்றுடன் பொறுத்தி ஆதார நிலையங்கள் ஆறுடன், நான்கு சக்கரங்களை வியாபித்து அனைத்துமாகிய, சகலமான பரம்பொருளை தியானித்தலே சிவயோகம் என்றழைக்கப்படும் சமாதி நிலையாகும். இவ்வாறு யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு உரைத்ததுடன் தாமே சிறிது நேரம் அந்நிலையில் இருந்து காட்டினார். இதனால் விரிவடைந்த மனம் ஒடுங்கியது. உடனே சனகாதி முனிவர்கள் சிவபெருமான் பாதத்தைத் தொட்டு வணங்கி விடைபெற்றனர். சனகாதி முனிவர்களுக்குப் புரியும்படி யோக முறையை கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே "யோக தட்சிணாமூர்த்தி யாகும்.

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது குறுக்கை. இங்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது. இவர் கிரகங்களுக்கே அதிபதியாவார். இவர் யோக நிலையில் காணப்படுவதால் பெரும்பலம் பொருந்தியவர். வியாழன்தோறும் விரதமிருந்து இவரை வணங்க பிறவித் துன்பம் தீரும். வெண்தாமரை அர்ச்சனையும், கொண்டைக்கடலை (அ) தயிரன்ன நைவேத்தியமும் வியாழன் தோறும் கொடுக்க கட்டுப்பாடாக, ஒழங்காக வாழ்க்கை அமையும். இங்குள்ள மூர்த்திக்கு பச்சைகற்பூர நீரால் அபிசேகம் செய்ய யோக சித்திகள் வாய்க்கப்பெறும்

Wednesday, 1 July 2015

64 சிவ வடிவங்கள் (32)

தட்சிணாமூர்த்தி


சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் செல். பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார்.

இதற்கிடையே நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே ஒரு  முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை நெற்றிக் கண்ணாலே எரித்தார். சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். 

இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று. இவரை தரிசிக்க செல்லவேண்டிய தலம் "ஆலங்குடி யாகும், குடந்தை-நீடாமங்கலம் வழியாக இவ்வூர் உள்ளது. இறைவன் காசியாரணியர். இறைவி உமையம்மையாவார். இங்கு நடைபெறும் குருபெயர்ச்சி விசேசமாகும். சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் இருபத்தி நான்கு நெய் விளக்கு ஏற்ற திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். வெண்தாமரை அர்ச்சனையுமும் தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க நினைவாற்றல் பெருகும்.

இந்த தட்சிணாமூர்த்தி முன் நீர் ஆரத்தி எடுத்து தீபம் ஏற்ற தடைபெற்ற திருமணம் நடைபெறும், புத்திரப் பேறு கிடைக்கும்

Monday, 29 June 2015

64 சிவ வடிவங்கள் (31)

 சண்டேச அனுக்கிரக மூர்த்தி



திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்தான் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. இவர்களது மகனாக விசாரசருமர் என்பவன் இருந்தான். விசாரசருமர் பிறக்கும்போதே முன்ஜென்ம அறிவின் பயனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். ஏழுவயதில் அவருக்கு உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் தானே அனைத்தையும் உணர்ந்து வேதாகம சொற்படி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஐந்தொழில்கள் செய்து எம்மை வழிநடத்த உரியவர் சிவபெருமான் ஒருவரே என தீர்மானமாக நம்பியிருந்தான். அவ்வாறிருக்கையில் அவனுடன் இருக்கும் ஒரு அந்தணச் சிறுவன் பசுவை அடிப்பதைக்கண்டான் விசாரசருமர். உடன் பசு மேய்க்கும் வேலையை அவனே செய்யலானான். கோமாதாவின் அருமை பெருமைகளை உணர்ந்ததால் அத்தொழிலைச் சிறப்பாகச் செய்தான்

சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான். அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தது. இதற்கிடையே அங்குள்ள மண்ணி ஆற்றங்கரையின் மணல்மேட்டில் உள்ள அத்திமரத்தின் கீழே மணலிங்கம் செய்து கோயில், கோபுரம், மதில் போன்றவற்றை மணலாலே அமைத்து சிவபெருமானுக்கு பூஜைசெய்து பாலபிசேகம் செய்து வழிபட்டு வந்தார். இதனையே தினசரி வாடிக்கையாக்கினார். இதனைக் கண்டோர் ஊர் பெரியோரிடம் முறையிட ஊர் பெரியோர் விசாரசருமனின் தந்தையிடம் முறையிட்டனர். விசாரசருமரின் தந்தை இனி தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார், மறுநாள் அதிகாலை விசாரசருமர் ஆற்றங்கரைக்கு சென்று பூஜித்து பாலபிசேகம் செய்துக் கொண்டிருக்கும் போது அவரது தந்தையார் கண்டு விசாரசருமரின் முதுகில் ஓங்கி அடிவைத்தார். அடியின் வலி உணராமல் சிவபூஜையிலேயே விசாரசருமர் ஈடுபட்டிருந்தார் அதிக கோபமுற்ற தந்தையார் பால் குடங்களை உதைத்துத் தள்ளினார். இதன்பின்னே சுயநினைவு வரப்பெற்ற விசாரசருமர் தந்தையென்னும் பாராமல் அங்கிருந்த ஒரு கொம்பை எடுத்தார். அது மழுவாக மாறியது. உடன் தந்தையாரின் காலை வெட்டினார். உடனே தம்பதி சமேதராய் சிவபெருமான் அங்கு காட்சிக்கொடுத்தார். பின் என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் உன்னைத் தலைவாக்கினோம் மேலும் என்னுடைய அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தும் உனக்கே தந்தோம் என்றபடியே தனது சடாமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு சூட்டி அவருக்கு சண்டேச பதவியை அளித்தார். விசாரசருமருக்கு சண்டேச பதவியை அனுகிரகித்ததால் சிவபெருமானுக்கு "சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.

கும்பகோணம் சேய்ஞலூர் ரோட்டைத் தாண்டி அமைந்துள்ள ஊர் "திருவாய்ப்பாடி ஆகும். இவரது பெயர் பாலுகந்தமூர்த்தி, இறைவி பெயர் பெரியநாயகி என்பதாகும். சண்டேசப் பதவியை அளிக்கும் வல்லமை இவர் ஒருவருக்கே உண்டு. சண்டேஸ்வரனை வணங்கினால்தான் சிவ வழிபாடே முழுமையடையும். இவரை வணங்க மனம் ஒருமைப்படும். வில்வார்ச்சனையும் வெண்சாத நைவேத்தியமும் பிரதோஷம், சோமவாரங்களில் கொடுக்க நல்லறிவு, நல்லெண்ணம் வெளிவரும். மேலும் இம்மூர்த்தியை பஞ்சகவ்யம் கொண்டு வழிபட ஆன்மாவானது தூய்மையடையும்.

Friday, 26 June 2015

64 சிவ வடிவங்கள் (30)

சிம்ஹக்ன மூர்த்தி


இரண்ய கசிபு என்னும் அசுரன் சிவபெருமானிடம் அளவில்லா பக்தி கொண்டவன். அவவெனாரு முறை அசுர குருவான சுக்ராச்சாரியாரின் யோசனைப்படி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். தவத்தில் மெச்சிய சிவபெருமான் அவனுக்கு காட்சிக் கொடுத்து "என்ன வரம் வேண்டுமென்று கேட்க அவனோ ஐம்பூதங்களும், கருவி, வானவர், மனிதர், பறவை, விலங்குகள், இரவு, பகல் என மேற்ச் சொன்ன எவற்றினாலும் நான் இறவாதிருக்க வரம் வேண்டும் என்றான். அப்படியே கொடுத்து மறைந்தார். தான்பெற்ற வரத்தினால் மூவுலகினரையும் அச்சுறுத்தினான். தேவகன்னிகளை விசிறி வீசவும், இந்திரன், நான்முகன் போன்றோர் தினசரி வந்து தன்னை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் தன்னைத் தவிர மற்றவர்களை வணங்கக் கூடாது என்றும் ஆணையிட்டான். அவனுக்கு பயந்து அனைவரும் "இரண்யாய நமஹ கூறினர். ஆனால் அவனது மகனோ "ஸ்ரீ நாராயணாய நமஹ என்றான். இதனால் ஆத்திரமடைந்த இரண்யன் பிரகலாதனுக்கு பலவித தொல்லைகளையும், கொலை முயற்சியும் செய்தான். ஒன்றுமே பலிக்கவில்லை. அனைத்திலுமே நாராயணன் காத்தருளினார். மகனான பிரகலாதன் சதாசர்வ காலமும் நாராயணனை பூஜிப்பதால் ஆத்திரம் அடைந்த இரண்யன் ஒருநாள் "எங்கே இருக்கிறான் உன் நாராயணன் ? என்றுக் கேட்டார். இதோ தூணில் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்றான். இதோ இந்தத் தூணில் இருக்கிறாரா உன் நாராயணன் என்றபடியே தூணைப் பிளந்தான். பிளந்த தூணின் உள்ளிருந்து நரசிம்மர் தோன்றினார்.

மாலை நேரத்தில் மனிதனும் அல்லாது, மிருகமும் அல்ல நரசிம்மமாகத் தோன்றி இரண்யனைக் கொன்று அவன் குடலை மாலையாக்கிக் கொண்டார். அவனது இரத்தம் குடித்தார். இதனைக் கண்ட அனைவரும் பயந்தனர். அசுரனின் இரத்தம் குடித்த வெறியால் நரசிம்மர் மனிதர்களையும் உண்ணத் தொடங்கினார். இதனைச் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் இருதலை, இருசிறகுகள், கூர்மையான நகம், எட்டுக்கால்கள், நீண்டவால், பேரிரைச்சலை உண்டுபண்ணியபடி "சரப அவதாரமாக மாறினார். பின் நரசிம்மரை அணுகினார், இடிமுழக்கம் போல் கத்தியபடி நரசிம்மிரின் தலையையும், கைகளயும் துண்டித்து அதன் தோலை உரித்து தன்னுடலில் போர்வையாக அணிந்து கொண்டு கையிலையை அடைந்தார். பின் சிவபெருமானை வணங்கி சாந்தப்பட்ட திருமால் வைகுண்டம் அடைந்தார். இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மத்தின் அகந்தையை அழிக்க சிவபெருமான் கொண்ட காலமே "சிம்ஹக்ன மூர்த்தி யாகும்.

அவரை தரிசிக்க கும்பகோணம் அருகேயுள்ள "திர்புவனம் செல்ல வேண்டும். இங்கேயுள்ள சரபமூர்த்திக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றி சகஸ்ரநாமம் சொல்ல திருமணம் கைகூடிவரும். தடைகள் விலகிடும். அவர் முன்பு சரப யாகம் செய்தால் விலகிடுவர். சென்னையிலுள்ள கோயம்பேட்டிலுள்ள சரப மூர்த்திக் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகுகாலங்களில் இங்குள்ள சரப மூர்த்தியை வழிபட்டால் நினைத்து நடைபெறுகிறது, பதவி உயர்வு கிடைக்கிறது குடும்ப அமைதி பெருகுகிறது. இவர்க்கு திராட்சை ரச அபிசேகம் செய்ய திடவான உடல்வாகு கிடைக்கும். செந்நிற தாமரைமலர் அர்ச்சனையும், பானக நைவேத்தியமும் பிரதோஷம், திங்கற்கிழமையில் கொடுக்க வெற்றி, தடைஅகன்று விடும். சந்தோஷமான அமைதியான குடும்ப வாழ்வு ஏற்படும்.

Thursday, 25 June 2015

64 சிவ வடிவங்கள் (29)

பிட்சாடன மூர்த்தி



தாருகாவனத்து முனிவர்கள் சிவபக்தியை விட யாகமே சிறந்தது என்று மமதையில் எண்ணற்ற யாகங்கள் செய்யலானார்கள். அவர்கள் மமதையை அடக்க சிவபெருமான் எண்ணினான். தன்உடன் திருமாலை அழைத்து முன்னொறு முறை எடுத்த மோகினி உருவத்துடன் வரவேண்டினார். திருமாலும் அக்கணமே மோகினியாக மாறினார். சிவபெருமானும் கபாலமும், சூலமும் கையில் கொண்டு பிட்சாடனராக மாறினார். இருவரும் தாருகாவனம் அடைந்தனர். அவ்வனத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் மோகினியைக் கண்டு ஆசைக் கொண்டு அவரது பின்னாலே அலைந்தனர். இதற்கிடையே சிவபெருமான் முனிபத்தினிகள் வசிக்கும் வீதியில் பிச்சை கேட்கும் பிட்சாடனராக மாறி, ஓசையுடன் பாடியவாறே சென்றார். இவ்வோசையைக் கேட்ட முனிபத்தினிகள் அவரையும், அவரது பாடலையும் கேட்டு மயங்கினார். சிலர் அவர் மேல் காதல் வயப்பட்டனர். இதனால் முனிபத்தினிகளின் களங்கமற்ற கற்பு களங்கமுற்றது. மோகினியால் தவநிலை இழந்த முனிவர்கள் வீடுவர, இங்கே பிட்சாடனரால் நெறிதவறிய தன் மனையை நோக்கிய முனிவர்கள் இதற்கெல்லாம் காரணம் என்னவென்று அறிய விரும்பினார். மேலும் பிட்சாடனரின் பின்னாலே தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்த முனிவர்களின் பத்தினிகள் ஒருவாறு மயக்கம் தெளிந்து கணவனுடன் இணைந்தனர். பின்னர் மோகினியான திருமாலும், பிட்சாடனரான சிவபெருமானும் திருத்தளிச்சேரி எனும் ஊரில் மறைந்தருளினர்.

பின்னர் சிவபெருமானை அழிக்க எண்ணிய முனிவர்கள் அபிசார யாகம் இயற்றி, அதிலிருந்து வெளிவரும் பொருளினால் சிவபெருமானை கொல்ல ஏவினர். ஆனால் அவர் அவற்றையெல்லாம் ஆடையாகவும், ஆபணமாகவும் அணிந்துக் கொண்டார். அதன்பின் இருவரும் கையிலை சென்றார்கள். 

தாருவன முனிவர்களின் தவத்தையும், முனிபத்தினிகளின் கற்பையும் சோதிக்க சிவபெருமான் எடுத்த உருவமே  பிட்சாடன மூர்த்தி யாகும். அவரை தரிசிக்க நாம் வழுவூர் செல்ல வேண்டும் மயிலாடுதுறையருகே உள்ள இவ்வுரிலே தாருகாவனத்து முனிவர்களின் மமதயை அடக்க சிவபெருமான் பிட்சாடனராக எழுந்தருளினார். இவரை வணங்க பேரின்ப வழியையும், விருப்பு வெருப்பற்ற வாழ்க்கையயும் அடையலாம். சந்நியாசிகளும், முனிவர்களும், ரிஷிகளும் இந்தப் பிட்சாடனரை மனப்பூர்வமாக வணங்கினால் சித்திக் கிடைக்கும். மேலும் வில்வார்ச்சனையும், தேங்காய் நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் செய்ய எதிரிகளின் கர்வம் அழியும். யாரையும் வெல்லும் வசியமுண்டாகும். இந்த பிட்சாடனமூர்த்திக்கு அன்னாபிசேகம் செய்ய பேறு பெற்ற பெருவாழ்வு தித்திக்கும்

Wednesday, 24 June 2015

64 சிவ வடிவங்கள் (28)

கேசவார்த்த மூர்த்தி



முன்னொரு காலத்தில் திருமால் சிவபெருமானை நோக்கி தவமியற்றினார். சிவபெருமான் திருமாலின் தவத்தினால் மெச்சி என்ன வரம் வேண்டும் ? என்றுக் கேட்டார். உடன் திருமாலும் தேவர்களும், அசுரர்களும் மயங்கத்தக்க மாயை தனக்கு வேண்டும்மென்றும், தேவர்களும் அழிக்கமுடியாதபடியான வல்லமையும் வேண்டுமென்றார். சிவபெருமான் கேட்ட வரங்களைத் தந்துவிட்டு திருமாலை மாயன் என அழைத்தார். நீயே என் இடபுறமாக இருப்பாய் என்று மறைந்தார். அத்தகைய வரம்பெற்ற திருமாலே பராசக்தியாகவும் பார்வதியாகவும் ஆணுருக் கொள்கையில் திருமாலாகவும், கோபமுற்ற நிலையில் காளியாகவும், போர்க் காலங்களில் துர்க்கையாகவும் விளங்குகிறார். 

ஒருமுறை உமாதேவியார் சிவபெருமானை குறித்து சிறந்த தான சோமவார விரதம் மேற்கொண்டார். பின் விரதம் முடிந்து அன்னதானம் நடைபெறும் போது அவரது தவச் செயலை நேரில் காண சிவபெருமான் வேதியராகவும், அவரருகே பெண்ணுருவில் திருமாலும் மாறி, தவச்சாலைக்கு வந்து விரதத்தில் மகிழ்ந்து இருவரும் சுயரூபம் காட்டினர்.
அதாவது சிவம் வேறு, திருமால் வேறல்ல. திருமாலே சிவசக்தியாகும். ஆண்பாகம் வலதாகவும் பெண்பாகம் இடதாகவும் உள்ளக் காரணத்தால் சிவனிலிருந்து பிரிந்தவரையே நாம் திருமால் என்போம். இத்தகைய சிறப்புப் பெற்ற இருவரையும் நாம் எப்படிப் பார்க்கலாமெனில் வலப்புறம் மான், மழு தாங்கியுள்ளவர் சிவனென்றும், இடபுறமாக சக்கராதாரியாக உள்ளவர் திருமாலென்றும் அவ்விருவரும் இணைந்துள்ள நிலையை நாம் சங்கர நாராயணன் என்றும் கூறுவோம். 

இத்தகைய சிறப்பான கேசவனைப் பாதியாகவும், தான் பாதியாகவும் அமைந்துள்ள திருவுருவத்தையே நாம் கேசவார்த்த மூர்த்தி என்போம். இத்திருவுருவத்தை அரிகரம் என்னும் இடத்தில் காணமுடியும். இங்கு நாம் தரிசிக்கப் போவது சங்கர நாராயணனை. நெல்லை  செல்லும் வழியில் உள்ளது சங்கரன் கோயில். இங்குள்ள இறைவன் சங்கர நாராயணன் இறைவி கோமதி அம்மையார். இங்குள்ள இறைவனை வேண்ட எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும், மேலும் முழுக்குணம் பெற்றதும் பாதிக்கப்பட்ட பகுதியாக கிடைக்கும் அங்கப்பொருட்களை (உதாரணம் கை-கால்) <உண்டியலில் சேர்க்கின்றனர். இந்த இறைவியின் எதிரேயுள்ள கருங்கல் தரையில் ஆறு அங்குல வட்டமுடைய குழி போன்ற அமைப்பு உள்ளது. அதில் அமர்ந்து சிவதியானமோ, தியானமோ செய்ய குண்டலினி பகுதிக்கு ஒருவித ஈர்ப்பு கிடைக்கின்றது. இங்கு புற்றுமண்னே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றது. வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், புதன் அல்லது சோமவாரங்களில் செய்ய மறுபிறவியிலும் மோட்சம் கிட்டும். மேலும் இங்குள்ள தெப்பத்தில் உள்ள மீனிற்கு பொரியும், யானைக்கு வெல்லமும் கொடுத்தல் வேண்டும். உடல்ஊனமுற்ற சாதுக்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு இறைவனை வணங்கினால் கடுமையான நோய் விலகும் என்பது ஐதீகம்

Monday, 22 June 2015

64 சிவ வடிவங்கள் (27)

கங்காள முர்த்தி



ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி.  எனவே அவ்வெலிக்கு திரிலோகமும் ஆட்சி செய்யும் அமைப்பை வழங்கினார் சிவபெருமான்.  அவ்வெலி மாவிலி(மகாபலி) மன்னன் என்ற என்ற பெயருடன் அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியைக் கண்ட தேவர்குலம் மாவிலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் ஆகப்பிறந்தார். மாவிலி அசுரனாக இருந்தாலும் தானதர்மங்களிலும், யாகங்கள் இயற்றுவதிலும் சிறந்தவனாக விளங்கினான். இந்நிலையில் வாமனன் மாவிலி அரண்மனைக்குச் சென்று மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமாலே எனவே தானம்தர ஒப்புக்கொள்ள வேண்டாமென அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தடுத்தார். இருப்பினும் கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற மாவிலி தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறுக் கூறினான். 

அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்தில் அமிழ்ந்தான். மாவிலியை அழித்த திருமால் மிக்க கர்வம் கொண்டு மனிதர்களையும், தேவர்களையும் வம்பிற்கிழுத்தார். இதனால் பதற்றமடைந்த தேவர்குலம் கையிலை மலைக்கு சென்று நந்திதேவரின் அனுமதியுடன் சிவபெருமானை சந்தித்து விவரம் கூறினர். சிவபெருமான் வாமனரை சந்தித்து அமைதி கொள்ள வேண்டினார் ஆனால் கர்வமடங்காத திருமாலுக்கு பாடம்புகட்ட எண்ணினார். தன் திருக்கை வச்சிரதண்டம் எடுத்து வாமனன் மார்பில் அடித்தார் வாமனன் நிலம் வீழ்ந்தார். உடன் அவனது தோலை உறித்து மேல் ஆடையாக்கி,முதுகெலும்பினை பிடுங்கி தண்டாக கையில் தரித்துக் கொண்டு தேவர் துயர் துடைத்தார். கர்வம் ஒழிந்த திருமால் சிவபெருமானிடம் வாமன அவதாரத்தின் நோக்கம் பற்றிச் சொல்லி மன்னிப்புக் கேட்டு வைகுண்டம் சென்றார். பின்னர் மாவிலி மன்னனும் மோட்சமடைந்தார். சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பை கையில் தண்டாக மாற்றிக் கொண்ட கோலமே கங்காள மூர்த்தி என்றழைக்கப்படுகிறது (கங்காளம் - எலும்பு).

சீர்காழியில் கோயில் கொண்டுள்ள சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். இறைவி பெயர் பெரியநாயகி திருநிலைநாயகியாகும். இங்குள்ள சுகாசனமூர்த்தியை வணங்கி அர்ச்சித்தால் வியாழன் தொடர்புடைய தோஷங்களும் தீரும். தொழில் வளர்ச்சி பெருகும். நல்ல நிர்வாகத்திறமை வெளிப்படும். இவருக்கு நந்தியவர்த்த அர்ச்சனையும், சித்திரான்ன நைவேத்தியமும் பௌர்ணமி சோம வாரங்களில் கொடுக்க கேது தோஷம் தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் இங்குள்ள மூர்த்திக்கு தர்பை நீரால் அபிசேகம் செய்தால் யோக சித்தி கிடைக்கும்.

Sunday, 21 June 2015

64 சிவ வடிவங்கள் ( 26)

பாசுபத மூர்த்தி



பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன் என் மகனைக் கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன் அல்லவெனில் உயிர் மாய்ப்பேன் என சபதம் செய்தான். அப்போது மைத்துனனும், தேரோட்டியும், தோழனுமான கண்ணன் அவனைத் தனியாக அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ச்சுனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அவனும் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ணமாட்டேன் என்றான். கண்ணன் இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்றான். அர்ச்சுனன்னும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான். அவனது கனவில் கண்ணன் வந்தான், வந்து மைத்துனா ! சிந்து மன்னனை அழிக்க நாம் கையிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விட வேண்டும் என்றான். இருவரும் கையிலை சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ச்சுனன் அர்ச்சித்த மலர்கள் இருந்தன. இதனைக் கண்ட அர்ச்சுனன் மகிழ்ந்தான். பின்னர் சிவபெருமான் தடாகத்திலிருந்து எதிரியை அழிக்க வல்ல பாசுபதத்தை கொடுத்து (முஷ்டி நிலை என்பது நினைவாலும் மறவாத தன்மை) இருவரும் சிவபெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர்.

சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார். உடன் இருவரும் சிவபெருமானை வலம் வந்து தங்கள் நினைவுலகம் வந்து சேர்ந்தனர். அர்ச்சுனன் இவ்வாறு கனவு கண்டு உடன் கண் விழித்துப் பார்க்கையில் தன்னுடைய அம்பறாத்தாணியில் புது வகையான அம்பு அதாவது பாசுபதம் இருப்பதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டுமொரு முறை சிவபெருமானையும், கண்ணனையும் வணங்கினான். அர்ச்சுனனும் அன்றே சிவபெருமான் கொடுத்த பாசுபதத்தினால் சயந்திரனைக் கொன்று சபதத்தை நிறைவேற்றினான்.

 கண்ணனும், அர்ச்சுனனும் வேண்டிய வண்ணம் பாசுபதத்தை அருளிய நிலையிலுள்ள மூர்த்தமே பாசுபத மூர்த்தி யாகும். குடவாசல் அருகே உள்ளது கொள்ளம்புதூர். இங்குள்ள இறைவன் பெயர் வில்வவனநாதர், இறைவி பெயர் சௌந்தர நாயகி என்பதாகும். இத்தல இறைவனை நாள்தோறும் வணங்கினால் பிறவிப் பெருங்கடல் நிந்தி இறைவனை அடையலாம்.சிவப்பு நிற மலர் அர்ச்சனையும், மஞ்சளன்ன நைவேத்தியமும், வியாழன், செவ்வாய் கிழமைகளில் கொடுக்க எதிரி நீங்குவர், கடன் தொல்லைத் தீரும். மேலும் இங்குள்ள இறைவனை கும்பநீரால் அபிஷேகம் செய்ய பிறவிப் பயன் எய்துவர்.

Saturday, 20 June 2015

64 சிவ வடிவங்கள் (25)


சார்த்தூலஹர மூர்த்தி



தாருவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களை மோகினி அவதாரமெடுத்த திருமால் சோதித்தார். அம்முனிவர்களின் ரிஷிபத்தினிகளை பிட்சாடன அவதாரமெடுத்து சிவபெருமான் சோதித்தார். இதனையெல்லாம் ஞானதிருஷ்டியில் கண்ட முனிவர்கள் வேள்வியால் சிவபெருமானை அழிக்கமுடிவு செய்தனர். எனவே பிறர்க்கு தீங்கு செய்யக்கூடிய அபிசார ஹோமம் வார்த்தனர். அதிலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி வந்தது. அதனைக் கொண்டு சிவபெருமானிடம் ஏவினர். அதனை அடக்கிய சிவபெருமான் அதனைக் கொன்று தோலினை ஆடையாக்கினார். மீண்டும் எவற்றையும் எதிர்க்கும் இணையில்லா மழு எனும் ஆயுதத்தை ஏவினர். அதனை சிவபெருமான் தனது படையாக மாற்றினார். பின் மான் வான் மார்க்கமாக உலகமே அச்சுறுத்தும்படி வந்தது. அதைத்தனது இடக்கரத்தில் ஏந்தினார். பின் நாகம் வந்தது அதனை ஆபரணமாக்கி அணிந்துக் கொண்டார். பின் அடக்கமுடியாத பூதகணங்களை ஏவினர். அவையும் சிவபெருமானின் படைப்பரிவாரமாகின. பின்னர் வெண்ணிற மண்டையோடு உலகமே அதிரும்படி வந்தது. அதை அடக்கி தன் தலையில் அணிந்தார்.

பின்னர் கர்ணகடூர ஓசையுடன் துடி (உடுக்கை) அனுப்பினர். அதனை தனதாக்கினார். பின் முயலகனை ஏவினர். அதனைக்கண்ட சிவபெருமான் நெருப்பைக் கையில் ஏந்தியபடி முயலகனைத் தன் காலினால் நிலத்தில் தள்ளி அதன் முதுகில் ஏறி நின்றார். இனியும் சிவபெருமானை ஒன்றும் செய்ய இயலாது என்<றுணர்ந்த முனிவர்கள் திகைத்தனர். முண்டகன் அசைந்ததால் சிவபெருமான் நடனம் ஆட ஆரம்பித்தார். இதனைக் கண்ட முனிவர்கள் அவரைச் சரணடைந்தனர். சிவபெருமான் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி ஆசி கூறி அனுப்பினார். பின் அவரவர் இருப்பிடம் திரும்பினர். 

முனிவர் ஏவிய புலித்தோலை ஆடையாகக் கொண்ட கோலத்தை நாம் சார்த்தூலஹர மூர்த்தி என்கிறோம். மாயவரம் அருகே அமைந்த வழுவூரில் தான் தாருவனத்து முனிவர்கள் ஏவிய புலியை அடக்க இங்கு சிவபெருமான் தோன்றினார். இங்குள்ள மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் உள்ளது. அதற்கு சந்தன காப்பிட்டு வழிபட பில்லி, சூனிய செய்வினை முறியும். ஏழு பிரதோஷம் இறைவனுக்கு அபிசேக ஆராதனை செய்ய இழந்த சொத்துக்கள் மீண்டும் கைவரும். தும்பை, வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் திங்கள், வியாழக் கிழமைகளில் செய்ய மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இம்மூர்த்திக்கு ருத்திராட்ச அபிசேகம் செய்ய செய்வினை அக<லும் முடியும்.

Wednesday, 17 June 2015

64 சிவ வடிவங்கள் (24)

 ஜ்வராபக்ன மூர்த்தி




மாபலி மன்னனின் மகன் வாணாசுரன். அவனுக்கு  ஆயிரம் கைகள் உண்டு. அவனது மனைவி   சுப்ரதீகை. அவன் நர்மதை  நதியோரத்தில்  ஒரு சிவலிங்கம் அமைத்து  அதற்கு தினமும்  ஆயிரம் முறை  அர்ச்சனை செய்து  வந்தான். சிவபெருமான் காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு உலகம் முழுவதும் அரசாட்சி செய்யவும், நெருப்பினால் ஆன மதில் சுவரும், அழிவற்ற நிலையும், தேவர் அடித்தாமரை  அன்பும் வேண்டுமெனக் கேட்டான்.  அதன்படியே கொடுத்தார். இதனால் உலகம் முழுவதையும் தன் வசம் கொண்டான். மீண்டுமொருமுறை சிவபெருமானை தரிசிக்க விரும்பி வெள்ளிமலை அடைந்தான்.  அங்கு  ஆயுரம் கைகளிலும் குடமுழா வாசித்தான். மீண்டும்  சிவபெருமான்  என்ன வரம் வேண்டும் என்று கேட்டதிற்கு   இறைவா தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் எனது சோணிதபுரத்தில் வசிக்க வேண்டும் என்றுக் கேட்டான்.  பின் சிவபெருமான்  குடும்ப சமேதராய் அவனது மாளிகையிலேயே  வாழ்ந்து வந்தார். இந்நிலையில்  வாணாசுரன் தேவர் உலகத்தினர் அனைவரையும் போருக்கு  இழுத்து தோற்கடித்ததால்  அனைவரும் ஓடி விட்டனர். எøவே தன்னுடன்  போர்புரியும் படி சிவனை அழைத்தான் . சிவனோ எனக்கு பதிலாக கண்ணன் வருவான் என்றார். கண்ணன் எப்பொழுது வருவான்? என்று கேட்டார். சிவனும் உன் மகள் கண்ணன் மகனை விரும்புவாள்  அந்த செய்தி கிடைக்கும் போது வருவான் என்றார். அதன்படி நடைபெற்றது. 

வாணாசுரனின் மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தக்கும் காதல் ஏற்பட்டது. இதனையறிந்த கண்ணன் வாணாசுரனுடன் போர்புரிய வந்தான். முதலில் உள்ள வாசலில் விநாயகனை வணங்கினான்.  இரண்டாம் வாசலில் முருகனை வணங்கினான். மூன்றாம் வாசலில் உமாதேவியரிடம் ஆசி வாங்கி உள் சென்றான். அங்கே நான்காவது  வாசலில் சிவபெருமானை கண்டான். உடன் சிவபெருமான் சண்டைக்கு கண்ணனை அழைத்தார்.
கண்ணன் பின் வாங்கினான். இருப்பினும் சிவபெருமான் தேற்றி, வாணாசுரனிடம் நடைபெறும் சண்டையில் நீயே வெல்வாய், அதற்கு முன் எண்ணிடம் போர் புரி என்ற படியே இருவருக்கும் போர் நடைபெற்றுக் கொண்டே யிருந்தது.  எத்தனைக் காலமேன யாராலும் சொல்ல முடியாத படி நீண்டது. முடிவில்  சிவபெருமான் ஒதுங்க போர்  நின்றது. 

பின் வாணாசுரனுடன் படு பயங்கரப் போர் நடைப்பெற்றது. இறுதியில்  அவனது கரங்கள் ஒவ்வொன்றும் துண்டானது. சிவனை தொழுத கைகள் மட்டும் வெட்டாமல் விடப்பட்டது. மனமாறிய வாணாசுரன்  மன்னிப்பு வேண்ட, மன்னிக்கப்பட்டு  மறுபடியும் அவனது கரங்கள் இணைந்தன. அவன் மறுபடியும் குடமுழா வாசிக்க பணியமர்த்தப் பட்டான். அவனது மகள் உஷைக்கும், கண்ணன் மகன் அநிருத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. கண்ணன் - சிவபெருமான் இடையே நடைபெற்ற போரில் தொடுத்த  சீதள சுரத்தை, சிவபெருமான் விட்ட உஷ்ண சுரமானது  ஒரு கணத்தில் வென்றது. அது மூன்று சிரம், நான்கு கரம், ஒன்பது விழிகள், மூன்று  கால்களுடன் இருந்தது. 

தீராத  சுரம் கண்டோர் இந்த வடிவை வணங்க சுரம் குறையும். இவ்வுருவமே ஜ்வராபக்ன மூர்த்தி யாகும்.  அவரை  நாகபட்டிணம் அருகேயுள்ள சாட்டியகுடியில் காணலாம்.  வேதநாயகி இறைவி திருநாமமாகும். வெப்ப நோய்க்குரிய தேவதை  ஜ்வர தேவர்  ஆவார்.  இங்குள்ள அவரை வணங்க  வெப்ப நோயின்  தீவிரம் குறையும். வெள்ளை அல்லி அர்ச்சனையும்,  சுக்கு கசாய நைவேத்தியமும்  புதன் சோம வாரங்களில் கொடுக்க நோய் தீரும். மேலும் இறைவனுக்கு  பசுந்தயிர்  அபிசேகம் செய்ய  சுரம் குறையும்

Monday, 15 June 2015

64 சிவ வடிவங்கள் (23)

 கஜயுக்த மூர்த்தி




கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் ஏற்றவன். அவன் மேருமலையின் மேல் நான்முகனை நினைத்து கடும்தவம் மேற்க்கொண்டான்.  உடன் நான்முகன் தோன்றினான் கயாசுரன் யாராலும்  அழிவில்லா  நிலையும் எதிலும்  வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும்  எதிர்ப்பாயானால் நீ இறப்பாய்  என்ற கடுமையான தண்டனையும் கிடைத்தது. அவன் தனதுவேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான். 

இந்திரனும் அவனிடம்  போரிட முடியாமல் தோற்றான்.  உடன்  அவனது வாகனமான ஐராவத்தின் வாலைப் பிடித்திழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான்.  பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அவரைத் தேடி காசிக்கு சென்றனர். அங்கே யொரு ஆலயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடன் வீற்றிருந்தார்.  வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான்  முன்  இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் வாங்கிய தயாசுரன்  இங்கு வந்து கொண்டுள்ளான்.  அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும் என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதது சிவபெருமான் என்பதை  அக்கணத்தில்  மறந்தான். ஆலயவாசல் முன் நின்று  அனைவரும் பயப்படும் படியாக  கர்ண கொடுரமாக சத்தமிட்டான்.  இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே  தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார். அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீ சுவாலைகள் தெரித்தது.

கயாசுரனை தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது  தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே  தனது நகங்களால்  பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச்சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார்.  அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்த மடைந்தார். கயாசுரனின் தொல்லை நீக்கப் பெற்றோர் நிம்மதியுடன் தங்களது இருப்பிடம் சென்றனர். 

கஜாசுரனுடன் சண்டையிட்டு  வென்றதால்  அவரது பெயர்  அவரது பெயர்  கஜயுக்த மூர்த்தி யாகும்.   அவரை தரிசிக்க திருவழுவூர் செல்ல வேண்டும்.  இங்கே  தாரகாபுரத்து  முனிவர்கள்  யாகத்தில் தோன்றிய  யானையைச்  சிவனாரே  அழிக்க ஏவினார். சிவபெருமான் இதனால் அணிமாசித்தி மூலம் யானையின் உடலில் சென்று, பின் உடலைக் கிழித்தப் படி வெளி வந்தார்.  எனவே அவரை  கஜசம்கார மூர்த்தி என்றும்  அழைப்போம். இங்குள்ள கஜசம்ஹார மூர்த்திக்கு  அபிசேக ஆராதனை செய்ய  சனீஸ்வர தோஷம் விலகும். ஏழரை சனியின்  கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 12 அமாவாசை  காலையில் விஸ்வ ரூப தரிசனம் பார்த்தால்  குழந்தை  பாக்கியம் கிட்டும். அருகம்புல் அர்ச்சனையும், பாயாச நைவேத்தியமும் சோம வாரங்களில்  கொடுக்க   எதிரி தொல்லை தீரும். கஜசம்கார மூர்த்திக்கு  எழுமிச்சை சாறு அபிசேகம் செய்தால் மரண பயம் தீரும்.

Sunday, 14 June 2015

64 சிவ வடிவங்கள் (22)


அர்த்த நாரீஸ்வர மூர்த்தி


திருக்கைலையில் சிவபெருமானை தரிசிக்க முனிவர்கள் ,கந்தருவர்கள் , ரிஷிகள் , இந்திரன் என அனைத்து தேவருலகத்தினரும் திரண்டிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார்.  அனைவரும் பார்வதி தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர்.  பின்னர் வந்த முனிகுமாரர்களில்  ஒருவரான பிருங்கி முனிவர் பார்வதி தேவியை சட்டைச் செய்யாமல்   சிவபெருமானை மட்டுமே வணங்கிய படிச் சென்றார். இதனைக் கண்ணுற்ற பார்வதிதேவி  அவரது உடலிலுள்ள சதையை (சக்தியை ) தனது மூச்சுக் காற்றால்   இழுத்துக் கொண்டார்.  இதனையும் சட்டை செய்யாத பிருங்கி முனிவர் எழும்பும் தோலுமாகவே சிவபெருமானை துதித்தார்.

 சிவபெருமான் தன்னை மட்டும் வணங்கியதால்  பார்வதிதேவியின் திருவிளையாடல் என்பதை புரிந்து மேலும் ஒரு காலை முனிவருக்கு வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி தான் தவமியற்றப் போவதாகக் கூறி கைலாயத்தை விட்டு நீங்கி வினாயகன், முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் மீது நின்றவாறு தவம் இயற்றினார். கடுமையான உறுதியான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் தனது படைபரிவாரங்களுடன் தேவி தவமியற்றும் இடத்திற்கு வந்தார்.  உடன் அவர் தேவி  உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். உடன் தேவி இறைவா   நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இருப்பதால் தானே இந்தப் பிரச்சனை. எனவே தங்களது இடபாகமாக  நானிருக்கும்படியான வரத்தைத் தாருங்கள் என்றார்.

சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவியை ஏந்தினார். வலப்பக்கம் சிவனுமாக, இடப்பக்கம் பார்வதியாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தி யாகும்.  

அவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் திருச்செங்கோடாகும். ஈரோடு  அருகேயுள்ள இத்தலம்  சிவபெருமானுடையது என்றாலும் இளைய பிள்ளையாரான முருகனுக்கு உகந்தது ஆகும். இங்குள்ள இறைவன் பெயர்  அர்த்த நாரீஸ்வரர், இறைவி பெயர் பாகம்பிரியாள் என்பதாகும்.  ஆணாகவும், பெண்ணாகவும் இங்குள்ள இறைவன் காட்சியளிக்கிறார். கணவன் - மணைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்  கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்த மூர்த்தியை வணங்கினால்  கைகூடும். வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் கொடுக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு  பசும்பால்  அபிசேகம் செய்தால்  குடும்பம் ஒற்றுமையுடன் காணப்படும்.

Saturday, 13 June 2015

64 சிவ வடிவங்கள் (21)

 கல்யாண சுந்தர மூர்த்தி




திருக்கைலையில்  அனைத்து  தேவர்குழாமுடன்  சிவபெருமான்  வீற்றிருக்கையில்  பார்வதி  தேவியார் எழுந்து இறைமுன்  சென்று  தக்கன்  மகளால்  தாட்சாயிணி  என்ற பெயர்  பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார்.  உடன்  சிவபெருமானும்  பார்வதி பர்வத மன்னன்  உன்னை  மகளாக அடைய  தவம்  இயற்றுகிறான். நீ அவரிடம்  குழந்தையாக  பிறப்பாயாக. பிறகு உன்னை நான் மணமுடிப்பேன் என்றார். அதன்படி பர்வத மன்னரிடம் மூன்று  வயதுள்ள குழந்தையாக  வந்து சேர்ந்தார். அக்குழந்தையை  அவர்கள் சீராட்டி  வளர்த்தனர். பார்வதிதேவி   அருகில் இல்லாததால்  சிவபெருமான்  யோகத்தில்  இருந்தார். அதனால் உலக இயக்கம் ஸ்தம்பித்தது. உடன் தேவர்களின்  ஆலோசனைப்படி  மன்மதன்  சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க  பாணம் விட்டார். இதனால் கோபமுற்ற  சிவபெருமான்  அவரை நெற்றிக் கண்ணால் எரித்தார். இதனால் கவலையுற்ற  ரதி சிவனிடம்  சரணடைந்தார். அவரும் பொருத்திருக்கச் சொன்னார்.

இதற்கிடையே பர்வத ராஜனிடம் வளரும் பார்வதிதேவி சிவனை மணாளனாக  அடைய வேண்டித் தவமிருந்தார். பார்வதி முன் அந்தணராகத்      தோன்றி  தன்னை மணம் புரியும் படி வேண்டினார். பார்வதி அதை மறுத்து  சிவபெருமானை  மணம் செய்யவே தான் தவமிருப்பதாகக் கூறினார். உடன் அந்தண வேடம் கலைந்து இடபத்துடன் சிவபெருமான் காட்சிக்கொடுத்தார். விரைவில்  வந்து மணம் புரிவேன் என்று கூறி மறைந்தார்.  பார்வதி தேவி தன் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். அங்கே சிவபெருமான் சப்தரிஷிகளிடம்  தனக்கு மலையரசன் மகளை மணம் பேசச் சொன்னார்.  இருவீட்டாரும் பேசி திருமணத்திற்கு நாள் குறித்தனர். பங்குனி உத்திர தினம் மணநாளாக குறிக்கப்பட்டது. தேவருலகத்தினர் படைசூழ சிவபெருமான் பர்வதம் விரைந்தார். அனைவரும் அங்கே குவிந்ததால் வடதிசை தாழ்ந்தது. உடன் சிவபெருமான்  அகத்திய முனிவரை தென்திசை சென்று நிற்கும் படி வேண்டினார். அவர் தயங்கவும் உமக்கு எம் திருமணக்கோலத்தை காட்டுவோம் எனவே தென்திசை செல்க என்று பணிந்தார். அகத்தியரும் அவ்வாறு சென்றார். உடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பொழுது ரதி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டினார்.

சிவபெருமானும் அவ்வாறே மன்மதனை உயிர்ப்பித்தார். பின் ரதியின் கண்களுக்கு மட்டும் உருவத்துடனும், மற்றொர்க்கு அருபமாகவும்  காட்சியளிக்கும் படி வேண்டினார். பின் அவரவர், அவரவர் இருப்பிடம் திரும்பினர்.

பார்வதி தேவியை திருமணம் செய்ய சிவபெருமான் எடுத்த கோலமே  கல்யாண சுந்தர மூர்த்தியாகும்.  அவரை தரிசிக்க தாம் செல்ல வேண்டிய தலம் திருவாரூர் அருகேயுள்ள திருவீழிமலையாகும். இங்கு மூலவர் பெயர்  விழியழகர், இறைவி பெயர்  சுந்தர குஜாம்பிகை யாகும். இங்கு உற்சவ மூர்த்தியாக  கல்யாண சுந்தரர் காட்சியளிக்கிறார்.  இங்குள்ள கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்த  மாங்கல்யத்தை தானமாகப் பெற, கொடுக்க திருமணம் தங்குதடையின்றி  நடைபெறும்.  மேலும் பிரதோஷ தரிசனமும் சிறப்பானதாகும். மல்லிகைப்பூ  அர்ச்சனையும், சர்க்ககரைப் பொங்கல் நைவேத்தியமும்  திங்கள், குருவாரங்களில் கொடுக்க திருமணத்தடை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். மேலுமொரு சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு ரோஜாமாலை அணிவித்துப் பூச்செண்டு கொடுத்தால் கல்யாணம் இளம்பெண்களுக்கு கூடி வரும்.  இங்குள்ள மூலவரின் பின் புறம் சிவபெருமான்  உமை திருமணக்கோலம் உள்ளது.

Friday, 12 June 2015

64 சிவ வடிவங்கள் (20)

திரிபுராந்தக மூர்த்தி




தாரகாசுரனின் மூன்று மகன்களும் நான்முகனை நோக்கி நெடுங்காலம் தவமியற்றி வந்தனர். நான்முகனும் காட்சிக் கொடுத்தார் உடன் அவர்கள் என்றும்  அழியாத வரம் வேண்டும் என்றனர். உடன் நான்முகனோ அது முடியாத காரியம்  அனைவரும் அனைவரும் ஒரு நாள் அழிந்தே  தீருவோம்.  எனவே மோட்சமாவது  கேளுங்கள் கிடைக்கும். இவ்வுலகில் என்றும் அழியாமல் இருப்பவர் சிவபெருமான் மட்டுமே என்றார். உடனே அம்மூவரும்  அப்படியானால்  பொன், வெள்ளி, இரும்பினால்  ஆன சுவருடைய  முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும்.  அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர்.  நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் சுயரூபத்தை சிவனிடம் காட்டாமல்  மற்ற அனைவரிடத்திலும்  காட்டினர். தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல்  திருமாலிடமும், இந்திரனிடமும் முறையிட, அவர்கள் அசுரர்களிடம்  தோற்று திரும்பினர். பின்னர் சிவனை நோக்கி தவமிருந்தனர். சிவபெருமான் அவர்கள்  தமது அடியார்  எனவேக் கொல்ல முடியாது என்றார்.  மீண்டும் கடுமையான தவத்தை  திருமால், இந்திரன், நரதர் மேற்க்கொண்டனர்.  உடன் சிவபெருமான்  அப்படியானால்  தேர் முதலான பேர் கருவிகளைத் தயார் செய்யும் படி தேவர்களிடம் கூறினார். 

தேவர்களும் அவ்வாறே தயார் செய்தனர்.  தேரில் மந்திர மலையை அச்சாகவும்,  சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி  உடன் வர தேர் தயாரானது. சிவபெருமான்  பார்வதியுடன்  இடபவாகணத்தில்  இருந்து தேரில் கால் எடுத்து வைத்தவுடன்  தேரின் அச்சு முறிந்தது. உடன் இடபமாக மாறி திருமால் தேரைத் தாங்கினார்.  ஆனாலும் தேர் மேலும் சாய அனைவரும்  முதற்கடவுளை வேண்ட,  தேர் பழைய படி சரியானது. பின் தேவகணங்கள்  படைசூழ, இந்திரன், திருமால், முருகன்,  வினாயகன் என அனைவரும் தங்களது வாகனம் ஏறி  முடிவில் அனைவரின்  எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை  அம்பாகக் கொண்டு  நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும்  பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார்.  முப்புறங்களும்  எரிந்து சாம்பலாயின.
உடன் அசுரர்கள் மூவரும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க. அவரும்  அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார். 

தேவர்களின்  துயர்துடைத்து முப்புரங்களையும் எரித்ததால்  சிவபெருமானுக்கு  திரிபு ராந்தக மூர்த்தி  என்னும் பெயர் ஏற்பட்டது.  

இவரை தரிசிக்க நாம் செல்ல வேணடிய தலம் கடலூரில் உள்ள  திருஅதிகையாகும். இங்குள்ள  இறைவன் பெயர் திரிபுராந்தக மூர்த்தி, அதிகைநாதர் என்பதும், இறைவி பெயர்  திரிபுரசுந்தரியாகும். இவர்க்கு கெடில  நதியால்     அபிசேகமும்  வில்வார்ச்சனையும் செய்ய பகைவர் பகை ஒழிந்து  நண்பராவார்கள். சூலை நோய் இருப்பின்  இந்த  சுவாமியை  வழிபட  நோய் குறைந்து  உடல் நலம் சீராகும். மேலும் இங்குள்ள  சிவபெருமானுக்கு  திருமஞ்சனத்தூள்  அபிசேகம்  செய்ய  எவ்வகை  நோயும் குணமடையும் என்பது  ஐதீகம்

Thursday, 11 June 2015

64 சிவ வடிவங்கள் (19)


கங்கா விசர்ஜன மூர்த்தி




சகரன் எனும் அரசன் அயோத்தி நகரை ஆண்டுவந்தான். அவன் அஸ்வமேத யாகம் செய்ய ஒரு  குதிரையைக் கொணர்ந்தான். அக்குதிரை  இருந்தால்  தானே யாகம் நடைபெறும் அதைத் தடுக்க வேண்டி குதிரையை பாதாளத்தில் கபில முனிவர் அருகே கட்டி வைத்தான்.  அயோத்தி மன்னன் குதிரையைத்தேடி கொண்டுவரும் படி தமது அறுபதினாயிரம் மக்களையும் பணிந்தார். பாதாளத்தில் முனிவர் அருகே குதிரைக் கண்ட அவர்கள்  முனிவரே  கள்வன் என முடிவு கட்டினர். உடன் முனிவர்  கண்விழிக்க, அனைவரும் சாம்பலானாகள். இச் செய்தி கேள்விப்பட்ட மன்னன் தன் மகன் அஞ்சுமானை அனுப்பினார். அஞ்சுமானும் கபிலரிடம் சென்று உண்மையைக் கூறி குதிரையை மீட்டு தன் தந்தையின் யாகம் நிøவேற உதவினான்.  அவனது வம்சாவளியிலே வந்தவனே பகிரதன் ஆவான். அவன் தனது முன்னோர்க்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் தோன்றி கங்கையால் உன் முன்னோர்கள்  மோட்சமடைவர் எவனே  சிவனை நோக்கி தவமிக்க சொல்லி மறைந்தார். சிவனை நோக்கி தவமிருந்தான் பகிரதன்.

சிவபெருமான் கேட்ட வரம் கொடுத்தார். பின் கங்கையை நோக்கி தவமிருந்தான். கங்கையோ தன்னை அடக்க சிவபெருமானால் மட்டுமே முடியும் எனவே மறுபடியும் சிவனை நோக்கி தவமியற்றும் படி கூறினார். மறுபடியும் சிவன் கேட்ட வரம் கொடுத்தார், உடன் கங்கை வந்தார். சிவபெருமான் அவரை  அடக்கும் பொருட்டு தனது தலை முடியில்  அணிந்தார். இதனையறியா பகிரதன் பதறினார்.  பின் சிவபெருமான் தன் தலை முடியில் இருந்த கங்கையில் இருந்து சிலதுளிகள் பகிரதன் கைகளில் விட்டார். அந்த சில துளிகளும்  வேகத்துடன் வந்து ஐந்து முனிவர்கள் இயற்றிய யாகத்தை அழித்தது, அதனால் அம்முனிவர்கள்  கங்கையை தம் உள்ளங்கையில் வாங்கி உட்கொண்டனர்.  பகிரதன் கங்கையைக் காணாது திகைத்தான். பின் முனிவர்களை வணங்கி நடந்ததைச் சொல்லி கங்கையைத் திருப்பிதர வேண்டினான். அம்முனிவர்களும் இசைந்து தம் செவி வழியாக விட்டனர். அதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் ஏற்பட்டது. பகிரதன்  கங்கையை  தம் முன்னோர்களின் சாம்பல் மீது தெளிக்க  அவர்கள் சொர்க்கம் அடைந்தனர்.

பகிரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. கங்கையை தனது சடையில் ஏற்று வழிபாட்டிற்கே சிறு துளி  கொடுத்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு  கங்கா விசர்ஜன மூர்த்தி  என்ற பெயர்  ஏற்பட்டது.  

கங்கா விசர்ஜன மூர்த்தியை தரிசிக்க கேதார் நாத் செல்ல வேண்டும். ஆறு மாத காலம் கோயிலில்  வழிபாடுகள் நடைபெறும்.   பனிமழையால்  ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும்.  உமை  சிவனிடம் இடபாகம் பெற்ற தலமே  கோதார்நாத்  ஆகும்.  இங்கு கோயில் கொண்டுள்ள கோதாரேஸ்வரரை வணங்கி  அங்குள்ள  புனித நீரை வீட்டில் நடைபெறும்  சுபகாரியங்களுக்கு   பயன்படுத்தினால்  சுபமாகும். வெண்தாமரை  அர்ச்சனையும்,  எள்ளோதரை நைவேத்தியமும்  அமாவாசை, திங்கள் கிழமைகளில்  செய்தோமானால்  பிதுர் தோஷம்  சரியாகும். அவர்கள் சொர்க்கம் செல்வர்.  மேலும் இங்கிருந்து கொண்டு செல்லும் நீரை வெள்ளிக்கலசத்தில்  வைத்து பூஜிக்க குபேர சம்பத்து கிட்டும் என்பது ஐதீகம்.